பதிவு செய்த நாள்
11
டிச
2020
03:12
சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலின் சபையை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால், சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்க வடிகாலை கண்டுபிடித்து, துார் வாரும் பணியை, நகராட்சி ஊழியர்கள் துவங்கினர்.
கடலுார் மாவட்டத்தில் பெய்த கன மழையால், சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிவகங்கை குளம் நிரம்பி, பொற்கூரை பகுதி முழுதும், இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. இக்கோவிலில் இருந்து தண்ணீர் வடிய, பராந்தக சோழன் வடிவமைத்த சுரங்க வடிகால், பராமரிப்பு இல்லாமல் போனதே காரணம் என கண்டறியப்பட்டது.இதையடுத்து, சுரங்க வடிகால்களை தோண்டி, மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராஜேஷ், வடிகாலை பார்வையிட்டு, சீரமைக்க உத்தரவிட்டார். சிதம்பரம் நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் தலைமையில், ஊழியர்கள் நேற்று பணிகளை துவங்கினர். கோவிலின் வடக்கு கோபுர வாசலில் இருந்து, தில்லை காளி கோவில் குளம் வரை, தண்ணீர் வடியும் சுரங்க வடிகாலில், 11 இடங்கள் இறங்கி பணியாற்றும் அளவில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அதில், ஒன்பது இடங்களை, நகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மீதமுள்ள இடங்களை கண்டுபிடிக்கும் பணி, முடுக்கி விடப்பட்டுள்ளது. கோவிலில் இருந்த தண்ணீர் வெளியேறும் வடக்கு வீதியிலேயே அடைப்பு இருந்ததை கண்டறிந்து, சாலையை பெயர்த்து, துார் வாரும் பணி நடக்கிறது.