பதிவு செய்த நாள்
30
மே
2012
11:05
நாமக்கல்: செங்காளிக்கவுண்டனூர் மகா சித்தி விநாயகர், மகா மாரியம்மன் கோவிலில், நாளை கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது.நாமக்கல் அடுத்த ஆவல்நாயக்கன்பட்டி, செங்காளிக்கவுண்டனூரில் மகா சித்தி விநாயகர், மகா மரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, மே 31ம் தேதி, கோவில் கும்பாபிஷேக விழா நடத்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று காலை 8.30 மணிக்கு, விசேஷ சாந்தி இரண்டாம் காலயாக பூஜை, 108 மூலிகை வகைகள், கனிவகைகள் ஹோமங்கள், காலை 11 மணிக்கு மகா மாரியம்மனுக்கு இரண்டாம் காலயாக பூஜை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, இரவு 7 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையும் நடக்கிறது.நாளை அதிகாலை 5.30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, காலை 8.05 மணிக்கு கோபுர கலசத்துக்கு சம கால கும்பாபிஷேகம், காலை 8.15 மணிக்கு சித்தி விநாயகர், மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, ஸ்வாமி அலங்காரம், சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல், ஸ்வாமி தரிசனம் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.