Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்க்கண்டேய புராணம் பகுதி-1
முதல் பக்கம் » மார்க்கண்டேய புராணம்
மார்க்கண்டேய புராணம் பகுதி-2
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 மே
2012
03:05

20. வைவஸ்வத மந்வந்தரம் சூரியன் சம்ஜ்ஞா: விவஷ்வான் என்ற சூரியன், விஸ்வகர்மாவின் புதல்வி சம்ஜ்ஞாவை மணந்தான். அவர்களுக்குப் பிறந்த மகள் மனு. அடுத்த தடவை சூரியன் தன்னை நெருங்கும்போது அவன் ஒளியைக் காணமுடியாமல் சம்ஜ்ஞா கண்களை மூடிக்கொள்ள, அதனை வெறுத்த சூரியன் உலகில் பிறந்தவர்கள் இறப்பதற்குக் காரணமான மகனைப் பெறுவாய் என்று கூற யமன் பிறந்தான். அடுத்த முறை அவன் நெருங்கும்போது அவள் கண் இமைகள் படபடவென இமைத்தால் ஓரிடத்தில் நிற்காமல் ஓடுகின்ற நதியான யமுனை தோன்றினாள்.

சாயாதேவி தோற்றம்: இதனைப் பொறுக்கமுடியாத அவன் தனது நிழலை சாயாதேவி என உருவாக்கி தன்னைப் போல் கணவனிடம் குழந்தைகளைப் பெற்றுக்கொள். ஆனால் நீ யார் என்பதை இரகசியமாக வைத்துக் கொள் என்றாள். சாயாவும் அதற்கு இணங்கினாள். ஆனால் தன் மீது கோபம் கொண்டு தன்னைச் சபிக்க முயன்றால் உண்மையைக் கூறிவிடுவேன் என்றாள். பின்னர் சம்ஜ்ஞாதேவி தந்தையிடம் சென்று நடந்ததைக் கூற அவன் மகளை கணவன் வீட்டிற்கே செல் என்று அறிவுரை கூறினார். அதற்கு மனமில்லாத அவள் உத்ரகுரு என்னும் வனத்திற்குச் சென்று கணவன் தாபம் குறைய தவம் ஆற்றி வந்தாள். இந்நிலையில் சாயாதேவிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆண் ஒன்று சனி, பெண் ஒன்று தபதி.

ஒரு சமயம் சாயாதேவி மாற்றான் தாய் குழந்தைகளைச் சரியாக கவனிக்காததால் யமன் கோபம் கொண்டு மாற்றாந்தாயை உதைக்க காலைத் தூக்கினான். அப்போது சாயாதேவி அவன் கால் அழுகிவிட சாபம் தந்தாள். இதன் மூலம் உண்மையை சூரியன் அறிந்தான். அவன் உடனே சம்ஜ்ஞாவைத் தேடி விஸ்வகர்மாவிடம் சென்று கேட்க அவன் நிகழ்ந்ததைக் கூறி, அவள் உத்ரகுரு வனத்தில் பெண் குதிரையாகித் திரிவதாகக் கூற, சூரியன் அவளைத் தேடிச் சென்று கண்டு, ஆண்குதிரை வடிவில் இன்பம் துய்த்தான். அவர்களுக்கு அஸ்வினி தேவர்கள் என்னும் தேவ வைத்தியர்கள் தோன்றினர். பின்பு விசுவகர்மா சூரிய மண்டலத்தைத் தனது சாணைச் சக்கரத்தில் வைத்துத் தேய்த்து அதன் தேஜஸில் எட்டில் ஒரு பங்கைக் குறைத்து விட்டான். குறைந்து தள்ளப்பட்ட பகுதியிலிருந்து விசுவகர்மா விஷ்ணுவுக்குச் சக்கரத்தையும், சிவனுக்கு சூலத்தையும், சுப்ரமணியனுக்கு வேலையும், குபேரனுக்கு சிபிகை என்ற ஆயுதத்தையும் செய்து கொடுத்தான். (இந்த வரலாறும் மேலும் விவரங்களும் விஷ்ணு புராணத்திலும் காண்க.)

விவஸ்வான் என்ற சூரிய புதல்வனான மனுவின் பெயரால் தொடங்கியது, வைவஸ்வத மந்வந்தரம் எனப்பட்டது.

21. மாயையின் மகிமை

ஸ்வரோசிஸன் என்னும் மனுவின் வம்சத்தில் தோன்றிய மன்னன் சுவரன். அவனைப் பகைவர்கள் திடீரென்று தாக்க, அவன் தப்பித் தலைநகரை அடைய அவனுடைய அமைச்சர் முதலானோர் சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றிட அவன் உயிர்தப்பிக் கானகம் சென்று சுமேதன் என்னும் முனிவரிடம் சேர்ந்தான். முனிவர் அவனை வரவேற்று உபசரித்தார். அச்சமயம் ஒருநாள் சமாதரி என்னும் வைசியன் ஒருவன் வர அவன் வாட்டத்திற்குக் காரணம் என்ன என்று அரசன் கேட்க அவன் தன் மனைவி மக்கள் தன் சொத்தை எல்லாம் பிடுங்கிக் கொண்டு வீட்டை விட்டுத் துரத்தி விட்டதாகவும் இருப்பினும் அவர்கள் எவ்வாறு கஷ்டப்படுகிறார்களோ என்று வருத்தப்படுவதாகவும் கூறினான். அரசன் வியப்புடன் தன்னை வஞ்சித்த மனைவி மக்கள் மீது அந்த வைசியன் அக்கறை கொள்வதற்குக் காரணம் கருணையா, மோகமா! என்று கேட்டான். அதற்கு அவனால் பதில் சொல்ல இயலவில்லை. அவ்வமயம் முனிவர் அங்குவர அவரை இருவரும் வணங்கி உலகத்தை ஆட்டிப் படைக்கும் மோகம் எப்படி தோன்றியது, அதற்கு காரணமென்ன? என்று கேட்டனர்.

சுமேத முனிவர் மாயாதேவியைத் தியானித்து மாயையின் மகிமையைப் பற்றிக் கூறலானார். பகவான் விஷ்ணுவின் மாயை அநாதியானது. அதுவே யோகநித்திரை என்றும் கூறப்படுகிறது. பகவானிலேயே கலந்துறைவது. மாயை ஞானிகளையும், தபஸ்விகளையும் கூட மதிமயங்கச் செய்யும், தீயவரை அழிக்க ஏதோ ஓர் உருவில் தோன்றுவதும் உண்டு. திருமாலின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றிய பிரம்மனையே விஷ்ணுவின் காது குறும்பியிலிருந்து தோன்றிய மது கைடபர்கள் இழுத்துத் தின்ன விரும்பினர். அப்போது பிரம்மன் மாயையைச் சரணடைய மாயை பிரம்மனை மறைத்து விட்டு பகவானை விட்டு வெளியேற பகவான் (மாயா சக்தி இல்லாததால்) திடுக்கிட்டு எழுந்தார். மது கைடபர்களுடன் போர் செய்தார். வெல்ல முடியாததால் சமாதானம் பேசினார். ஆனால், மது கைடபர்கள் அவரை வேண்டிய வரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.

பகவான் அவர்களிடம் தான் எதைக் கேட்டாலும் தருவார்களா? என்று கேட்க அவர்களும் அப்படியே என்று கூற திருமால் தன் கையால் அவர்கள் மடிய வேண்டும் வரம் கேட்க, மதுகைடபர்கள் தண்ணீர் இல்லாத இடத்தில் வைத்துக் கொல்வதானால் சம்மதிப்பதாகக் கூறினார். பகவான் தன் தொடையையே அகன்ற பூமியாக்கி அவர்களை வைத்துக் கொன்றார். பிறகு பிரம்மனால் பூலோகப்படைப்பு ஏற்பட்டது. இவ்வாறு மாயாதேவி உலகின் படைப்புக்கே காரணமானாள். நேரடியாகக் கொல்லமுடியாத அரக்கர்களையும் வதைத்திருக்கிறாள் மாயாதேவி.

22. மஹிஷாசுரன் கதை

மஹிஷாசுரன் என்னும் அரக்கன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து மும்மூர்த்திகளாலும் மரணம் ஏற்படாதவாறு வரம் பெற்று, அந்த அகம்பாவத்தால் கொடுமைகள் செய்து வர தேவர்கள் மும்மூர்த்திகளிடம் முறையிட அவர்கள் முகத்திலிருந்து தோன்றிய கோபக்கனல் ஒரு பெண்ணாய் உருவெடுத்தது. அந்தத் தேவிக்கு தேவர்கள் தங்கள் சக்திகளையும், ஆயுதங்களையும் அளித்தார்கள். இவ்வாறு தோன்றிய தேவி மஹிஷாசுரன் காதில் விழும்படியாகச் சிங்கமென முழங்க, அவன் தன் சேனாதிபாதியான சிட்சூரனை விவரம் அறிந்து வர அனுப்பினான். அவன் தனக்கிணையாக வீரர்கள் உக்ரதர்ஷனன், பிடாவன், காலன் ஆகியோருடன் சேனை கொண்டு தேவியை எதிர்த்தான். அசுர மாயையால் ஆயிரக்கணக்கான ஆயுதங்களை ஏவி தேவியை மறைத்துப் பின்னர் அவள் சிம்ம வாகனத்தை அடித்து, அவள் இடக்கையை வாளால் வெட்ட வாள்தான் உடைந்தது. பின்னர் சிட்சூரன் ஒரு கொடிய சூலாயுதத்துடன் தேவி மீது பாய, தேவி அவன் சூலத்தை முறித்து அவனையும் கொன்றாள்.

அதுகண்ட சாமரன் என்னும் அரக்கன் சக்தி ஆயுதத்தை வீச தேவி ஹூங்காரத்தால் அதை அழிக்க, சிங்கம் பாய்ந்து சென்று அவனைக் கொன்று அழித்தது. இவ்வாறு வலிமைமிக்க பல அரக்க வீரர்கள் தேவியுடன் போர் புரிந்து அழிந்தனர். அதைக் கண்ட மஹிஷாசுரன் தேவியை எதிர்த்தான். தேவி அவனைப் பாசத்தால் கட்டி இழுக்க, அவன் சிம்ம வடிவில் தேவியை எதிர்த்தான். தேவி சூலத்தால் தாக்க அவன் மனித வடிவில் மாறி அம்புகளை ஏவ, தேவியும் அவற்றை முறியடித்தாள். மகிஷாசுரன் யானை வடிவம் கொண்டு சிங்கத்தை இழுக்க, தேவி வாளால் அதன் துதிக்கையை வெட்ட, அவன் மஹிஷ வடிவில் தோன்றிப் பின்னங்கால்களால் தேவியை உதைக்க முயற்சிக்கையில் தேவி அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு தலையை வெட்டி வீழ்த்தினாள். தேவர்கள் மலர் மாரி சொரிந்திட, அவர்களுக்கு என்ன வரம் வேண்டுமென்று கேட்க, அவர்கள் தேவைப்படும் பொழுதெல்லாம் தோன்றி துஷ்ட சம்ஹாரம் செய்து தங்களைக் காக்குமாறு வேண்டிட, அவ்வாறே தேவி வரம் அளித்தாள்.

23. தேவி சும்ப, நிசும்பர்களை அழித்தல்

இரணியன் வம்சத்தில் தோன்றிய சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் பிரம்மனிடம் வரங்கள் பெற்று மமதை கொண்டு இந்திர லோகத்தைக் கைப்பற்ற, தேவர்கள் தேவியே தங்களைக் காப்பாற்ற முடியும் என்று அறிந்து அவளைச் சரணடைந்தனர். பார்வதி தேவி அப்பொழுது நீராடிக் கொண்டிருந்தாள். அதனால் அவள் தன் உடலிலிருந்து ஒரு சக்தியை வெளிப்படுத்தி அரக்கர்களை அழித்துத் தேவர்களைக் காக்கும்படி அனுப்பி வைத்தாள். அந்தச் சக்தியின் பெயர் கவுசிகி. (தன் சக்தியை வெளியே அனுப்பிவிட்டதால் பார்வதி நீலநிறமாகி விட்டாள்.)

மிகவும் அழகுவாய்ந்த கவுசிகி அரக்கர்களை அழிக்க சேனையுடன் கிளம்ப, அஃதறிந்த சும்ப, நிசும்பர்கள் வேவு பார்த்துவர சாரணர்களை அனுப்ப, அவர்கள் திரும்பிவந்து கவுசிகியின் அழகைப் பற்றி விவரித்து அவளை மனைவியாக அடைவதே பெரிய பேறு என்றனர். அவர்கள் பேச்சைக் கேட்டு கவுசிகியின் மீது மோகம் கொண்ட சும்ப, நிசும்பர்கள் சுக்ரீவன் என்னும் தூதனை அனுப்பி அவளை விரும்புவதாகக் கூறி அவர்களுள் ஒருவரை மணம் புரியுமாறு சம்மதம் பெற்றுவர அனுப்பினான். சுக்ரீவன் தேவியிடம் சென்று செய்திகூற, அதைக் கேட்ட தேவி சிரித்து தன்னை யார் போரில் வெல்லுகிறானோ அவனையே மணப்பதாகக் கூறி அனுப்பினாள். எனவே, இருவரையும் போருக்கு வரச்சொல் என்று சொல்லி அனுப்பினான்.

சுக்ரீவன் திரும்பி வந்து செய்தி கூற, தாம்ரலோசனன் என்ற சேனாதிபதியை கவுசிகியை எப்படியாவது உயிருடன் பிடித்து வருமாறு ஆணையிட்டு அனுப்பி வைத்தான். தாம்ரலோசனன் கவுசிகியை அணுகி தான் பெண்ணுடன் போர் செய்ய வரவில்லை என்றும், சும்ப நிசும்பர்களில் ஒருவரை மணந்து சுகமாக வாழுமாறும், இல்லாவிட்டால் பலாத்காரமாகத் தூக்கிச் செல்வதாகக் கூறினான். செய் பார்க்கலாம் என்று தேவி விளையாட்டாகக் கூற, தாம்ரலோசனன் அவளைத் தூக்க முயல, தேவி முழக்கமிட்டாள். உடனே அவன் எரிந்து சாம்பலாயினான். அதற்குப்பின் சண்டன், முண்டன் என்ற இரு சேனாதிபதிகள் கணக்கற்ற ராக்ஷச வீரர்களுடன் வர இரு தரப்புக்கும் ஏற்பட்ட போரில் அரக்க வீரர்கள் பெருமளவில் அழிவதைக்கண்ட சண்டன் ஒரு கதையைத் தூக்கிக் கொண்டு தேவியைத் தாக்க ஓடி வந்தான். தேவி அவன் தலையை வாளால் வெட்டி வீழ்த்தினாள். அவனுக்குப் பின் வந்த முண்டனும் அவ்வாறே கொல்லப்பட்டான்.

கவுசிகி அந்த இரண்டு தலைகளையும் இரு கைகளில் ஏந்தி பார்வதியிடம் காட்டி சும்ப நிசும்பர்களை அழித்துத் தேவர்களின் துயரத்தைத் துடைப்பதாகக் கூறினாள். பார்வதி மகிழ்ந்து சண்டனைக் கொன்ற அவளுக்கு சண்டிகை எனப்பெயரிட்டாள். செய்தி அறிந்த சும்ப நிசும்பர்கள் பெரும் போருக்குத் தயாராகினர். சண்டிகைக்கு உதவியாக பிராஹ்மணி, மஹேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, நாசிம்ஹி, இந்திராணி முதலிய சக்திகள் போர்க்களத்தில் கவுசிகிக்கு உதவ வந்து சேர்ந்தனர். தேவி ஒரு தூதுவனைச் சும்பனிடம் தேவர்களை ஒப்படைத்து சரணடையுமாறு கூறிவர அனுப்பி வைத்தாள். அவ்வாறே தூதுவன் சும்பனிடம் நியாயத்தை எடுத்துக்கூற, அவன் அதை நிராகரித்து தன் படைகளைப் போர்க்களத்தில் தேவிக்கு எதிராக ஏவினான். தேவியால் தோற்றுவிக்கப்பட்ட ஆயிரம் காளிகள் அரக்கர்களின் தலைகளை வெட்டிக் குவித்தனர்.

ரத்த பிந்து அழிதல்

அரக்கர் படை அழிவதைக் கண்ட ரத்த பிந்து என்னும் அரக்கன் வந்து தேவியைத் தாக்கினான். இந்திராணி அவனை வஜ்ஜிராயுதத்தால் தாக்கினாள். அவன் உடலிலிருந்து தோன்றிய ரத்தத்துளிகள் ஒவ்வொன்றும் ரத்த பிந்துவாகிப் போரிடலாயின. அப்போது சண்டி காளியை அழைத்து அழிக்கப்படும் அரக்கர்களின் உடலிலிருந்து ஒரு துளி இரத்தம் கூட கீழே சிந்தாமல் குடிக்குமாறு ஆணையிட்டாள். ரத்தப் பிந்துக்களாக தோன்றிய அனைவரும் மடிந்துவிட தேவியைப் பூமாரி பொழிந்து போற்றி வணங்கினர். அதன்பின் நிசும்பன் நேராகத் தேவியை எதிர்த்து போர் புரிந்தான். அவன் ஒரு சூலாயுதம் ஏந்தி வர, தேவி செலுத்திய அம்புகளால் அவன் மூச்சுற்று விழுந்தான். அதைக் கண்ட சும்பன் மிக்க கோபத்துடன் தேவியைத் தாக்க, சிங்கம் பயங்கரமாய் முழங்கியது. தேவியும் தன் கரங்களால் பூமியில் ஓங்கி அறைய அரக்கர்கள் விழுந்து மடிந்தனர்.

சும்பன் ஒரு பயங்கர சக்தி வாய்ந்த ஆயுதத்தை தேவி மீது ஏவ, அவள் தன் பாணங்களால் அதனைச் செயலிழக்கச் செய்துவிட்டாள். இந்நிலையில் மூர்ச்சை தெளிந்து எழுந்த நிசும்பன் ஒரு கதையை தேவி மீது வீசிட, அவள் அதைத் தடுத்து நிசும்பன் மார்பில் தாக்க அவன் கீழே விழுந்தான். அவன் உடலிலிருந்து மற்றோர் அசுரன் தோன்றி தேவியை எதிர்க்க, தேவி அவன் தலையை வெட்டி வீழ்த்தினாள். அரக்கர் சேனைகள் அழிந்தன. அதைப் பார்த்த சும்பன், பல சக்தி தேவிகளின் துணையிலேயே நீ வெற்றி அடைகிறாய். தனித்துப் போர் செய்து பார் என்று சவால் விட்டான். இத்தனை சக்தியும் நானே என்பதை அறியாமல் பேசும் மூடனே என்று கூறி அத்தனை சக்திகளையும் தன்னுள் ஒடுக்கிக் கொண்டாள். அடுத்து சும்பனுக்கும், தேவிக்கும் நடந்த போரில், தேவி அவனைப் பிடித்துக் கீழே தள்ளி, சூலத்தினால் அவன் மார்பைப் பிளந்தாள். யாராலும் வெல்ல முடியாத அசுரன் தேவியால் அழிக்கப்பட தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள்.

பின்னர், தேவர்கள் அனைவரும் தேவியைப் பலவாறு போற்றித் துதித்தனர். அப்போது தேவி அவர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, தேவர்கள் எக்காலத்தும் அரக்கன் பயமின்றி வாழும் வரம் கேட்டனர். அவ்வாறே தேவியும் வரமளித்தாள். பிறகு தேவி இவ்விருவரும் மறுபடியும் உலகில் தோன்றி கொடுமைகளைச் செய்வார். அப்போது யசோதையின் கருவில் தோன்றி அவர்களைக் கொல்வதாக வாக்களித்தார். சமேதன் என்னும் முனிவர் இக்கதையை சுரதன் என்னும் அரசனுக்குச் சமாதி என்ற வைத்தியனுக்கும் கூற அவர்கள் தேவியை ஆராதிக்கும் வழியை உபதேசிக்க வேண்டினர். அவ்வாறே முனிவர் தேவியை ஆராதிக்கும் முறையை உபதேசிக்க அவர்கள் ஒரு நதிக்கரையில் தோன்றி தேவியைக் குறித்துத் தவம் இயற்ற தேவி தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள். அரசன் தனக்கு உயர்ந்த பிறவியும், நல்ல நாடும் கேட்டான். வைத்தியன் ஞானத்தை வேண்டினான். அவ்வாறே அருளினாள் தேவி. அரசனுக்கு ஒரு மந்வந்தர கர்த்தாவாகும் வரத்தைக் கொடுத்தாள்.

24. ரௌச்ய மந்வந்தரம்

ருசி என்னும் மன்னன் இல்லற வாழ்வில் வெறுப்புக் கொண்டு கானகம் சென்று நெடுங்காலம் தவம் செய்தான். முதுமையுற்றான். அவன் முன் அவனுடைய முன்னோர் தோன்றி உனக்குச் சந்ததி இல்லை. எங்களுக்குத் தர்ப்பணம் செய்து பிண்டம் கொடுப்பவர் யார்? அப்படிச் செய்யாவிடில் தலைகீழாய்ப் பூமியில் விழுந்து அவதியுறுவோம். எனவே திருமணம் செய்து கொண்டு ஒரு மகனைப் பெற்று எங்களைக் காப்பாற்று என்றனர். ருசி அவர்களை வணங்கி வாழ்க்கையை விரும்பாமல் தவம் செய்வதும் தவறா என்று கேட்க, அவர்கள் கடமைகளைப் பற்றற்ற நிலையில் இருந்து செய்வதாலேயே பரம்பொருளை அடையமுடியும் என்றனர். எனக்கு வயதாகி விட்டதால் யார் பெண் கொடுப்பார்கள் என்று கேட்க முயன்றால் முடியாததொன்றுமில்லை என்று கூறி மறைந்தனர். ருசிக்கு எவரும் பெண் கொடுக்க முன்வராததால் பிரம்மாவை நோக்கித் தவம் செய்ய அவர் தேவர்களாகிய முன்னோர்களைப் போற்றி வணங்கினால் நல்ல மனைவி கிடைப்பாள் என்று கூறி மறைந்தார்.

பின்னர் ருசி கங்கை ஆற்றங்கரையில் சிந்தனையில் அமர்ந்திருக்க பிரம்மலோசை என்னும் அப்சரஸ் தோன்றித் தன் மகளான மாலினியை மணம் செய்து கொள்ளும்படி கேட்டாள். அதனை ஏற்று ருசி அவளை மணந்து கொண்டு ரௌச்யன் என்னும் மகனைப் பெற்றான். அவன் மூலம் ரௌச்ய மந்வந்தரம் உண்டாயிற்று. (மந்வந்தரங்கள் பற்றிய மேலும் பல விவரங்கள், பல மந்வந்தரங்கள் பற்றிய விவரங்கள், ஒவ்வொரு மந்வந்தரத்திலும் யார் இந்திரன், சப்தரிஷிகள் போன்ற செய்திகளை அறிய மந்வந்தரங்கள் பற்றிய அத்தியாயத்தில் ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் கொடுக்கப்பட்டவற்றைப் பார்க்கவும்)

25. பவுத்ய மந்வந்தரம்

ஆங்கிரஸ முனிவரின் சீடன் பூதி கடும் தவம் இயற்றி தேஜஸ் பெற்றார். அவரது கோபமும் அதிகரித்து வந்தது. அவருடைய சகோதரன் ஸ்வர்ச்சஸ். அவன் செய்யும் யாகத்திற்கு பூதியைக் கட்டாயம் வரவேண்டுமென்று அழைத்தான். பூதி அந்த யாகத்திற்குச் செல்லும் போது சீடன் பிரசாந்தனிடம் ஹோம அக்கினி அணையாமல் எரிந்து கொண்டே இருக்குமாறு கவனித்துக் கொள்ளுமாறு கூறிச்சென்றார். எனினும், எதிர்பாராத விதமாய் அக்கினி அணைந்துவிட அவன் அக்கினி பகவானைச் சரணடைந்தார். அவர் குரு பக்தியை மெச்சிய அக்கினிதேவர் தீ தானாக எழுந்து பிரகாசிக்கவும், குருவுக்கு நன்மகன் பிறக்கவும் அருளியதுடன் பூதியின் மகன் ஒரு மந்வந்தரத்துக்கு காரணமாய் இருப்பான் என்றும், அவன் ஸ்தோத்திரத்தை ஜபிப்பவர் பாவவிமோசனம் பெற்று எல்லா நன்மைகளையும் பெறுவர் என்றும் கூறி மறைந்தார். சில நாட்களுக்குப் பிறகு பூதி திரும்பி வந்தபோது பிரசாந்தன் நிகழ்ந்தவற்றை எல்லாம் கூறி மன்னிப்புக் கோர, அவன் குணத்தை மெச்சிய குரு அவனுக்கு அப்போதே அஷ்டாதச வித்தைகளும் தாமாகவே தோன்ற அருள் புரிந்தார். அக்கினியின் அருளால் பூதிக்கு பிறந்த புத்திரன் மூலமாய் பவுத்ய மந்வந்தரம் ஏற்பட்டது.

மந்வந்தரங்களால் பலன்

இவற்றைப் படிப்பதால், கேட்பதால் ஏற்படும் பலன்கள்.

1. ஸ்வரோசிஸ மனு-நினைத்த காரிய வெற்றி
2. உத்தம மனு-செல்வம் அளிக்கும்
3. தாமஸ மனு-தமோகுணத்தை அகற்றி ஞானத்தைப் புகட்டும்.
4. ரைவத மனு-நற்புத்தி, மனதுக்கேற்ற மனைவி கிடைக்கும்.
5. சாக்ஷúஸ மனு-உடல் நலம் தரும்.
6. வைவஸ்த மனு-பலம் தரும்.
7. சூரிய சாவர்ணி-நல்ல சந்ததி உண்டாகும்.
8. பிரம்ம சாவர்ணி-பெருமை சேர்க்கும்.
9. தர்ம சாவர்ணி-உத்தமனாக்கும்.
10. ரவுச்யம்-சத்துருவை வெல்லும்.
11. பவுத்யம்-தேவ பிரசாதம்.
12. அக்னிஹோத்ர சாவர்ணி-சகல சவுபாக்கியம்.

26. மார்த்தாண்டன் வரலாறு

படைப்பின் துவக்கத்தில் பிரம்மன் பலவித படைப்புகளைச் செய்தும் திருப்தியின்றி வலக்கை விரலிலிருந்து தக்ஷனையும், இடக்கை விரலிலிருந்து அவன் மனைவியையும் தோற்றுவித்து, ஆண் பெண்ணாய் அவர்களைப் படைப்பில் ஈடுபடச் செய்தார். தக்ஷனுடைய மக்கள் நாரதர் உபதேசத்தால் முக்தி பெறத் தவம் செய்ததால் அவனைத் தேற்ற பிரம்மன் அறுபது பெண்களை அளித்தார். அவர்களில் பதின்மூன்று பேரைக் காசியப முனிவருக்குத் திருமணம் செய்து வைத்தான். காசியபர் மூலமாய் அவர் மனைவிகளான அதிதியிடம் தேவர்களும், திதியிடம் அசுரர்களும், மற்ற மனைவியர்கள் மூலமாய்ச் சித்தர், சாரணர், கந்தர்வர், யக்ஷர், ராக்ஷசர், மரம், செடி, கொடிகள்; புலி சிங்கம் முதலிய மிருகங்கள்; அருணன், கருடன் முதலான பறவைகள்; நாகங்கள் முதலானவைகள் தோன்றின.

ரிக்கு, யஜுர், சாம வேத வடிவமான சூரியன் துவக்கத்தில் தோன்றிய பிராணிகளைத் தன் கிரணங்களால் எரித்தான். அதனால் பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க சூரியன் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ள அதன் மூலம் அவர் பிராணிகளுக்கு அறிவை அளித்து உலகுக்கு நலம் ஏற்படச் செய்தார். துவக்கம் முதலே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பகைமை இருந்து வந்தது. அடிக்கடி தேவர்கள் அசுரர்களுடைய பலத்தை எதிர்க்க முடியாமல் ஓடி ஒளிய நேர்ந்தது. இதனால் மனம் வருந்திய தேவமாதா அதிதி சூரியனை நோக்கித் தவம் செய்ய சூரியன் தோன்ற, அவர் ஒளியைத் தாங்கமுடியாத தேவமாதா குளிர்ந்த தோற்றத்தில் காட்சி அளிக்க வேண்ட அவ்வாறே சூரியன் அதிதியைப் பார்த்து அவள் துயரத்தையும், விருப்பத்தையும் தான் அறிந்துள்ளதாகவும், அவள் துன்பம் துடைக்க அவனே அதிதியின் புதல்வனாகப் பிறப்பதாகவும் கூறினான். மேலும் அவள் கருவுற்றிருக்கும்போது நியம நிஷ்டையுடன் இருக்குமாறு வேண்டினான்.

சூரியன் தனது கிரணங்களில் ஒன்றை அதிதியின் கருவில் வளர அனுப்பி வைத்தான். கருவுற்ற நாளிலிருந்து அதிதி தேவி விரத நியமங்களைத் தவறாமல் அனுஷ்டித்து வந்தாள். காசிபர் உபவாசம் இருந்து குழந்தையைக் கொன்றுவிடாதே என்று கூற அவள் எதிரிகளை வெல்லத் தக்க புதல்வனை எதிர்ப்பார்த்திருக்கும் அவனை கொல்லமாட்டேன் என்றாள். அப்போது ஆகாசவாணி காசிபர் அக்குழந்தைக்கு மார்த்தாண்டம் என்று பெயரிடுமாறும் அவன் எதிர்பார்த்த பலனைத் தருவான் என்றும் கூறியது. சூரியன் அம்சமாக பிறந்த அக்குழந்தை மார்த்தாண்டம் எனப்பட்டான். சூரியன் அதிகாரமும் கிடைக்க தேவாசுரப்போரில் மார்த்தாண்டம் வெற்றி கொண்டு அவர்களை சாம்பலாக்கினான்.

27. சூரியன் கொடுத்த வரம்

தமன் என்னும் அரசனின் புத்திரன் ராஜ்யவர்த்தனன். விதாரதன் என்னும் தக்ஷிண தேசத்து அரசன் தன் மகளான மானினியை ராஜ்யவர்த்தனுக்குத் திருமணம் செய்து வைக்க இருவரும் இணை பிரியாது வாழ்ந்து வந்தனர். ஒருநாள் மானினி திடீரென்று அழத்தொடங்க, ராஜ்யவர்த்தனர் காரணம் கேட்க, அவர் தலையில் இருந்த ஒரு நரைமுடியைக் காட்டி அதுவே அழுகைக்குக் காரணம் என்றாள். உடனே ராஜ்யவர்த்தனன் ஆம், இளமை கழிந்து விட்டது என்று எச்சரிக்கும் காலதூதன் அந்த நரைமுடி என்றும், உடனே மகனுக்கு முடிசூட்டி விட்டு வனம் சென்று தவம் செய்வோம் என்றான். அதுகேட்ட மானினி திடுக்கிட்டாள். இதுவரையில் செய்த யாகங்கள், தான தர்மங்களால் அடையமுடியாத பலனை வனவாசத்தால் அடைய முடியுமா? என்று கேட்டாள். வனவாசத்தால் விரைவில் அடைந்து விடலாம் என்று கூறித் தான் வனவாசத்தை மேற்கொள்ளத் துணிந்து விட்டதால் அவளையும் கூட வருமாறும் இன்றேல் இங்கேயே இருக்கலாம் என்றும் கூறினான் ராஜ்ய வர்த்தனன்.

பின்னர், தான் தவம் செய்யப்போவதைக் குறித்து மந்திரி பிரதானிகளுடன் கூற, அவர்கள் அதற்கு ஒப்பாமல் தங்களை விட்டுச் செல்வது தர்மமில்லை என்றும் அங்கேயே இருந்து ராஜரிஷியாகி தவம் செய்யலாம் என்றனர். அதற்கு மன்னன் காலன் வந்து கொண்டுபோகும் போது என்ன செய்வீர்கள் என்றான். அதற்கு அமைச்சர்கள் முதலானோர் ஆதவனைக் குறித்துத் தவம் செய்து காலன் அணுகாதவாறு வரம் பெற்று வருவோம் எனக் கிளம்ப, மன்னன் மிகவும் மகிழ்ச்சியுற்றான். எனினும் அவன் வாழ்வில் சலிப்பு அடைந்தவனாகவே காணப்பட்டான். மானின் மன்னனின் சஞ்சலத்துக்குக் காரணம் கேட்க, அவன் தான் மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பெற்று மற்றவர்கள் இல்லாமல் தனியாக இருப்பது எப்படி? எனவே ஆதவனைக் குறித்துத் தான் தவம் செய்து மானினிக்கும் மற்றவர்களுக்கும் பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கத்தக்க பேற்றினை பெற்றுக் கொடுப்பதற்காகத் தவம் செய்யப் புறப்பட்டான். அரசன் கூறியதில் உள்ள நியாயத்தை எண்ணி மானினி அவரைத் தடுக்கவில்லை. தவத்தின் பலனாய் சூரியன் தோன்றி அவன் கேட்ட வரத்தை அருளினார். அரசன் மனைவி, மற்றும் குடிமக்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் ஆண்டு வந்தான்.

28. மனு வம்சம், மனு புத்திரர்கள் சந்திர வம்சம்

விசுவசுவான் என்னும் சூரியனின் மூத்த புதல்வன் மனு. அவனுக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளுக்கும் ஏழு நாட்டைக் கொடுத்தான். தன் எட்டாவது பிள்ளை எல்லோரையும் விட மிக்க பலசாலியான ஒரு பிள்ளை வேண்டி மித்திர வருணரைக் கொண்டு ஒரு யாகம் செய்ய அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் காரணத்தை அவர் கேட்க, மித்திர வருணர் ஞானதிருஷ்டியினால் கண்டு ஏதோ தவறு நேர்ந்து விட்டதாகக் கூறித் தன் தவ மகிமையால் அப்பெண்ணை ஆணாக மாற்றிவிட்டார். பெண்ணான இவள் ஆணாக மாறியதும் சுத்யும்னன் என்ற பெயரோடு அரசனானான். ஒருநாள் பரிவாரங்களுடன் காட்டில் வேட்டையாடச் செல்ல அங்கு எல்லோரும் பெண்ணாக மாறி விட்டனர். அதற்குக் காரணம் அவ்வனத்தில் நுழைபவர்கள் பெண்ணாவார் என்ற சிவபெருமானின் சாபம். திரும்பவும் பெண்ணான இவன், சந்திரன் மகனான புதனை மணந்து புரூரவஸ் என்ற மகனைப் பெற்றார். அவன்மூலம் சந்திர வம்சம் தோன்றிற்று. மனுஷக்கு இக்ஷ்வாகு, நாபகன், ரிஷ்டன், நரிஷ்யந்தன், பிருஷத்ரன், திருஷ்டன் என்று பெயர் கொண்ட ஏழு புத்திரர்கள்.

பிருஷத்ரன் ஒரு நாள் காட்டில் வேட்டையாடுகையில் புதர் மறைவில் இருந்த ஒரு மிருகத்தின் மீது அம்பெய்து அதைக் கொன்றபின் அருகில் சென்று பார்க்க, அது ஒரு பசு எனத் தெரிந்தது. பசுவதை செய்ததற்காகத் திடுக்கிட்டிருக்கையில் பசுவை மேய்த்துக் கொண்டிருந்த ரிஷி புத்திரன் ஓடிவந்து, அது மவுலி என்ற ரிஷிக்குச் சொந்தமானது என்றான். ரிஷியின் புதல்வன் பாபரவ்யன் அங்கு வந்த மன்னனைப் பார்த்து பலவாறு இகழ்ந்து பேசினான். அதனால் கோபம் கொண்ட மன்னன் இழிமகனைப் போல் தகாத மொழிகளைப் பேசலாமா? என, ரிஷியின் மகன் மேலும் கோபம் கொண்டு மன்னனை இழிந்தவனாவாய் என்று சபித்தான். அரசன் ரிஷி குமாரனைச் சபிக்க முயல்கையில், அவன் அரசனைச் சாம்பலாக்கிட கோபத்துடன் பார்த்தான். அவ்வமயம் முனிவர் அங்கு வந்து மகனைத் தடுத்து மன்னன் அறியாமல் செய்த பிழையை மன்னிப்பதே கடன் என்று கூறி அரசனிடமும், மகனை மன்னிக்கும்படிக் கூறி மகனை அழைத்துச் சென்றார். பிருஷத்ரனும் அவன் சந்ததியினரும் கிருஷான் என்னும் பெயரால் சிறந்த போர் வீரர்களாய் விளங்கினர்.

29. நாபாகனும், அவன் மகன் பலந்தனும்

மனுபுத்திரன் நாபாகன் ஒரு வைசிய பெண்ணை மணக்க விரும்பினான். அந்த வைசியன் பெரியோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்றும், அதனால் அந்த ஆசையை விடுமாறும் கூறினான். அவனும் தந்தையின் சம்மதத்தைக் கேட்க, அவர் ரிஷிகளிடம் அதற்காக சாஸ்திர சம்மதத்தை ஆராய்ந்து கூறுமாறு கேட்க, அவர்கள் வைசியப் பெண்ணைப் பட்ட மகிஷி ஆக்க முடியாது என்றனர். அப்போது நாபாகன் அவளைத் தூக்கிச் சென்று ராக்ஷச முறைப்படி மணம் செய்து கொள்வதாகக் கூறினான். அதைக்கேட்ட மனு, நாபாகனை, மகனென்றும் பாராமல் தர்மத்தை நிலைநாட்ட போர் செய்ய அப்போது ஆகாயத்திலிருந்து ஒரு ரிஷி இறங்கி வந்து வைசிய தர்மத்தை ஏற்றுக்கொண்ட நாபாகனோடு க்ஷத்திரியனான மனு எப்படிப் போர் செய்யலாம் என்றும் அது தர்மமல்ல என்றும் கூறினார். போர் நின்றது. நாபாகன் அந்த வைசியப் பெண்ணை மணந்து கொண்டு வந்து தந்தையை வணங்கி, அவரது கட்டளை என்ன என்று கேட்க, அவர் வைசியர்களுக்குரிய வியாபாரம், பசுக்களைப் பராமரித்தல் ஆகியவற்றைச் செய்து வருமாறு கட்டளையிட்டார். நாளடைவில் அந்தத் தம்பதியருக்கு பலந்தன் என்ற மகன் பிறந்தான்.

பலந்தன் வரலாறு

பலந்தன் தக்க வயது வந்தவுடன் அவனுக்கு வியாபாரத்தில் நாட்டம் இல்லை. அவன் இமயமலைக்குச் சென்று அங்குத் தவம் செய்து வந்த முனிவர்களை வணங்கினான். அவர்களுள் நீபர் என்ற இராஜரிஷியைத் தரிசித்துத் தனது தாயாதிகள் அனுபவித்து வரும் தனது நாட்டைத் தான் அடைய உதவுமாறு வேண்டினான். அவனுக்கு ரிஷி சகல போர்க்கருவிகளில் வித்தையை உபதேசித்தார். அவன் பகைவரை வென்று நாட்டைக் கைப்பற்றி தந்தையை அந்நாட்டை ஆளுமாறு வேண்டினான். ஆனால், நாபாகன் தனது தந்தை தன்னை வைசியன் என்று கூறிவிட்டதால் தான் வைசியனாகவே வாழ விரும்புவதாகக் கூறி மகனையே நாட்டை ஆட்சி புரியுமாறு கூறி விட்டான்.

பிரபையின் தந்தை வைசியன் இல்லை

அதைக் கேட்ட நாபாசன் மனைவி பிரபை தன் கணவனை வணங்கி அவளுடைய தந்தை உண்மையில் வைசியனல்ல. ஒரு சாபத்தின் காரணமாக அப்படி இருக்க நேர்ந்தது. சாபவிமோசனத்துக்கான காலம் வரும் வரை உண்மையைச் சொல்லக்கூடாது என்று இருந்தேன். இப்போது கூறுவதாகச் சொன்னாள். பிரபையின் தந்தை முன்பு சுதேவன் என்ற அரசனாய் இருந்தார். அவரும் நலன் என்னும் அண்டைநாட்டு மன்னனும் ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் செல்ல அங்கு இருவரும் தனித்தனியே வழியே சென்றனர். வழியில் நலன் தற்செயலால் பிரமதி என்னும் முனிவரின் ஆசிரமத்தை அடைந்து அங்கிருந்த ரிஷிபத்தினியைக் கண்டு மோகித்து அவளைப் பலாத்காரம் செய்ய முற்பட்டான். அப்போது அங்கு வந்த சுதேவன் செய்வதறியாமல் நிற்க, பிரமதி ரிஷியும் அங்கு வந்து சேர நலன் செயலைக் கண்டார். உடனே அவனை எரிந்து சாம்பலாகும்படி சபித்தார்.

தவறு நடப்பதைக் கண்டும், செய்பவனைத் தண்டிக்காமல் நின்ற அரசன் மீது கோபம் கொண்டு ஏன் தண்டிக்கவில்லை என்று கேட்க, சுதேவன் அவர் கோபத்திலிருந்து தப்பிக்க தான் வைசியன் என்று கூற, அதனால் மேலும் அவரை வைசியனாகவே ஆகுமாறு சபித்தார். சாப விமோசனமாக எப்போது அரசன் மகனை ஒரு க்ஷத்திரியன் அபகரித்துச் செல்கிறானோ அப்போது மீண்டும் க்ஷத்திரியனாவாய் என்று சாபவிமோசனம் அருளினார்.

பிரபை தன் வரலாறு கூறுதல்

எனவே, தன் தந்தை வைசியனில்லை என்றும், அவர் மகளாகிய தன்னை மணந்ததால் நாபாகனும் வைசியனில்லை என்றும் கூறினாள். மேலும் தானும் வைசியப் பெண்ணில்லை என்று தன் கதையையும் கூறினாள். கந்தமாதன பர்வதத்தில் சுரதன் என்னும் ரிஷி தவம் செய்து வந்தார். அவர் ஒருநாள் அனுஷ்டானம் முடித்துக் கொண்டு திரும்புகையில் ஒரு கழுகின் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்த, கிளி அவர் அருகில் விழுந்து மூர்ச்சித்தது. அது கண்டு கருணை உள்ளம் படைத்த அவர் மூர்ச்சை அடைந்தார். கிளியின் உடலிலிருந்து ஒரு பெண் தோன்றினாள். கிருபையின் வடிவமாய் தோன்றிய அவளுக்கு கிருபாவதி என்று பெயர் சூட்டினார். இவ்வாறு ரிஷி ஆசிரமத்தில் வளர்ந்து வந்த அவள், ஒருநாள் ஆசிரமத்துக்கு வந்து அகஸ்திய முனிவரின் தம்பியைச் சரியாக உபசரிக்காமல், அவரைப் பார்த்து பரிகாசமாய், அவர் வைசியனைப் போல் காணப்படுகிறார் என்றாள். அதனால் கோபம் கொண்ட அவர் அவளை வைசியக் கன்னியாகும்படி சபித்தார். இதனால் வருத்தமுற்ற கிருபாவதி துறவியின் திருவடி பணிந்து மன்னிப்புக் கோர, அவர் என்றைக்கு அவள் மகன் ராஜ்ஜியத்தைக் கொண்டு வந்து அவனிடம் அளிக்கிறாளோ அன்று அவளுக்குச் சாபவிமோசனம் என்றும், அன்றே அவளுக்கு முற்பிறவி ஞானம் ஏற்படும், என்றும் கூறினார்.

நாபாகன் முடிவு

இவ்வாறு சுதேவன் மனைவி தன் முற்பிறவி வரலாற்றை கூறி தானே அந்தக் கிருபாவதி என்றும் கூறினாள். மேலும், நாபாகனை நாட்டை ஏற்கும் படியும் வேண்ட அவன் தந்தை இட்ட கட்டளையை மீறாமல் தான் வைசியனாகவே இருப்பதாகவும், பலந்தனே நாட்டை ஆளட்டும் என்று கூறி விட்டான். பலந்தன் ஒரு நல்ல நாளில் முடிசூட்டிக் கொண்டு நாட்டைப் பராக்கிரமசாலியாய் ஆண்டிட, மற்ற அரசர்களும் அவனுடன் நட்புடன் நடந்து கொண்டனர். பலந்தன் கணக்கற்ற யாகங்களையும், தானதர்மங்களையும் செய்து புகழ்மிக்க மன்னனாய் வாழ்ந்து வந்தான்.

30. பலவந்தன் மகன் வத்சந்திரன் குகையில் புகை

வத்சந்திரன் இளவரசனாய் இருந்த போது ஒரு சமயம் காட்டிற்கு வேட்டை ஆடச் சென்றான். அங்கு ஆள்நடமாட்டமில்லா ஒரு குகையிலிருந்து புகை வருவதைக் கண்டு அதன் காரணத்தை அறிய அருகிலிருந்த சுவீரன் என்னும் ஆசிரமத்தை அடைந்து அங்கிருந்த முனிவரிடம் அதுபற்றி விசாரித்தான். முனிவர் அவனிடம் நாட்டு நடப்புகளைச் சாரணர்கள் மூலம் அறிந்திருக்க வேண்டும் மன்னன். அந்தக் கடமை சரியாக நடைபெறவில்லை. எனினும், உலக நலன் குறித்து இந்தப் புகை பற்றிக் கூறுகிறேன் என்றார்.

முனிவர் கூறிய செய்தி

அந்தக் குகை குசும்மன் என்னும் அரக்கன் பாதாள லோகத்தில் வசிக்கும் இடத்திற்குச் செல்வதற்கான வழி. அவன் துவஷ்டா என்ற சிற்பி செய்து கொடுத்த பயங்கரமான இரும்புலக்கை ஒன்றை வைத்திருந்தான். அதைக்கொண்டு பல அக்கிரமங்களைச் செய்து தொல்லைகளைத் தேவர்களுக்கும் அளித்து வந்தான். இவன் விதூரதன் என்னும் அரசனின் மகள் முதாவதியை பலவந்தமாய்த் தூக்கிச் சென்றுவிட்டான். விதூரதன் தன் மக்கள் சுனீதி, சுமதி என்ற இருவரையும் அந்த அரக்கனை அழிக்க அனுப்பி வைத்தான். ஆனால், அவர்கள் அரக்கனால் தோற்கடிக்கப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இனி தன்னால் அரக்கனை வெல்ல முடியாது என்றறிந்த மன்னன் அரக்கனை வென்று தன் மக்களை மீட்டுத் தருவோர்க்கு பாதி நாட்டைத் தருவதாகப் பறை அறைவித்தான்.

அசுரனும் உலக்கையும்

அதுகேட்ட வத்சந்திரன் விதூரதனிடம் சென்று அரக்கனைப் பற்றி அவனறிந்த விஷயங்களைக் கேட்டுக் கொண்டதுடன், பாதாள உலகத்திற்குச் செல்லும் வழியையும், இரும்புலக்கையின் சிறப்பையும், அதனை ஒரு பெண் தொட்டுவிட்டால் அது தன் சக்தியை இழந்துவிடும் என்றும் அறிந்து கொண்டான். வத்சந்திரன் பெரும்படையுடன் குசும்மனை எதிர்த்துப் போர் மேற்கொண்டான். தேவர்களும் அவனுக்கு உதவிபுரிய குசும்மனால் வத்சந்திரனை வெல்ல முடியவில்லை. அவன் அரண்மனைக்குச் சென்று இரும்புலக்கைக்குப் பூசை செய்தான். பெண்கள் தொட்டால் இரும்பு உலக்கை தனது சக்தியை இழந்து விடும் என்று இரகசியத்தை அறிந்திருந்த முதாவதி அதைத் தொட்டுக் கும்பிடுவது போல் பலமுறை தொட்டாள். இதனால் சக்தி இழந்த உலக்கையுடன் போரிட்ட குசும்மன் வத்சந்திரனால் கொல்லப்பட்டான்.

வெற்றியும் விடுதலையும்

வத்சந்திரன் முதாவதியை, அவனது மூத்த சகோதரர்கள் சுனீதி, சுமதி ஆகியோரை விடுவித்துக் கொண்டு வந்து விதூரதனிடம் ஒப்புவித்தான். விதூரதன், முதாவதியை வத்சந்திரனுக்கு மணம் செய்வித்து பாதி நாட்டையும் கொடுத்தான். பாதாள உலகிலிருந்து வந்திருந்த ஆதிசேஷன், முதாவதியை இரும்புலக்கையைப் பலமிழக்கச் செய்ததால், அவளுக்குச் சுனந்தை என்ற பெயரையும் இட்டு ஆசீர்வதித்தார்.

31. வத்சந்திரன் வரலாறு

வத்சந்திரன் பேரும் புகழும் கொண்டு சிறப்பாக உலகை ஒரு குடையின் கீழ் ஆண்டான். அவனுக்குப் பன்னிரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள். அவர்களுள் மூத்தவன் பராம்சு தந்தைக்குப் பின் நாடாண்டான். அவனுக்குப் பிறகு அரசுக்கு வந்த பிரஜாதி என்னும் அவன் மகன் தனது புஜ பல பராக்கிரமத்தால் பலன், ஜம்பன் என்னும் அரக்கர்களை வென்று புகழ்பெற்றவன். பிரஜாதிக்கு கனித்திரன் முதலான ஐந்து புத்திரர்கள் தோன்றினர். அவர்களுள் கனித்திரன் முற்றும் துறந்த முனிவரைப் போல் அரசு புரிந்து வந்தான். அவன் ஆட்சியில் மக்கள் மட்டுமின்றி பறவைகள், மிருகங்கள் கூடத் துன்பமின்றி வாழ்ந்து வந்தன. கனித்திரன் தன் தம்பியர்களுக்கு நாட்டை அளித்து அவர்களையே அரசாளச் செய்தான். அவர்களுள் சவுரி என்பவனுக்கு விஷ்வவேதி என்னும் ஒரு கொடிய மந்திரி இருந்தான். அவன் ஒரு நாள் சவுரியிடம், பெயரில் மட்டும் சவுரியாய் இருந்தால் போதாது. இந்த நாடு முழுவதையும் ஆளும் தகுதியும், வீரமும் உங்களிடம் மட்டும்தான் இருக்கின்றன என்று கூறினான். இவ்வாறு விஷ்வவேதி, சவுரிக்கு அவர் மூத்த தமையன் கனித்திரன் மீது அதிருப்தி ஏற்படச் செய்தான். அவ்வாறே மற்ற சகோதரர்களும் அதிருப்தி கொண்டனர்.

அந்தத் துன்மந்திர விஷ்வவேதி நான்கு சகோதரர்களின் புரோகிதர்களையும் வசப்படுத்திக் கனித்திரனைக் கொல்ல ஓர் அபிச்சார யாகம் செய்தான். அதிலிருந்து தோன்றிய நான்கு பூதங்களும் கனித்திரனைக் கொல்லச் சென்றன. அவன் செய்த புண்ணிய பலனாய் பூதங்கள் அவனை அணுக முடியாமல் திரும்பிவந்து துன்மந்திரி விஷ்வவேதியையும், யாகத்திற்குதவிய புரோகிதர்களையும் கொன்று தின்று விட்டன. இதனை அறிந்த கனித்திரன் மந்திரியும் புரோகிதர்களும் தன் காரணமாகவே இறந்ததாகக் கொண்டு நாட்டைத் தம்பியிடம் ஒப்படைத்துவிட்டுத் தவம் செய்ய கானகம் சென்றுவிட்டான். முந்நூறு ஆண்டுகள் தவம் செய்து நற்கதி அடைந்தான். கனித்திரனுக்கு பின் அவன் மகன் க்ஷபன் தர்மம் தவறாமல் நாட்டை ஆண்டு வந்தான். அவன் மகனான விலிம்சன் நீதிநெறியுடன் அரசாண்டு வீர சுவர்க்கம் அடைந்தான். அவன் மகனுக்குப் பாட்டன் பெயரான கனித்திரன் என்றே பெயர். அவன் தரணியை தனிப்பெரும் மன்னனாய் ஆண்டு மறைந்தான். அவனுக்குப் பிள்ளைப் பேறு இல்லாததால் அக்கினியை ஆராதித்து அவிசு கொடுக்க சுத்தமான மாமிசம் தேவைப்பட வேட்டைக்குச் செல்ல அங்கொரு மான்  அவன் முன் தோன்றி தன் மாமிசத்தை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிட, அது தனக்கு மக்கட் பேறில்லை என்றும், புத்திரனுக்காகச் செய்யும் யாகத்தில் தானமானால் அந்தப் புண்ணிய பலனாய் அடுத்த பிறவியிலேனும் பேறு ஏற்படுமென்று கூறி மாமிசத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறிற்று.

அப்போது அங்கு மற்றொரு மான் வந்து தனக்குத் துன்பம் தாங்க முடியவில்லை. எனவே, தன்னைக் கொல்லுமாறு வேண்டியது. அதன் துன்பத்திற்கான காரணத்தைக் கேட்க அது கூறிற்று. அது தனியாகத் திரிந்த போது என் துயரமே இருந்தது. மனைவி வந்ததும் இரண்டு மடங்காயிற்று. பிள்ளைகள் பிறக்கப் பிறக்க துயரம் அத்தனை மடங்குகள் அதிகமாயிற்று. அந்தப் பாரத்தை தாங்க முடியவில்லை. எனக்கு விடுதலை அளிப்பதன் மூலம் புண்ணியமே கிடைக்கும் என்றது. மன்னன் யோசித்தான். மான்களின் கூற்று நியாயமானது. இல்லறத்தில் ஈடுபட்டு வைராக்கியம் கற்றவன் எளிதில் துறவறத்தை ஏற்க முடியும். ஆனால், அதிலேயே மூழ்கி விட்டால் துன்பத்தைக் காண முடியும் என்று அறிந்தான். தவத்தின் பயனாகவே மகனை அடைய விரும்பி இந்திரனைக் குறித்துத் தவம் செய்ய இந்திரன் தன் அம்சமாய் ஒரு குழந்தையை அளித்தார். அதன் பெயர் பலாசுவன்.

32. பலாசுவன் என்னும் வீரபுருஷன்

பலாசுவனின் புத்திக் கூர்மையையும், வீர பராக்கிரமத்தையும் கண்டு மன்னன் மகிழ்ந்தான். பலாசுவனின் இளவயதிலேயே மன்னன் அவனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தவம் செய்யச் சென்றான். பலாசுவன் திக்விஜயம் செய்து எங்கும் வெற்றிபெற்று தனிப்பெரும் மன்னனாய் புகழ்பெற்று விளங்கினான். எனினும் சிறிதுகாலம் கழித்து பொறாமை கொண்ட பல மன்னர்கள் ஒன்றுகூடி அவனை எதிர்த்துப் போரிட அவன் பகைவரை முறியடித்தான். போரின் முடிவில் பலாசுவன் சேனையும் அழிந்துவிட அவன் மிகவும் வருத்தமுற்றான்.

கரந்தமன்

ஆனால் அவன் கைவிரல் இடுக்குகளிலிருந்து இரத, கஜ, துரக, பதாதி ஆகிய நால்வகைச் சேனைகளும் உண்டாயின. அதனால் அவனுக்கு கரந்தமன் என்னும் பெயர் உண்டாயிற்று. கரந்தமன் மேலும் புகழோடு அரசாண்டு வந்தான். அப்போது வீரியசந்திரன் என்னும் அரசன் தன் மகள் வீரை என்பவளுக்குச் சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்து கரந்தமனுக்கும் ஓலை அனுப்பினான். கரந்தமன் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வீரை அவனுக்கே மாலையிட்டாள். அப்போது சுயம்வரத்துக்கு வந்திருந்த மற்ற மன்னர்கள் கரந்தமனுடன் போரிட்டுத் தோற்று ஓடினர். அவன் இந்திர அம்சமாகையால் அவனை யாராலும் எதிர்க்க இயலவில்லை. கரந்தமன் தம்பதியருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

33. அவீக்ஷிதன்

கரந்தமன், தீய கிரகங்களின் வீட்சணியம் ஏதுமில்லாத தனது மகனின் ஜாதகம் கண்டு அவீக்ஷிதன் என்று பெயர் வைத்தான்.

அவீக்ஷிதனும் சுயம்வரங்களும்

அந்த அவீக்ஷிதன் புஜ, பல, பராக்கிரமம் மிக்கவனாய், சத்தியம், சாந்தகுணம் நிறைந்து இருந்தான். ஆனால், அவனுக்கு இல்லற வாழ்வில் நாட்டமில்லை. எனவே அவன் எங்கு சுயம்வரம் என்றாலும் அங்குச் சென்று, வென்று, ராஜகன்னிகையைத் தூக்கி வந்து, அவளை அவள் விரும்புபவனுக்குத் திருமணம் செய்து வைத்தான்.

அவீக்ஷிதன் கைது

அடுத்து, விசால நாட்டு மன்னன் மகள் வைசாலினியின் சுயம்வரத்துக்குச் சென்றான். அவன் வைசாலியைக் கவர்ந்து செல்கையில் மற்ற மன்னவர்களை எதிர்த்தான். அவர்கள் தோற்று ஓடுபவர் போல் ஓடி மறுபடியும் வந்து நாலா பக்கமும் சூழ்ந்து கொண்டு, அவீக்ஷிதனைத் தாக்கிட அவன் மூர்ச்சித்து விழுந்தான். அப்போது அவனைக் கைது செய்து கடுஞ்சிறையில் அடைத்து விட்டனர். வைசாலன் தன் மகளை வேறு ஒரு ராஜகுமாரனுக்கு மணம் செய்விக்க எண்ணி பெண்ணின் மனதை அறிந்து முடிவு செய்ய எண்ணினான். ஆனால் வைசாலினியோ உறுதியாக அவீக்ஷிதனைத் தவிர வேறு யாரையும் மணக்கமாட்டேன் என்றாள். இதனால் கோபம் கொண்ட வைசாலன் ஒருநாள் ஜோதிடர்களை அழைத்து இன்றைக்கு மகளை வேறொரு அரசகுமாரனுக்கு மணம் செய்து கொடுத்து விடுகிறேன் என்றான். ஜோதிடர்கள் கிரகங்களை ஆராய்ந்து அன்று கிரகநிலை மோசமாக இருப்பதால் திருமணம் செய்தால் பல கெடுதல்கள் ஏற்படும் என்றனர்.

இந்நிலையில் அவீக்ஷிதன் விசால தேசத்தில் சிறைப்பட்டிருக்கிறான் என்ற செய்தி கரந்தமன் காதுகளுக்கு எட்ட, வீரை அதைக்கேட்டு மிக்கத் துயரமடைந்தாள். ஆயினும், பல சூழ்ச்சிக்காரர்களை எதிர்த்து நின்ற மகனின் வீரத்தை எண்ணிப் பெருமிதம் அடைந்தாள். கரந்தமன் அவர்களைப் பழிவாங்கப் பெரிய படையோடு புறப்பட்டான். எதிரிகளுடன் போரில் கரந்தமன் வெற்றி வீரனாய் விசால நாட்டில் புக, வைசாலன் அவனை வரவேற்று அரியாசனத்தில் அமர்த்தி, அவீக்ஷிதனை விடுதலை செய்து அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.

அவீக்ஷிதன் விடுதலை

விசாலன் தன் பெண் விரும்பியபடியே அவனை அவீக்ஷிதனுக்கு மணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்க, கரந்தமனும் அதனை அங்கீகரித்தான். ஆனால், அவீக்ஷிதனோ எவரையும் மணம் செய்து கொள்ள மாட்டேன். ஏனெனில், தனக்கு இல்லற வாழ்க்கையில் இச்சை இல்லை என்று கூறினான். இதைக் கேட்ட பின்னும் வைசாலினி அவீக்ஷிதனைத் தவிர வேறு எவரையும் மணந்து கொள்ள மாட்டேன் என்று அவரிடம் சொல்லி விடுமாறு தந்தையை வேண்டினாள். அவள் வைராக்கியத்தைக் கண்ட கரந்தமனும் தனக்கும் மட்டிலா மகிழ்ச்சி கொண்டு மகனிடம் அவளை மணந்து கொண்டால் வாழ்வில் சுகம் ஏற்படும் என்று அறிவுரை கூறினார்.

வைசாலியின் உறுதிமொழி

அவீக்ஷிதன் சம்மதியாதலால், கரந்தமன் வேறு வழிதோன்றாமல் விசால மன்னனிடம் விடைபெற்று தன் நாடு திரும்பினான். அவீக்ஷிதனையே மணக்க மனஉறுதி கொண்ட வைசாலினி அடுத்த பிறவியிலாவது அவனைப் பதியாய் பெற எண்ணி காட்டில் சென்று தவம் புரியலானாள். அவள் கடுந்தவம் பலன் தராததால் அவள் உயிரை விட தீர்மானித்தாள்.

தேவதூதன்

தேவர்கள் வைசாலினியின் மனஉறுதியை மெச்சி ஒரு தூதுவனை அவளிடம் அனுப்பி உயிரை விடாமல் இருக்க முயன்றனர். தேவதூதன் வைசாலினியிடம் அவள் வயிற்றில் பூவுலகை ஆளப்போகும் ஒரு பேரரசன் பிறக்கப் போகிறான் என்றும், அவன் அயச்சங்கு என்ற கொடிய அரக்கனைக் கொல்வான் என்றும் நீதிநெறி தவறாமல் தர்மத்தின் காவலனாய் தேவர்களையும் மகிழ்ச்சியுறச் செய்வான் என்றும் கூறினான். அதுகேட்ட வைசாலினி தான் பூவுலகில் அவீக்ஷிதனையன்றி, வேறு எவரையும் மணப்பதில்லை என்று உறுதியுடன் இருப்பதாகவும், அவீக்ஷிதன் பிரம்மச்சாரியாக இருக்க உறுதி கொண்டிருப்பதையும் கூறி, எப்படிக் குழந்தை பிறக்கும் என்று கேட்டாள்.

தேவரகசியம்

தேவதூதன் புன்னகை புரிந்து அது தேவரகசியம் என்றும் உண்மையாக அவீக்ஷிதனை அவள் மணம் புரிந்து நன்மகனைப் பெறுதல் சம்பவிக்கும் என்று கூறி மறைந்தான்.

வீரை மேற்கொண்ட விரதம்

அவீக்ஷிதனின் தாயான வீரை தான் குடும்ப நலன் கருதி ஒரு விரதம் மேற்கொள்ளுவதாகவும் அதன் முடிவில் யார் எது கேட்டாலும் கொடுக்கப் போவதாகவும் கணவனிடம் கூறி, கருவூலத்தில் உள்ள செல்வத்தில் பாதியைப் பெற்றாள். பின்னர் தன் மகன் அவீக்ஷிதனிடம் விரதம் பற்றிக் கூறி தானம் வழங்கும் காரியத்தை அவனே கவனிக்க வேண்டும் என்றும், அப்போது தானம் பெறுபவர்கள் எவ்வகையிலும் மனச்சஞ்சலம் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினாள். அவீக்ஷிதன் கட்டளையை அணுவளவும் பிசகாமல் நிறைவேற்றுவதாகக் கூறினான். அதற்குப் பின் அரசி விரதத்தை ஆரம்பித்தாள். அவ்வமயம் நாட்டின் நலனில் அக்கறை கொண்ட மந்திரி அரசனிடம் இளவரசன் அவீக்ஷிதன் மணம் நடைபெறவில்லை. நாட்டை ஆள அடுத்த வாரிசு இல்லை என்றால் நாட்டைப் பகைவர்கள் பங்கு போட்டுக் கொள்வார்கள். அதைத் தடுக்க ஆவன செய்யுமாறு கூறினான். அதேசமயம் ராணியின் விரதம் முடிவடைந்ததைக் காட்டும் முரசொலி கேட்டது. அரசி தானம் வழங்க இருக்கிறார். யார் என்ன வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு அனைவர் காதிலும் ஒலித்தது.

அரசன் கேட்ட தானம்

அரசன், அமைச்சருடன் தானம் வழங்கப்படும் இடத்தில் மகன் முன்னால் வந்து நின்றார். அதைக்கண்டு அவீக்ஷிதன் திடுக்கிட்டு என்ன வேண்டும் என்று கேட்டான். வாக்குத் தவறக்கூடாது. என்ன கேட்டாலும் தர வேண்டும் என்றான் மன்னன். தங்களுக்குத் தேவையானதைக் கேளுங்கள். என்ன வேண்டும் கூறுங்கள் என்றான் அவீக்ஷிதன். அப்போது மன்னன் உன் மகன் முகத்தை நான் பார்க்க வேண்டும். அதுவே நான் வேண்டும் பொருள் என்றான்.

அவீக்ஷிதன் தரும சங்கடம்

அவீக்ஷிதன் தரும சங்கடத்தில் சிக்கித் தவித்தான். தன் உறுதிமொழியையே மீறுவதா? அல்லது கொடுத்த வாக்கை மீறுவதா? என்று யோசித்துப் பின்னர் தன் வைராக்கியத்தை மீறினாலும் தாயின் விரதத்திற்குப் பங்கம் ஏற்படக் கூடாது என்ற முடிவுக்கு வந்தான். தந்தையிடம் தங்கள் விருப்பப்படி செய்கிறேன். சிறிது அவகாசம் கொடுங்கள் என்று கேட்டான். பெற்றோர் மகிழ்ச்சியுற்றனர். தனக்கு ஏற்ற மனைவியை எப்படிக் கண்டுபிடிப்பது என்று சிந்தித்த வண்ணம் அவன் காட்டு வழியில் சென்று கொண்டிருக்கையில் ஓர் அரக்கன் கொடி போன்ற ஒரு பெண்ணைத் தூக்கிச் செல்வதைக் கண்டு, அரக்கனே நில். என் பாணத்திற்குப் பதில் சொல்லிவிட்டுச் செல் என்று கூற, அரக்கன் பெண்ணைக் கீழே வைத்து விட்டு ஓடிப்போய் ஒரு மரத்தை வேருடன் பிடுங்க முயற்சித்தான்.

அரசன் அரக்கனைக் கொல்லல்

அவ்வமயம் அந்தப் பெண்ணை அவள் யாரென்றும், எவ்வாறு அரக்கன் கையில் சிக்கினாய் என்றும் கேட்க, அவள் தான் அவீக்ஷிதன் மனைவி. கானகத்தில் தவம் செய்து கொண்டிருந்த தன்னை அரக்கன் பலவந்தமாகத் தூக்கிப் போக முயல்கிறான். தன் கணவர் எங்கிருக்கிறாரோ? அவர் எப்படி வந்து தன்னைக் காப்பாற்றுவாரோ? என்று கூறி அழுதாள். அவீக்ஷிதனுக்குத் தடுமாற்றம். ஒன்றும் புரியவில்லை. எனினும், அந்த அரக்கனைக் கொன்று அவளைக் காப்பாற்றினான். அப்போது தேவர்கள் தேவலோகத்தின் பயம் நீங்கியது. அசுரனை வென்ற உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டனர். அவன் தன் தந்தையின் கோரிக்கையை நிறைவேற்ற வழிகாட்டுமாறு வேண்டினான். அப்போது தேவேந்திரன், வைசாலினியை உனக்குத் தெரியவில்லையா! இவளை விடச் சிறந்த மனைவி கிடைப்பாளா? இவளையே மணந்து சகல சவுபாக்கியங்களையும் பெறுவாயாக என்று வாழ்த்தினான்.

அவீக்ஷிதன் திருமணம்

வைசாலினி அவீக்ஷிதனைப் பணிந்து தன்னை ஒரு விஷப்பாம்பு பாதாளம் கொண்டு சென்றதையும், நாகராஜன் பூவுலகை ஆளும் ஒரு புதல்வனை நான் அடைவேன் என்று ஆசிர்வதித்து பூவுலகில் கொண்டு வந்து விடுகையில் என்றைக்காவது அவரது பிள்ளைகளுக்கு ஆபத்து நேரும்போது காப்பாற்றுமாறும் கேட்டுக் கொண்டாள். அவ்வாறே என்று வாக்களித்தான். என்றாவது ஒருநாள் தன் பதியாகிய அவீக்ஷிதனை அடையமுடியுமென்றும் நம்பிக்கையில் இருந்தாள். இன்று நம்பிக்கை வீணாகவில்லை என்று கூறியவள் உடனே அவளை காந்தர்வ முறைப்படி விவாகம் செய்து கொள்ள வேண்டினாள். பெற்றோர் இன்றித் திருமணம் முறையல்ல என்று எண்ணிய அவீக்ஷிதன் முன் ஒரு கந்தர்வன் தோன்றி வைசாலினி பாமினி என்றும் தன் மகளே என்றும், அவள் ஒரு சமயம் ஒரு முனிவரை அவமதித்ததன் காரணமாக மானிடப்பிறவி அடைந்தாள் என்றும் அவீக்ஷிதனால் விமோசனம் அடைந்தாள் என்றும் கூறி இருவரையும் விமானத்தில் ஏற்றிக்கொண்டு கந்தர்வலோகத்துக்கு அழைத்துச் சென்று விதிப்படி அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தான். இருவரும் கந்தர்வ லோகத்தில் எல்லையற்ற இன்பங்களைத் துய்க்க அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. தும்புரு மகரிஷி அங்கு வந்து அக்குழந்தைக்கு ஜாதகர்மம், நாமகரணம் ஆகியவற்றைச் செய்து வைத்தார். அக்குழந்தை பிறந்தபோது மந்த மாருதம் வீசியதால் அதற்கு மருத்து என்று பெயர் இட்டனர்.

வாக்கு காப்பாற்றப்பட்டது

சிலநாட்கள் கழித்து அவீக்ஷிதன் கந்தர்வ ராஜனிடம் விடைபெற்றுக் கொண்டு தன் நாடு திரும்பிவந்து தந்தையிடம் குழந்தையைக் கொடுத்து தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றியதாகக் கூறினான். தன் மனைவி வைசாலினியும் கடும் தவம் புரிந்து தன் உறுதிமொழிப்படி நம்பிக்கையுடன் தவம் செய்து என்னை மணந்து கொண்டதையும் கூறினான். கனித்திரனும், வீரையும் பெருமகிழ்ச்சி கொண்டனர். கற்பின் வலிமையால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து விட்டாள் எனக்கூறி அவளைப் பாராட்டி வாழ்த்தினர்.

34. மருத்தன், நரிஷ்யந்தன் தந்தை வேட்டல், மகன் மறுத்தல்

அவீக்ஷிதனின் மகன் மருத்தன் பெரும் பேரரசனாய் விளங்கினான். ஞானம் மிகுதியாய்ப் பெற்றிருந்த மருத்தன் எல்லாக் கலைகளையும் பெற்றுப் பேரரசனாய் விளங்கும்போதே தான் வனம் சென்று தவம் செய்ய விரும்பிய கனித்திரன் அவீக்ஷிதனை அழைத்து, நாட்டின் பொறுப்பை ஏற்றுத் தன்னை வனம் சென்று தவம் செய்ய அனுமதிக்குமாறு வேண்டிட, தான் சிறைப்பட்டதால் நாடாளும் தகுதியை இழந்து விட்டேன் என்றும் நாடு வேண்டாம் என்றும் மறுத்து விட்டான்.

பேரன் மருத்தன் அரசனாதல்

தந்தையே தனயனுமாவான் என்று நீதி நூல்கள் கூறுவதால் தான் பெற்ற வெற்றி அவீக்ஷிதனின் வெற்றியேயாகும் என்றும், அதனால் நாட்டை ஏற்றுக்கொள் என்றான். எனினும் மகன் நாட்டை ஏற்க மறுத்ததால் சிறிது காலம் கழித்து பாட்டன் பேரனாகிய மருத்தனுக்கு பட்டம் கட்டிவிட்டுக் கானகம் சென்று தவம் புரிந்து இந்திரலோகம் அடைந்தான். மருத்தன் நீதி தவறாமல் நாடாண்டான். யாகாதிகள் மூலமும் புகழ்பெற்று விளங்கி வந்தான்.

முனிவரின் வேண்டுகோள்

ஒருநாள் ஒரு முனிவர் மருத்தனை அணுகி, உனது பாட்டி வீரையால் அனுப்பப்பட்டு இங்கு வந்துள்ளேன். பாதாளத்திலிருந்து பாம்புகள் வெளிவந்து காட்டில் வாழும் முனிவர்களுக்குத் தொல்லைகள் தருகின்றன. கொடிய பாம்புகள் ஏழு முனிவர்களைக் கொன்று விட்டன. நீர்நிலைகள் எல்லாம் பாம்புகளால் விஷமாகி விட்டன. பாம்புகளைக் கொன்று முனிவர்களைக் காப்பாற்று. இல்லாவிடில் நரகத்தை அடைவாய் என்றார்.

தந்தைக்கும் மகனுக்கும் போர்

மருத்தன் ரிஷிபுத்திரர்களைப் பிழைப்பிக்கவும், பாம்புகளைக் கொல்லவும் பிரதிக்ஞை செய்து யமாஸ்திரத்தைப் பாதாளலோகத்தை நோக்கி எய்தான். அதனால் பயந்த நாகங்கள் மருத்தன் தாய் நாகலோகத்தில் இருந்தபோது ஆபத்து காலத்தில் அவர்களைக் காப்பதாகக் கூறியுள்ளதால் அவர்கள் அவீக்ஷிதனிடம் சரணடைந்து காக்க வேண்டினர். தந்தையும், மகனும் தம் வாக்கைக் காப்பாற்றிக் கொள்ள போரில் இறங்கினர். அப்போது எல்லா ரிஷிகளும் தோன்றி இருவரையும் போரை நிறுத்துமாறு கட்டளையிட்டதுடன் தமது தவபலத்தால் இறந்தவர்களை எழுப்பித் தருவதாகவும் கூறினர். அப்போது கரத்தமன், வைசாலினி ஆகியோரும் விண்ணிலிருந்து வந்து தந்தையையும், மகனையும் பாராட்டினர். மேலும் அவர்கள் ஆட்சியில் தருமம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை வீணாகவில்லை என்று கூறி சர்வமங்களம் ஏற்பட ஆசிர்வதித்தனர். மருத்தன், வைகர்ப்பி, பிரபாவதி, கைகேயி, லிசாந்திரி, சுகேஷி, வஷஸ்மதி முதலிய பெண்களை மணந்தான். அவனுக்குப் பிறந்த பதினெட்டுப் புதல்வர்களில் மூத்தவன் நரிஷ்யந்தன்.

நரிஷ்யந்தன்

நரிஷ்யந்தன் தன் முன்னோர்களின் வரலாறுகளைக் கேட்டுத் தான் அவர்களை விட மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்று முயற்சி செய்தான். யாகங்களில் அவன் கொடுத்த ஏராளமான தட்சணைகளைப் பெற்று வளமுடன் வாழ்ந்து வந்தான். அவன் ஆட்சிக்குச் சமமாய் வேறு ஒன்றைச் சொல்ல முடியாது என்று எல்லாரும் போற்றினர்.

35. தமனின் பழிக்குப் பழி தமன் பிறப்பு

நரிஷ்யந்தன் இந்திரசேனை என்பவளை மணந்தான். அவள் கருவுற்ற போது அக்கரு ஒன்பது ஆண்டுகாலம் அவள் வயிற்றிலேயே தங்கிவிட அவன் ஜோதிடர்களைக் கொண்டு கிரகங்களைப் பற்றி ஆராய அவன் பிறந்தது முதலே எல்லோரையும் அடக்கி ஆள்வான் என்று தெரியவந்தது. சிறிதுகாலத்தில் குழந்தை பிறந்தது. அதற்குத் தமன் என்று பெயரிட்டனர். அவன் வளர்ந்து தக்கவயதில் விருஷபர்வாவிடமிருந்து வில்வித்தையையும், சக்தியிடமிருந்து அனைத்து வேதங்களையும், ரிஷ்டி சேனனிடமிருந்து யோக கலைகளையும் கற்றான்.

சாருவர்மன்

தசார்ணவ நாட்டு மன்னன் சாருவர்மன் தன் மகள் சுமனையை தமனுக்குத் திருமணம் செய்ய விரும்பினாலும், ராஜ தர்மப்படி சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்தான்.

சுமனை கடத்தப்படல்

ஆனால் சுயம்வரத்துக்கு முன்னாலே மகாநந்தன், வபுஸ்மான் என்னும் இரண்டு மன்னர்கள் நள்ளிரவில் அந்தப்புரத்தில் புகுந்து சுமனையைத் தூக்கிச் சென்று விட்டனர். அப்போது தமன் தன்னை வரித்த அவளைக் கள்ளத்தனமாய் தூக்கிச் சென்ற இருவரையும் எதிர்த்துப் போர் புரியத் தயாரானாள். அப்போரில் தமன் மகாநந்தனைக் கொன்று, வபுஸ்மானை மூர்ச்சையாகும்படி அழித்து வீழ்த்திக் கொல்லாமல் விட்டுவிட்டான்.

திருமணம்

பிறகு சாருவர்மன், சுமனையைத் தமனுக்கு முறைப்படி மணம் செய்து வைத்தான். தமன் மனைவியுடன் பெற்றோர்களை வணங்கினான். நரிஷ்யந்தன் தன் மகனுக்குப் பட்டம் கட்டி விட்டு மனைவியுடன் தவம் செய்யக் கானகம் சென்றான். காட்டில் தவம் செய்து கொண்டிருந்த நரிஷ்யந்தனை ஒரு நாள், மூர்ச்சித்து வீழ்ந்ததால் கொல்லாமல் விடப்பட்ட வபுஸ்மான் கண்டு அதர்மமாக அவரைக் கொன்று விட்டான். இந்திரசேனை நியாயங்கள் கூறித் தடுத்தும் அவன் கேட்கவில்லை. இந்த நிகழ்ச்சியை அறிந்த வேடர்கள், மற்றும் சிலர் அங்கு வந்து கூடினர். அவர்களிடம் இந்திரசேனை தனித்திருந்த தவம் செய்து வந்த தந்தையைக் கொன்ற பாதகனைக் கொன்று பழி வாங்க வேண்டியது அரசன் கடமை என்று தமனிடம் கூறுமாறு அனுப்பினான்.

பழிக்குப் பழி

இஃதறிந்த தமன், தந்தையைக் கொன்றவனின் இரத்தத்தால் அவருக்குத் தர்ப்பணம் செய்வதாகவும், அவன் மாமிசத்தைப் பிண்டமாக அளிப்பதாகவும் சூளுரை கூறிப் படைகளுடன், வபுஸ்மானுடன் போர் செய்தான். பலநாட்கள் போர் நடந்தது. இறுதியில் வபுஸ்மானின் ஏழு பிள்ளைகளையும் அவனுடைய சேனாதிபதிகளையும் கொன்று வபுஸ்மானை வீழ்த்தி அவன் தலைமுடியைப் பிடித்து ஒரே வீச்சால் அவன் தலையை வெட்டி சபதத்தை நிறைவேற்றினான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

இந்த மார்க்கண்டேய புராணம் புண்ணிய பலன்களை தர வல்லது. தர்மவழி காட்டி, மோக்ஷ சாம்ராஜ்ஜிய கதவுகளைத் திறந்துவிடும்.

மார்க்கண்டேய புராணம் முடிவுற்றது.

 
மேலும் மார்க்கண்டேய புராணம் »
temple news
1. தோற்றுவாய்: 18 புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணம் 9000 ஸ்லோகங்கள் கொண்டது. வியாசரின் சீடர்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar