பதிவு செய்த நாள்
11
டிச
2020
03:12
சென்னை: ராமர் கோவில் கட்டுமான, நிதி சேகரிப்பு குறித்து, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரருடன், உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஆலோசனை நடத்தினார்.
கர்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள கிருஷ்ணர் கோவிலை நிர்வகித்து வரும் எட்டு மடங்களில், பெஜாவர் மடமும் ஒன்று.இந்த மடத்தின் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்தர சுவாமிகளுக்கு பின், விஷ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் பொறுப்பேற்றார்.அவர், உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் நிர்மானத்திற்கான, தென்மாநில பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இத்திட்டதிற்காக, தென்மாநிலம் முழுதும் யாத்திரை மேற்கொண்டு, சமய தலைவர்கள், துறவிகள், மாநில கவர்னர், முதல்வர், கட்சித் தலைவர்கள், தன்னார்வலர்களை சந்திக்க உள்ளார்.அதன்படி, நேற்று முன்தினம் இரவு, காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்திற்கு விஜயம் செய்தார். பிருந்தாவனத்தில், அவருக்கு கோவில் மரியாதையுடன், சங்கர மடம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து, காஞ்சி மடத்தின் மடாதிபதி விஜயேந்திரரை சந்தித்து, ராமர் கோவில் கட்டுமானம், நிதி சேகரிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.