பதிவு செய்த நாள்
27
டிச
2020
11:12
மன்னார்குடியில் ஓரிரவு தங்கி ராஜகோபால சுவாமியை வணங்கினால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
கோபிலர், கோபிரளயர் என்ற முனிவர்கள் செண்பகாரண்ய ஷேத்திரம் என்னும் மன்னார்குடியில் கிருஷ்ணரை எண்ணித் தவமிருந்தனர். கிருஷ்ணர் காட்சியளித்த போது, ‘‘துவாரகையில் செய்த லீலைகளை இத்தலத்தில் காட்டியருள வேண்டும்’’ எனக் கேட்டனர். அவரும் தான் செய்த 32 லீலைகளை நிகழ்த்தினார். அதில் முதல் கோலமான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வாசுதேவப் பெருமாளே இங்கு மூலவராக இருக்கிறார். 32வது கோலமான ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபாலர் உற்ஸவராக இருக்கிறார். 1018 முதல் 1054 வரை கட்டப்பட்ட இக்கோயில் ராஜாதிராஜ விண்ணகரம் எனப் பெயர் பெற்றது.
மன்னார்குடி கோயிலை தரிசிப்பவருக்கு கல்யாண குணங்கள் என்னும் ஐஸ்வர்யம், தைரியம், புகழ், ஞானம், வைராக்கியம் கிடைக்கும். தானங்களில் சிறந்து பசுதானம். கிருஷ்ணர் மதுராபுரி சிறையில் பிறந்த போது, அவரது தந்தை வசுதேவர் மானசீகமாக பல்லாயிரம் பசுக்களை தானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஓரிரவு தங்கி வழிபட்டால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் சேரும்.
இங்கு ஒன்பது பிரகாரம், 16 கோபுரம், 24 சன்னதிகள் உள்ளன. 154 அடி உயர கிழக்கு ராஜகோபுரம் எதிரில் 54 அடி உயரமுடைய ஒற்றைக் கல் கருடத்துாண் உள்ளது. கோயில் அருகில் 23 ஏக்கர் பரப்பில் ஹரித்ராநதி எனப்படும் தெப்பக்குளம் உள்ளது. கிருஷ்ணனுடன் வாழ்ந்த கோபியரின் உடலில் பூசியிருந்த ஹரித்ரா (மஞ்சள்) இக்குளத்து நீரில் படிந்ததால் ஹரித்ராநதி எனப் பெயர் பெற்றது. இங்குள்ள செங்கமலத்தாயார் விழா காலத்தில் கூட கோயிலை விட்டு வெளியே வர மாட்டார். இதனடிப்படையில் ‘படி தாண்டா பத்தினி’ என அழைக்கப்படுகிறார்.
இங்கு கிருஷ்ணர் இடையர் கோலத்தில் பாலகனாக காட்சி அளிக்கிறார். வேட்டி அணிந்து அதையே தலைப்பாகையாகச் சுருட்டி, வலது கையில் பொற்கோல் ஏந்தியுள்ளார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை கொலுசு அணிந்திருக்கிறார். அருகில் பசுவுடன் இரண்டு கன்றுகள் உள்ளன. இவருக்கு பிரதான நைவேத்தியம் பால். மாலையில் தோசை நைவேத்தியம் செய்யப்படுகிறது.
எப்படி செல்வது: தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி 55 கி.மீ.,
விசேஷ நாட்கள்: கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி பிரம்மோற்ஸவம்
நேரம்: காலை 5.00 - மதியம் 12.00 மணி, மாலை 6.00- இரவு 9.00 மணி.