பதிவு செய்த நாள்
30
மே
2012
03:05
1. தோற்றுவாய்: மகாபுராணங்களில் வாமன புராணம் ஒன்று. இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது.இந்த வாமன புராணத்தில் பூர்வபாகம், உத்தரபாகம் என இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. தொண்ணூற்றைந்து அத்தியாயங்கள் உள்ளன. இது ராஜசிக புராணம், படைப்பு (அ) சிருஷ்டி விவரங்கள் தந்து, பிரம்மாவின் படைப்புப் பற்றிப் பெரிதும் விளக்குபவை ராஜசிக புராணங்கள் ஆகும்.
நாரதர் ஒரு சமயம் புலஸ்திய மகரிஷியிடம் வாமன புராணம் பற்றிக் கூற வேண்ட, புலஸ்தியர் வாமன புராணம் பற்றிக் கூறலானர். வாமனம்-குள்ளம்; வாமனன்-குள்ளன். மூவடி பலியிடம் கேட்டு யாசித்த வாமனின் (விஷ்ணு) வரலாறு வாமனாவதாரக் கதையாகும். வாமன புராணத்தில் மேலும் பல வரலாறுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
வாமன ஜெயந்தி மகாத்மியம் பற்றி புலஸ்தியர், புரட்டாசி மாதம், சுக்கிலபக்ஷ துவாதசி அன்று திருவோண நட்சத்திரத்தில் பகவான் விஷ்ணு வாமனனாக அவதரித்தார். இந்த வாமன துவாதசி அன்று செய்யப்படும் தானம் அனைத்துப் புண்ணியமும் தரும். இருமுறை வாமனனாகப் பெருமாள் அவதரித்தார். மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூவடி மண் கேட்டு ஓங்கி உலகளந்த வரலாறு அனைவரும் அறிந்ததே. அதற்கு முன்பு ஒரு தரம் துந்து என்ற அரக்கனை அழிக்கவும் வாமனாவதாரம் நிகழ்ந்த வரலாறு ஒன்றும் உள்ளது. இது விஷ்ணுவின் முதல் வாமனாவதாரம் எனப்படுகிறது.
2. துந்து அரக்கனும், வாமனனும்
தனு, காசிய முனிவர் தம்பதிகளின் மகன் துந்து என்னும் அரக்கன். அவன் பிரம்ம தேவனைக் குறித்துக் கோரத்துவம் செய்து தேவர்களால் தனக்கு மரணம் ஏற்படாதவாறு வரம் பெற்றான். துந்து இந்திரனை வென்று அப்பதவியைப் பெற்றான். இந்திரன் தேவர்களுடன் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள பிரம்மாவின் இருப்பிடமாகிய சத்தியலோகம் சென்று அடைந்தான். அதை அறிந்த அரக்கன் துந்து படைத்தலைவனிடம் பிரம்மலோகம் அடைந்து தேவர்களைத் துரத்தித் தங்க இடமின்றி செய்ய வேண்டும் என்றான். பிரம்மலோகம் செல்லும் வழியில் ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டங்கள் பற்றி அவர்கள் எடுத்துரைத்தனர். மேலும் அவனுக்கு வரங்கள் அளித்த பிரம்மாவின் இருப்பிடத்தின் மீது போர் தொடுத்தால் நல்லதல்ல என்று அறிவுரை கூறினர். அப்போது துந்து தனக்குப் பிரம்மலோகத்தை வெற்றிக்கொள்ள ஆவல் உள்ளது. எத்தகைய புண்ணியம் செய்தால் அங்குச் செல்லமுடியும். இந்திராதி தேவர்கள் எவ்வாறு செல்ல முடிந்தது. என்றெல்லாம் கேட்க, சேனாபதி, குருவாகிய சுக்கிராச்சாரியாரைக் கேட்டுப் பாருங்கள் என்று உபாயம் கூறினார். அவ்வாறே அரக்கன் சுக்கிராச்சாரியாரை அடைந்து பிரம்மலோகம் செல்ல என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, அவர் இந்திரன் நூறு அசுவமேத யாகங்கள் செய்து அந்தச் சக்தியை அடைந்தான் என்றார். உடனே துந்துவும் நூறு அசுவமேத யாகங்கள் செய்யும் முயற்சியில் ஈடுபட்டான்.
தேவர்கள் துந்து செய்யும் அசுவமேத யாகம் பற்றிய யாகசாலையிலிருந்து வரும் தூபவாசனையினால் அறிந்து மகாவிஷ்ணுவை அடைந்து தங்கள் கவலையை வெளியிட்டு, தங்களைக் காத்திடுமாறு வேண்டினர். அவன் மூவுலகங்களையும் வென்று, பிரம்மலோகத்தையும் பற்றிட யாகம் நிகழ்த்துவது பற்றியும் எடுத்துரைத்தனர். விஷ்ணு அவர்களுக்கு அபயமளித்து அனுப்பிவிட்டு அரக்கனை வெல்லக்கூடிய அபாயம் பற்றிச் சிந்தித்தார். உடனே ஓர் அந்தணர் வாமனரூபம் கொண்டு தேவிகா நதியில் மூழ்கியும், எழுந்தும் கால்கைகள் மேலே தோன்ற இறப்பதற்குத் தயாராகுபவன் போல் காட்சி அளித்தார். இந்தக் காட்சியைக் கண்ட துந்து, மற்றும் புரோகிதர்கள் அனைவர்களும் யாகக்காரியங்களை விட்டு அந்த வாமனனைக் காப்பாற்ற விரைந்தனர். இறுதியில் அவ்வாமனனை நீரிலிருந்து வெளியே எடுத்து உபசாரங்கள் செய்தனர். அடுத்து, அந்த வாமனன் உயிர்விட எண்ணிய காரணம் அறிய பலவிதமான கேள்விகளைக் கேட்டனர். வாமன பிராமணன் உடல் நடுங்கிக் கொண்டே தன் வரலாற்றைக் கூறத் தொடங்கினான்.
வாமனன் கூறிய வரலாறு
பிரபாசன் என்ற மகாவித்வானுக்கு நானும், என் தமையன் நேத்ரபாஸனும் இரு புத்திரர்கள். எங்கள் தகப்பனார் மரணமடைந்து, காரியங்கள் முடிந்த பிறகு வீட்டைப் பங்குபோடுமாறு கேட்க, என் அண்ணன் வாமனன், கூனன், நொண்டி, அலி போன்றவர்களுக்குச் சொத்தில் பங்கு கிடையாது. போட்டதைச் சாப்பிட்டு விட்டு சும்மா இருக்க வேண்டும் என்றான். வாமனனுக்குச் சொத்து கிடையாது என்பது என்ன நியாயம் என்று கேட்க, அவன் கோபம் கொண்டு என்னை இந்நதியில் இழுத்துத் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டான் என்று கூறினான். இப்போது உங்கள் தயவினால் உயிருடன் மீண்டேன் என்று நன்றி கூறி அவர்களெல்லாம் யார்? எவர்? என்று கேள்வி கேட்டான். பிராமணர்கள் தாங்கள் பிருகு வம்சத்தினர் என்றும், அவர் துந்து என்னும் மகாவீரன் என்னும் தாதா என்றும், இங்கு அசுவமேத யாகம் நடத்துபவர் இவரே என்றனர். மேலும் துந்துபியிடம் அந்த வாமனனுக்கு ஒரு வீடு, மற்றும் பொன்னும், பொருளும் அளிக்குமாறு கூறினர். அப்போது அரக்கர் மன்னன் அவனிடம், அவனுக்கு தேவை எதுவாயினும் தான் தருவதாகக் கூறிக் கேட்கச் சொன்னார்.
அப்போது வாமனன் வீடு, பொருட்கள் மீது தனக்கு ஆசையில்லை. என் கால்களால் மூன்றடி நிலம் கொடு என்று வேண்டினான். அதைக் கேட்ட துந்து சிரித்து அப்படியே கொடுத்தேன் என்றான். வாமனன் ஓங்கி வளர்ந்து விசுவரூபம் கொண்டான். ஓரடியால் மண்ணையும், இரண்டாவது அடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடமில்லாததால் கோபம் கொண்டு திடீரென்று துந்துவின் மேல் விழுந்தான். அவன் விழுந்த வேகம், பளுதாங்க முடியாமல் பூமியில் பெரிய பள்ளம் உண்டாயிற்று. உடனே வாமனன் துந்துவை அந்தப் பள்ளத்தில் தள்ளி, அவன் மேல் மண்மாரி பொழியச் செய்து அவனுக்கு சமாதி செய்துவிட்டார். இவ்வாறு துந்துவை அழிக்க வந்த வாமனன், விஷ்ணுவின் முதல் வாமனாவதாரம் என்கிறது வாமன புராணம்.
3. ஓங்கி உலகளந்தான்
துந்து பிரம்மலோகத்தை வேண்டி துராசை கொண்டதன் விளைவாகத் தனக்குத் தானே சமாதியைத் தேடிக் கொண்டான், வாமனனாகிய நாராயணன் செயலால். இது குறித்து விசாரமடைந்த பிரகலாதன் தன் மகனாகிய விரோசனனை ராக்ஷச ராஜ்யத்திற்கு அரசனாக்கினான். அவனும் தந்தை சொற்படி ஆட்சிபுரிந்து வந்தான். இவன் மகனே பலிச்சக்கரவர்த்தி. பலி பாட்டன் வழியில், அவன் அறிவுரைப்படி தரும சாஸ்திர நெறியில் பயிற்றுவிக்கப்பட்டான். பிரகலாதன் அவனுக்குக் குருவாகவும் விளங்கினான். பலி மன்னனானவுடன் இந்திராதி தேவர்களை வென்றது மட்டுமின்றி மூவுலகங்களையும் கைப்பற்றினான். இதனால் தேவர்களுக்கு நித்தியகண்டம் ஆயிற்று. இதனால் மனமுடைந்த தேவர்கள் தந்தை காசியபரை அணுகி முறையிட அவர் தேவர்களை பிரம்மலோகம் அழைத்துச் சென்றார். பிரம்மாவும் செய்வதறியாமல் அனைவரையும் அழைத்துக் கொண்டு மகாவிஷ்ணுவிடம் சென்று ரக்ஷிக்குமாறு வேண்டினர். அப்போது பகவான் தான் வாமனாவதாரம் எடுத்துப் பலியை அடக்குவதாகக் கூறி அவர்கள் புத்திரனாக அவதரிக்க அவர்களது தபஸ்ஸக்தி மட்டும் போதாது என்றும் அவர்களிருவரையும் பரமநிஷ்டையுடன் மேலும் தன்னை அடைய தவம் புரியுமாறு கூறினார். அதிலும் அதிதி செய்யும் தவமே அவள் கருவில் தான் தோன்ற மிகவும் முக்கியமாகும் என்று அருளாசி வழங்கினார். அப்போது அதிதி உலகையே தன்னுள் அடக்கியுள்ள பகவானைத் தன் கருவில் தன்னால் சுமக்க முடியுமா என்று ஐயத்துடன் கேட்க, விஷ்ணு உன் குழந்தையாக நான் பிறக்க இருப்தால் உன்னையும் கரு பளுவையும் நானே சுமப்பேன். நீ தவம் செய் என்றார். இவ்வாறு கூறி நாராயணன் தக்க தருணத்தில் அதிதி கருவில் பிரவேசித்தார்.
ராக்ஷசர்களிடையே அவ்வமயம் மகிழ்ச்சி குறைந்தது. உற்சாகமின்றி காணப்பட்டனர். இதுகண்ட பலிச்சக்கரவர்த்தி பாட்டன் பிரகலாதனிடம் அதற்கான காரணம் கேட்க, பிரகலாதன் ஞானதிருஷ்டியால் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குக் காரணம் ஆராய பகவான் நாராயணனைத் தியானம் செய்தார். மகா மகிமை கொண்ட நாராயணன் அதிதி வயிற்றில் வாமனனாக அவதரிக்கப் போகிறார். அவர் மகாத்மா விஷ்ணுவின் அம்சமாக உதிக்கப்போகும் வாமனனே. அரக்கர்களின் தேஜஸ்ஸை கவர்ந்து கொண்டார் என்று கூறினார். அதுகேட்ட பலி நாராயணன் யார்? அவர் தன்னிடமுள்ள மகா ராக்ஷசத்தலைவர்களை விடச்சக்தி வாய்ந்தவரா? என்று ஏளனமாகப் பேச ஆரம்பிக்க, பிரகலாதன் கோபம் கொண்டு, ராக்ஷசர்கள் தீய புத்தி உள்ளவர்கள். அவர்களுக்குப் பலி தலைவன். அதனால் அவனுக்கு விநாசகாலம். விநாசகாலே விபரீத புத்தி என்று எச்சரித்தார். உனக்கு உன் தந்தையும், அவனுக்குத் தானும், தனக்கு நாராயணனும் குரு. அத்தகைய பரமகுருவை, தனக்கு உயிரினும் மேலான நாராயணனை நிந்தித்தான் என்றும் அதனால் அவன் விரைவில் இராஜ்யத்தை இழப்பான் என்றும் சபித்தான் பிரகலாதன். பின்னர் பலி தான் செய்த தவறுக்கு பச்சாத்தாபப் பட்டு தன்னை மன்னித்து ஆசிர்வதிக்க வேண்ட, பிரகலாதனும் கோபத்தில் தான் கொடுத்த சாபமும் பலிக்கும் வரமாக மாறும் என்று சாபவிமோசன வழியாக அன்று முதல் பலியை விஷ்ணுபக்தி உடையவனாக இருக்குமாறு அறிவுரை பகன்றான்.
வாமனாவதாரம்
அதிதிக்கு மாதங்கள் நிறைய அழகிய வாமனனை (விஷ்ணுவை) தன் மகனாகப் பெற்றெடுத்தாள். தேவர்கள் மகிழ்ந்தனர். அசுரர்கள் துயரடைந்தனர். பிரம்மா தானே வந்து வாமனனுக்கு ஜாதகதர்மம் ஆகியவை செய்வித்து, பகவானை அவரது லீலாவதார மகிமையைப் புகழ்ந்து துதி செய்தார். அப்போது வாமனாவதார நாராயணன் தேவர்களிடம் அவர்கள் வேண்டுகோளின் படி தான் அவதாரம் எடுத்திருப்பதை உணர்த்தி தான் வாக்களித்தபடியே நிறைவேற்றி அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்கப் போவதாகக் கூறினார். பிரம்மா வாமனனுக்கு மான் தோல் அளித்தார். வியாழ பகவான் பூணூலும், மரீசி தண்டமும், வசிஷ்டர் கமண்டலமும் அளித்தார். ஆங்கீரசர் தர்ப்பை, ஆடைகள் கொடுத்தார். பிரணவத்துடன் கூடிய வேதங்கள் அவரை வந்தடைந்தன. பரத்துவாஜர் அவருக்கு உபநயனம் செய்வித்தார். பரத்வாஜரிடம் வாமனர் அத்யயனம் செய்தார். ஆங்கீரசர் சாமவேதம் கற்பித்தார். சங்கீதமும் கற்பித்தார். பின்னர் வாமனன் பரத்துவாஜரை நோக்கி குருவே மகாத்மாக்களெல்லாம் குரு÷க்ஷத்திரத்திற்குச் செல்கின்றனர். அங்குப் பலி சக்கரவர்த்தி அசுவமேத யாகம் செய்கிறானாம். அங்கு நானும் செல்ல விரும்புகிறேன். அனுமதி அளியுங்கள் என்று பிரார்த்திக்க பரத்துவாஜர் ஜகந்நாதா! நான் உனக்கு கட்டளையிடுவதா? நீ போக முடிவு செய்தால், எனக்கெந்த ஆஷேபனையும் இல்லை. நாங்களும் பலி சக்கரவர்த்தி யாகத்திற்கு வருகிறோம். நீ எங்கெல்லாம் இருப்பாய் என்று அருள்வாயாக என்று வேண்ட, வாமனனும் அப்படியே கூறலானார்.
விஷ்ணுவின் சாந்நித்தியம் உள்ள விசேஷ இடங்கள்
மானச ஏரியில் மச்ச ரூபத்தில் கவுசிசி நதியில் கூர்மங்களாக, கிருஷ்ணா நதியில் ஹயக்கிரீவனாக, அத்தினாபுரத்தில் கோவிந்தனாக, வாரணாசியில் மாதவன், பிந்து மாதவனாக, பிரயாகையில் கேசவனாக, கயையில் கதாதரனாக, கேதாரத்தில் மாதவனாக, பதரிகாசிரமத்தில் நாராயணனாக, குரு÷க்ஷத்திரத்தில் குருத் வஜனாக, விதஸ்தாநதியில் குமாரீலனாக, இமாலயத்தில் சூலபாணியாக, நைமிசாரணியத்தில் பீதவாசனனாக, மலயபர்வதத்தில் சவுகந்தியாயும், நிஷத நாட்டில் அமரேச்வரனாகவும், குருஜாஸ்கலத்தில் ஸ்தாணு சங்கரனாகவும், கிஷ்கிந்தையில் நவமாலியாகவும், பிரபாச தீர்த்தத்தில் கவர்ணிகாவும், மற்றும் உதயசூரியன், சந்திரன், துருவ நக்ஷத்திரத்திலேயும், திராட்சாராமமெனும் சப்த கோதாவரியில் ஹாட கேச்வரனாகவும், அதாவது பீமேச்வரனாகவும், கைலாயத்தில் ரிஷபக் கொடியோனாகவும் சௌராஷ்டிரத்தில் மகாவாசன் (சோமநாதன்) ஆகவும், சிங்களத்தீவில் உபேந்திரனாகவும், சதுர்தச புவனங்களில் பல நாமங்களாகவும் இருப்பதாக பகவான் கூறினார்.
பலி செய்த யாகம்
பின்னர், அனைவரும் பலியின் அசுவமேத யாகத்திற்குச் சென்றனர். பகல் இரவாயிற்று. பூமி அதிர்ந்தது. யாகசாலை அல்லகல்லோலமாயிற்று. யாகத்தில் அக்கினி மூலம் அரக்கர்களுக்குக் கொடுக்கப்பட்ட அவிர்ப்பாகம் அவர்களுக்குச் சேரவில்லை. இதை எல்லாம் கண்ட பலிச்சக்கரவர்த்தி தன் குருவாகிய சுக்கிராச்சாரியாரை அணுகி இவற்றிற்கான காரணத்தை அறிய வேண்டினார். சுக்கிராச்சாரியார் ஞானதிருஷ்டியால் வாமனனாகிய (விஷ்ணு) வருவதை அறிந்து கூறினார். அப்போது பலி வாமனரை அதிதியாகத் தான் எவ்வாறு வரவேற்று உபசரிக்க வேண்டும் என்று கேட்க, அவர் பலி அரக்கர்களித்த அவிர்பாகங்களைத் தேவர்கள் அடையுமாறு செய்ய அவர் வருகிறார். அவருக்கு ஒன்றும் தரவேண்டாம். அப்படித் தருவதால் பயனேதும் இல்லை என்று சுக்கிராச்சாரியார் கூறிட, அதற்குப் பலி வரும் யாசகர் வேறு யாராக இருப்பினும் உங்கள் வார்த்தையைக் கேட்டிருப்பேன். ஆனால் சாக்ஷõத் மகாவிஷ்ணுவே அல்லவா! அப்படிப்பட்டவர் வந்து யாசகம் கேட்கும்போது எப்படி இல்லை என்று சொல்வேன். முற்பிறப்பு வாசனை, பழக்கம் இந்த ஜன்மத்தில் கர்மமாகும். அதனை விட முடியாது. எனவே, வாமனனுக்கு ஏதாவது தானம் தரவேண்டுமென்று உள்ளது. என்மேல் கருணைகாட்டி நான் செய்யும் தானத்திற்குத் தாங்கள் தடை செய்ய வேண்டாம் என்று குருவிடம் பிரார்த்தித்தான்.
வாமனன் வருகை
தான தர்மம், சத்தியம், பராக்கிரமம் கொண்ட பலிச்சக்கரவர்த்தி, வாமனனாகிய புரு÷ஷாத்தமனுக்குத் தானம் அளித்தால் எல்லாத் தேவதைகளும் திருப்தி அடைவர். சற்பாத்திரமான அவருக்கு அளிக்கும் தானம் பெரும்பலனை அளிக்கவல்லது. அவர் கோபம் கொண்டு அவரால் தான் கொல்லப்பட்டாலும் அதைவிட தனக்கு நன்மை அளிக்ககூடியது வேறென்ன இருக்க முடியும்? இவ்வாறு அவர் கூறி முடிக்கையில் வாமனன் யாகசாலையை அடைந்தார். பலி சக்கரவர்த்தி வாமனாவதார விஷ்ணுவை வணங்க, அவர் பலியை ஆசிர்வதித்து, யாகத்தலைவனான பலியை மிகவும் சிலாகித்துப் பேசினார். அதுகேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பலிச்சக்கரவர்த்தி, வாமனர்க்கு அர்க்கியம், பாத்யம் அளித்து பூஜை செய்து தங்களுக்கு என்ன வேண்டும்? எது வேண்டினாலும் அளிக்கத் தயாராக இருப்பதாக வாக்குத் தானம் செய்தான் பலி.
வாமனன் கேட்ட தானம்
அப்போது வாமனன் பரத்துவாசரைக் காட்டி, இவர் என்னுடைய குரு. அக்கினி ஹோத்திரம் செய்ய சொந்தமாக ஓரிடமும், மற்ற வசதிகளும் இல்லாததால் அவருக்காக நான் யாசிக்கிறேன். என் கால்களால் மூவடி நிலம் கொடுக்க வேண்டும் என வேண்டினார். உடனே பலிசக்கரவர்த்தி, தன் மனைவி வித்தியாவளியையும் மகனான பாணனையும் பார்த்துச் சிரித்த முகத்துடன், பாருங்கள் இவர் உருவில் மட்டுமல்ல, கோரிக்கையில் கூட வாமனனே தனக்கு மூவடி நிலம் மட்டுமே வேண்டுகிறார் என்று கூறிய பலி, வாமனனை நோக்கி நீங்கள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்! நீங்கள் யாசகர். நான் தாதன் (அ) அளிப்பவன். எனவே மூவடி நிலம் கொடுப்பது எனக்கு வெட்கமாய் உள்ளது என்று பலவற்றை அளிப்பதாகக் கூற வாமனன் அவை எல்லாம் எனக்கு ஏன்? நான் கேட்ட மூவடி மண்ணே போதும் என்றார்.
பலி அளித்த தானம்
பின்னர் பலியின் மனைவி விந்தியாவளி நீரூற்ற, பலி வாமனின் கால்களைக் கழுவி, மந்திரம் கூறி தானத்திற்கான நீரைத் தாரையாக வார்த்துக் கொடுக்க முற்பட, சுக்கிராச்சாரியார் சொம்பு மூக்கிலிருந்து நீர்வராமல் தடையானார். அப்போது வாமனன் ஒரு தர்ப்பையால் நீர் வரும் மூக்கிலுள்ள தடையை நீக்கிட நீர் வர தானம் முடிந்தது.
பலி பெற்ற பேறு
அப்போது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க வாமனனாக வந்த விஷ்ணு ஓங்கி உலகளக்கும் உத்தமனாக மாறி ஓரடியால் மண்ணையும், இரண்டாவது அடியால் விண்ணையும், அளந்து மூன்றாவது அடி நிலம் கொடுக்குமாறு கூற, அதைத் தன் தலைமீது வைக்குமாறு வேண்டிட அவ்வாறே செய்த வாமனன் பலியை பாதாளத்திற்கு அனுப்பினார். அங்கு மனைவி புத்திரர்களுடன் பரிவாரங்களுடன் வசிப்பாயாக. அங்கு உனக்கு இப்போதுள்ள போகங்கள் அனைத்தும் கிடைக்கும். உனக்கும் உன் மக்களுக்கும் ஆனந்தமுண்டாகட்டும் என்று அருளினார்.
4. குரு÷க்ஷத்திரம்
முற்காலத்தில் சம்வரணன் என்னும் மன்னனுக்கும் சூரிய புத்திரியான தபதிக்கும் வசிஷ்டர் திருமணம் செய்து வைத்தார். அத்தம்பதியருக்கப் பிறந்த மகன் குரு. அவன் பதினான்கு வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தான். சம்வரணன் குருவுக்கு ராச்சியாபிஷேகம் செய்து வைத்தான். அவன் சாமான்ய அரசர்களைப் போல் அரசாண்டு மடிய விரும்பவில்லை. நிலையான புகழ்பெற்று அமரத்துவம் பெறவிரும்பி எவ்விடத்தில் தன் கோரிக்கை நிறைவேறும் என்று ஆராய்ந்தான். சியமந்தபஞ்சகம் என்னும் பிரதேசத்தில் தன் சிரமத்துக்கு ஏற்ற பலன் கிடைக்குமென்று எண்ணி பொன் ஏருக்கு ஒரு பக்கம் ருத்திரனின் ரிஷபத்தையும், மற்றொரு பக்கம் யமனின் எருமையையும் கட்டி நிலத்தைத் தானே உழ ஆரம்பித்தான். இந்திரன் தோன்றி என்ன செய்கிறாய் என்று கேட்க, குரு மன்னன் நான் இப்பிரதேசத்தில் நிலையான புகழ்பெற விரும்பி சத்தியம், தவம், மன்னித்தல், தயை, தூய்மை, தானம், யோகம், பிரம்மச்சாரித்துவம் என்னும் எட்டு அங்கங்களைப் பயிர் செய்ய உழுது கொண்டிருக்கிறேன் என்றான்.
ஸ்ரீஹரி வந்து நீ சொன்ன அஷ்டாங்குலம் என்னும் விதைகள் எங்குள்ளன? உன்னிடமே அல்லவா! அவ்விதைகளைக் கொடுங்கள் என்று இடது கையை நீட்ட, அதை விஷ்ணு வெட்டி வீழ்த்தினார். பாதத்தால் யாசிக்க அதைக் கூட வெட்டினார். அப்போது குரு என் சிரத்தை வெட்டினாலும் எனக்கு இஷ்டந்தான். விதைகளை மாத்திரம் தெளித்துச் செல் என்று வேண்டினான். அப்போது மகாவிஷ்ணு அவனுடைய தருமபுத்திக்கு மெச்சி அவனுக்கு திவ்ய சரீரத்தை அருளி, ராஜா! உன் பெயரில் இவ்விடம் குரு÷க்ஷத்திரம் என்ற பெயரில் புகழ்பெறும். இது தர்ம ÷க்ஷத்திரம். இங்கிருக்கும் இந்த சியமந்த பஞ்சகத்திலும், இவற்றிற்கு இடையே ஓடும் ப்ருதூதக ஆற்றிலும் நீராடுவோர்க்கு அனைத்துப் புண்ணிய பலன்களும் கிட்டும். இங்கு செய்யும் தானம், மற்ற புனிதத்தலங்களில் செய்யும் தானங்களை விட கோடி அளவு பலனைத் தரும் என்று வரம் கொடுத்து மறைந்தார்.
5. சிவ, பார்வதி மக்கள்
ஒரு சமயம் சிவபெருமான் மோகம் அடைந்து, பார்வதியுடன் ஆனந்தமுடன் இருக்க உலகெங்கும் இருண்டது. மேலும் பிரம்மாவிடம் பெற்ற வரத்தின் படி பார்வதி கருநிறம் மாறி பொன்னிறமேனி அடைந்து சிவனிடம் வந்து சேர இருவரும் சுக போகத்தில் இருந்தனர். அப்போது இந்திரன், இந்நிலையில் பார்வதி பரமேச்வரர்களுக்குப் பிறக்கும் மகன் சொர்க்க ராச்சியத்தைக் கைப்பற்றுவான் என்றும், அதனைத் தடுக்க ஓர் உபாயம் தன் சகாக்களுடன் ஆலோசித்து அதன்படி உமா சங்கரர்களுடைய ஏகாந்தத்திற்குப் பங்கம் விளைவிக்க எண்ணிட, அக்கினியை அன்னப்பறவை வடிவில் செலுத்த, அவன் சிவனிருக்குமிடம் சென்று வெளியில் தேவர்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர் என்றான். சிவன் வெளிவர தேவர்கள், தாங்கள் மோகத்தை விடாவிடில் உலகம் தலைகீழ் ஆகிவிடும் என்றனர். அப்படியானால் தன் வீர்யத்தை யார் சுமப்பர்! என்று சிவனார் கூற, அதற்கு அக்கினி முன்வந்தான். அதுவே கார்த்திகேயன் ஜனன காரணம் ஆயிற்று.
இதனால் கோபமடைந்த பார்வதி தேவர்களில் யாருக்கும் அவரவர் மனைவியரிடம் கரு ஏற்படாமலிருக்கச் சபித்தாள். ஒரு சமயம் பார்வதி மணமிகு குளியல் மாவினால் ஒரு பொம்மை செய்து அதை அணைத்துக் கொள்ள மார்பில் பால் சுறந்தது. உடனே அந்தக் குழந்தைக்குப் பிராண பிரதிஷ்டை செய்தாள். அக்குழந்தையை சிவனிடம் அர்ப்பணிக்க எண்ணி அவனை வாயிலில் காவல் இருக்குமாறு கூறி நீராடச் சென்றாள். அப்போது அங்கு வந்த பரமனை அச்சிறுவன் தடுத்து நிறுத்த, அவர் அவன் தலையை வெட்டி வீழ்த்தினார். ஸ்நானம் முடிந்து வந்த பார்வதி அதுகண்டு மிகவும் துயருற்றாள். நடந்ததை அறிந்த சிவன், பிரமனை அழைத்து ஒரு தலையைக் கொண்டு வருமாறு ஆணையிட, அவன் செல்கையில் ஐராவதத்தின் புத்திரனைக் கண்டு அதன் தலையை வெட்ட, ஒரு தந்தம் போரின் இடையில் ஒடிந்து போக அத்தலையைக் கொண்டு வர அதனைப் பொருத்தி பரமன் பாலகனை உயிர்ப்பித்தார். அவனே கஜானனன் என்னும் யானை முக கணபதி. பார்வதியிடம் நாயகன் இன்றியே இவன் தோன்றியதால் விநாயகன் என்பது இவன் பெயர் என்றும் யாரொருவர் இவனைப் பூசித்தாலும் அவர்களுடைய விக்கினம் தீரும். எனவே இவன் விக்கின விநாயகன் ஆவான் என்றார்.
6. தண்டகாரணியம் பெயர் ஏன்?
தண்டன் என்ற மன்னன், சுக்கிராச்சாரியாரைத் தன் புரோகிதராகக் கொண்டு ராஜ்யபாரம் வகித்து வந்தான். ஒரு நாள் நகர்ப்புற வெளியில் உலாவிக் கொண்டிருக்கும் போது அரஜா என்ற அழகியைக் கண்டு மோகித்து அவளிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினான். அப்போது அவள் தான் சுக்கிராச்சாரியாரின் மகள் என்றும், தனது தகப்பனாரைக் கண்டு அவர் அனுமதி பெற்றால் மன்னன் கோரிக்கை நிறைவேறும் என்றும் நாசூக்காகத் தெரிவித்தாள். மோகத்தால் மதி மயங்கிய தண்டன், அரஜாவை பலாத்காரமாக அனுபவித்தான். பிறகு வீட்டிற்கு வந்து அழுது கொண்டே இருந்தாள். இல்லம் திரும்பிய சுக்கிராச்சாரியார் தன் மகள் சோகம் கண்டு தவித்து விட்டார். மகளை மெதுவாக விசாரித்து நிகழ்ந்தவற்றை எல்லாம் அறிந்தார்.
உடனே கடுங்கோபம் கொண்டு சுக்கிராச்சாரியார், தண்டன் மன்னனும், அவனது ராஜ்யம் முழுவதும் ஏழு நாட்களில் சாம்பலாகக் கடவது என்று சபித்தார். அவ்வாறு சபித்துவிட்டுத் தன் மகளுடன் அதை விட்டு அகன்றார். அவர் சாபத்தின்படி ஏழு நாட்களில் மன்னன் தண்டன், மற்றும் அவன் ராஜ்யமும் எரிந்து சாம்பலாயின. சில நாட்களில் அங்கு மரம், செடி, கொடி அடர்த்தியாக வளர்ந்து அது ஒரு ஆரணியம் (காடு) ஆயிற்று. அது தண்ட காரணியம் என்று பெயர் பெற்றது. எனவே மன்னன் கொண்ட பெண்ணாசையின் பலன் இது.
7. ஸ்தாணு சம்புவும் ஸ்தாணு தீர்த்தமும்
ஒரு சமயம் உமா மகேசுவரர்கள் தாருகவனத்தை அடைந்தனர். அங்குப் பல முனிவர்கள் உடலை வருத்தி பலகாலமாக தவம் செய்து வந்ததால் எலும்பும், தோலுமாகக் காட்சி அளித்தனர். அதைக் கண்டு அம்பிகை தன் கருணையால் பரமேசுவரனிடம் அவர்களுக்காகப் பரிந்து பேசினாள். அவர்கள் மீது தயவு கொள்ளுமாறு வேண்டிட, சிவனார் முனிவர்கள் நீண்ட நாட்களாகத் தவம் செய்து வந்தாலும், சாதாரண மக்களைப் போலவே காமக் குரோதாதிகளை விடவில்லை. அதனால் அவர்கள் தவம் பலிக்கவில்லை. இப்போது ஒரு விந்தையைப் பார் என்று கூறி பரமன் ஓர் அழகிய பிக்ஷõடனராகி, திகம்பரனாகி, ரிஷிபத்தினிகளிடம் சென்று பிச்சை எடுத்தார். அப்போது ரிஷிபத்தினிகள் அனைவரும், ஒருத்தியுடன் ஒருத்தி போட்டி போட்டுக் கொண்டு அந்தப் பிக்ஷõடனரைத் தம் வசப்படுத்திக் கொள்ள அவர் கைகால்களைப் பற்றி இழுத்தனர். இதனைக் கண்ட முனிவர்கள் மிக்க கோபம் கொண்டு அந்த பிக்ஷõடனரின் லிங்கம் கீழே விழுமாறு கட்டை எடுத்து அடித்தனர். அது அருகிலிருந்த மடுவில் போய் விழுந்தது. இதனால் முனிவர்களின் தவம் கெட்டது. அவர்களின் ஓர் அறிவாளி பிக்ஷõடனர் யாரோ ஒரு மகானாக இருக்கக்கூடும். அவரை நாம் மிகவும் துன்புறுத்திவிட்டோம். அதனால், நாம் சுகம், சாந்தி, அமைதி எல்லாம் இழந்தோம். இதென்ன விந்தையென்று பிரம்மாவைக் கேட்டறிவோம் என அனைவரும் சத்தியலோகம் சென்று பிரம்மனிடம் நடந்த அனைத்தையும் கூறி முறையிட்டனர்.
அப்போது பிரம்மா சினம் கொண்டார். தவசி ஆனாலும் யாகம், தானம், ஓமம், செய்தவர்களாயினும் அவற்றால் பலன் ஏதும் ஏற்படாது. நீங்கள் சிறிதும் எண்ணிப் பாராமல் தவறு செய்து விட்டீர்கள். இருப்பினும் இது குறித்து பரமசிவனாரை நாடி அவர் சொற்கேட்டு நடந்திடலாம் வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். சிவபெருமானைப் பக்தியொடு மனமுருகி பிரார்த்தனை செய்ய, பரமன் பிரத்தியக்ஷமாகி அந்த லிங்கத்தை மடுவிலிருந்து எடுத்து பிரதிஷ்டை செய்து, அதற்குத் தினமும் அபிஷேக ஆராதனை, தூப, தீப நைவேத்தியம் ஆகிய உபசாரங்கள் செய்யுங்கள். அது எனது சொரூபம் யாராயினும் அதை நிஷ்டையுடன் பூசித்தால் இகபரசுகம் பெறுவர். அவர்களுடைய எல்லாப் பாவங்களும் நீங்கும் என்றார். பிரம்மாவும், ரிஷிகளும் மடுவை அடைந்து அந்த லிங்கத்தை வெளியே எடுக்க முனைந்தனர். அது இயலாததால் மறுபடியும் பிரம்மாதி தேவர்களும், முனிவர்களும் கைலாயம் சென்று பரமேசுவர தண்டகம் பாடித் துதித்தனர். அவர்களுடைய பிரார்த்தனையைப் பரமன் ஏற்றார்.
தானே மடுவுக்கு வந்து ஒரே கையால் லிங்கத்தை வெளியே எடுத்தார். இந்த லிங்க தரிசனத்தால் மூவுலகில் உள்ளவர்களும் புண்ணியம் செய்தவர்களாகி சொர்க்கம் அடைவர் என்று கூறி மறைந்தார். அப்போது முதல் அவ்விடம் ஸ்தாணு தீர்த்தம் ஆயிற்று. அதன் அருகில் உள்ள ஆலமரம் ஸ்தாணுவடம் எனப்பட்டது. ஸ்தாணு தீர்த்தம் பற்றிக் கேள்விப்பட்ட மக்கள் அந்த இடத்திற்கு வந்து ஸ்தாணு சம்புவைத் (தாணு சங்கரரை) தரிசித்து சொர்க்கம் சேரலாயினர். இதனால் விண்ணுலகம் நிறைந்திட இந்திரன் பிரம்மாவிடம் முறையிட அவர் லிங்கம் கண்ணுக்குப் புலப்படாதவாறு தூளி மழை பெய்யச் செய்யுமாறு கூறினார். பரமன் லிங்கத்தை எடுத்து அதனை ஸ்தாணு வடம் (சிவனார் ஆலமரம்) அருகிலேயே ஸ்தாபித்தார். ஆதனால் அந்த இடமும், மரமும் பவித்திரமாயின. அந்தத் தீர்த்த மரத்தின் அடியில் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். அதுகண்ட பிரம்மா அங்கொரு சிற்பலிங்கத்தை நிறுவினார். பின்னர் அந்த சிற்பலிங்கத்தைப் பூசித்தவரும் மோக்ஷமடைந்தனர். பிறகு பிரம்மாதி தேவர்கள் பயனடைய லிங்கத்தின் மீது லிங்கமாக ஏழு லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார்.
அந்தத் தூளியில் மூழ்கி முனிவர்கள் முக்தி பெற்றனர். தூளி காற்றில் பறந்து குரு÷க்ஷத்திரம் முழுவதும் படிந்து அது புண்ணியத்தலம் ஆயிற்று. அந்த லிங்கத்தைக் கண்டாலும், தொட்டாலும். வடவிருட்சத்தைத் தொட்டாலும், அந்தத் தீர்த்தத்தில் மூழ்கினாலும் சர்வபாவங்களும் நீங்கி விடும். மோட்சமும் கிட்டும். அங்கு செய்யும் பித்ருதர்ப்பணம் பித்ரு தேவதைகளுக்குத் திருப்தியளிக்கும். கிருதயுகத்தில் சந்நிஹத்யம் என்றும், திரேதாயுகத்தில் வாயு என்றும், துவாபர கலியுகங்களில் ருத்திரதடாகம் என்றும் இந்தத் தீர்த்தம் புகழ்பெற்று வைஸ்வத மன்வந்தரம் முடிவு வரையில் நிற்கும்.