பதிவு செய்த நாள்
28
டிச
2020
01:12
புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில், 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், கிரக ஹோமம், கோ பூஜை, அஸ்வ பூஜை மற்றும் சனி சாந்தி ஹோமம் நடந்தது. சனி பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. நேற்று காலை 5:22 மணிக்கு, சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும், சனிப்பெயர்ச்சி நடந்தது. அப்போது, சனி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 8:00 மணிக்கு, 12 அடி உயர சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு, 80 அடி உயர மகர கும்பத்தில், 8,000 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 44 நாட்களுக்கு, 12 அடி உயர சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.