வேலுார் அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் யந்திரம் பொருத்திய நிலையில் சிவலிங்க வடிவில் சனீஸ்வரர் இருக்கிறார். சனி ஓரை நேரத்தில் இவரை தரிசிப்பது சிறப்பு. ஆயிரம் ஆண்டுக்கு முன் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சனீஸ்வரருக்கு கோயில் கட்டினார். ‘ஈஸ்வர’ பட்டம் பெற்றவர் என்பதால் சிலையை சிவலிங்கத்தின் பாணம் போல உருவாக்கினார். காலப்போக்கில் கோயில் சிதிலமடையவே திறந்த வெளியில் வழிபாடு நடந்தது. பிற்காலத்தில் யந்திரத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் ‘ யந்திர சனீஸ்வரர்’ எனப் பெயர் பெற்றார். தாமரை பீடத்தின் மீது இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் லிங்க வடிவில் சனிபகவான் இருக்கிறார். சிலையின் மேற்பகுதியில் சூரியன், சந்திரனும், நடுவில் காகமும் உள்ளன. நடுவில் அறுகோண வடிவில் யந்திரம் உள்ளது. ‘‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. சிவனுக்குரிய வில்வ இலைகளால் அர்ச்சனை செய்கின்றனர். சனிக்கிழமையில் சனி ஓரை நேரமான காலை 6:00– 7.00 மணிக்குள் அபிேஷகம், கோ பூஜை, யாக சாலை பூஜை நடக்கிறது. சனீஸ்வரரின் தந்தையான சூரிய பகவானே இங்கு தீர்த்தமாக உள்ளார். சூரியனுக்கு ‘ பாஸ்கரன்’ என்றொரு பெயருண்டு. எனவே ‘பாஸ்கர தீர்த்தம்’ என்கின்றனர். சனீஸ்வரரின் அபிேஷக தீர்த்தத்தை பிரசாதமாக தருகின்றனர். இதை குடித்தால் சூரிய, சனி தோஷம் நீங்கும். ஐந்து காகங்கள் தேரினை இழுக்க, அதன் மீது பவனி வரும் சனீஸ்வரர் சிற்பம் முகப்பில் உள்ளது. பிரகாரத்தில் வரசித்தி விநாயகருக்கு சன்னதி உள்ளது. மனிதனின் ஆயுள், தொழிலை நிர்ணயம் செய்யும் கிரகம் சனி என்பதால் வழிபடுவோருக்கு ஆயுள், தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி பாதிப்பு தீர எள்தீபம் ஏற்றுகின்றனர். எப்படி செல்வது * திருவண்ணாமலையில் இருந்து 58 கி.மீ., * வேலுாரில் இருந்து 41 கி.மீ., துாரத்தில் ஆரணி. அங்கிருந்து படவேடு செல்லும் வழியில் 9 கி.மீ., * திருவண்ணாமலை – வேலுார் சாலையில் (50 கி.மீ.,) உள்ள சந்தவாசல் சென்று அங்கிருந்து 3 கி.மீ.,