பதிவு செய்த நாள்
30
மே
2012 
11:05
 
 போடி:போடி ராஜவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. சேனைத்தலைவர் மகாஜன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ராஜவிநாயகர் கோயில் காந்திநகரில் அமைந்துள்ளது. இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளதால், வாழ்க்கையில் மன அமைதி இல்லாதவர்களுக்கு, சகல சவுபாக்கியங்களும் தந்து ராஜவிநாயகர் அருள்பாலிப்பதாக ஐதீகம். விநாயகருக்கு வலதுபுறம் சிவன், இடது புறம் பாலமுருகன் தெய்வங்களும், ஈசானியத்தில் நவகிரகசுவாமிகளும் அமைந்துள்ளனர். இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு,நாளை(மே 31ல்) கும்பாபிஷேகம் நடக்கிறது. கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, புதிய விக்ரஹங்கள் நகர் வலம், யாகசாலை பிரவேஷம். பெண்கள் தீர்த்த தொட்டியிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து பூஜைகள் செய்யப்பட்டன. அன்னதானம், விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. இன்று இரண்டாம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, புதிய விக்ரஹங்களுக்கு கண்திறத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. நாளை காலை யாக வேள்வி, விக்னேஸ்வர பூஜைகள் செய்யப்பட்டு, காலை 7.35 மணிக்கு மேல் 9 மணிக்குள் ராஜவிநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10 மணிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள், அன்னதானம் வழங்கப்படுகிறது.மாலை 4.30 மணிக்கு ராஜவிநாயகருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி தொடர்ந்து 45 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்பணிக்கமிட்டி தலைவர் ஜெகஜோதி, செயலாளர் எஸ்.கே.முருகேசன், பொருளாளர் ஏ.எஸ்.டி. முருகேசன், சேனைத்தலைவர் மகாஜன சங்க தலைவர் கனகராஜ், செயலாளர் முருகேசன், பொருளாளர் மாடசாமி உட்பட நிர்வாகஸ்தர்கள் செய்துள்ளனர்.