பதிவு செய்த நாள்
11
டிச
2020
03:12
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மேல்தளம் சிதிலமடைந்து முதல் பிரகாரத்தில் மழை நீர் ஒழுகும் ஆபத்தான நிலை ஏற்பட்டு இருப்பதால், உடனடியாக திருப்பணி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் அட்டவீரட்டானங்களில் இரண்டாவது தலமாகும். அந்தகாசசூரனை வதம் செய்ய சிவபெருமான் மகாபைரவராக அவதாரம் எடுத்த ஸ்தலம். ஏராளமான சிறப்புமிக்க பழமையான கோவில். இதன் உள்பிரகாரம் சிதிலமடைந்து மேற் கூரை ஒழுகுகிறது. கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், கோவில் சிதிலமடைந்து வருவது மக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. இக்கோவிலுக்கு ஏராளமான நிலங்கள் உள்ளது. கடைகள் மூலம் வருவாய், பக்தர்களின் உண்டியல் வசூல் இப்படி அதிக வருவாய் உள்ள கோவில், கவனிக்கப்படாமல் இருப்பது பக்தர்களை மட்டுமல்லாது கோவில் கருவறை சுவற்றில் ராஜராஜ சோழனின் தாய் வானமாதேவி பிறந்த ஊர், அவ்வையார் அகவல் பாடியது, கபிலர் வடக்கிருந்து உயிர் நீத்தது உள்ளிட்ட கல்வெட்டுகள் பதித்த கருவறை சுவரும் பாதிக்கப்படும் என்பதால் வரலாற்று ஆய்வாளர்களும், பொது மக்களும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கான திட்ட மதிப்பீட்டை இந்து சமய அறநிலையத்துறை கீழ்மட்ட அதிகாரிகள் அவ்வப்போது அனுப்பி வைக்கும் நிலையில், உயர்மட்ட அதிகாரிகளை சென்றடையும் போது அது ஆண்டுகளை கடந்து விடுவதால், மீண்டும் மீண்டும் மதிப்பீடுகள் செய்து காலம் கடத்தும் அவலம் தொடர்கிறது. பல லட்சம் ரூபாய் வருவாய் உள்ள கோவிலின் நிலையைக் கண்டு பக்தர்கள் கவலைப்பட மட்டுமே முடிகிறது. இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.