Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாமன புராணம் பகுதி-1
முதல் பக்கம் » வாமன புராணம்
வாமன புராணம் பகுதி-2
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 மே
2012
15:41

8. சுகேசியும் சூரியனும்: வித்யுத்கேசி என்னும் ராக்ஷசனின் மகன் சுகேசி. இவன் பிரகலாதனைப் போல் தெய்வபக்தியும், தர்மபுத்தியும் பெற்று இருந்தான். அவன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து, அவரிடம் விண்ணில் பறக்கக்கூடிய நகரமும், பகைவரால் மரணம் ஏற்படாதவாறும், யாராலும் வெல்ல முடியாதவாறும் வரங்கள் பெற்றான். அந்தப் பறக்கும் நகரத்தின் உதவியால் எங்கும் பறந்து சென்று வந்த சுகேசி ஒரு சமயம் மகதநாட்டுக் காடுகளில் தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்களைக் கண்டு தரிசித்தான். அவர்களை வணங்கி இகபர லோகங்களில் நன்மையும், மகிழ்ச்சியும் அளிக்கவல்ல தர்மங்களைக் கூறுமாறு கேட்டான். அவர்களிடம் கேட்டறிந்தவாறு அகிம்சை, சத்தியம், திருடாமை, சாந்தம், தானம் ஆகிய பரம தர்மங்களுடன் நாட்டைத் தர்ம நியாயங்களின்படி ஆண்டுவந்தான். சூரியனும், சந்திரனும் அந்நகரைவிட்டு அகலாமல் அங்கேயே தங்கிவிட்டனர். இதனால் பகல், இரவு வேறுபாடின்றி எங்கும் குழப்பம் நிலவியது. இதனால் ஒளி விவகாரத்தில் சூரியன், சந்திரன்களிடையே தகராறும் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சூரியன் விண்ணிலிருந்து அந்த நகரத்தைக் கீழே வீழ்த்தினான். அதனால் கோபம் கொண்ட சிவபெருமான் சூரியனை நெற்றிக் கண்ணால் நோக்க, அவன் விண்ணிலிருந்து கீழே விழும் நிலையில் அவன் தேரில் இருந்த முனிவர்களும், தேவர்களும், மற்றும் தபோதனர்களான ரிஷிகள் வரண, அசி நதிகள் நடுவிலுள்ள வாரணாசியில் விழும் என்றனர்.

சூரியன் வரண, அசி நதிகளில் பலமுறை மூழ்கித் தாபத்தை தீர்த்துக் கொள்ள முயன்றான். ரதத்தில் இருந்த ரிஷிகள் பிரம்மாவிடம் முறையிட்டனர். சூரியன் இல்லாவிட்டால் காலமாற்றமே இருக்காது. அவன் சர்வகர்ம சாக்ஷி. எனவே அவனை மறுபடியும் ரதத்தில் அமரச் செய்யுமாறு வேண்டினர். கருணாமூர்த்தியான சிவபெருமான் அவர்கள் கோரியபடியே சூரியனைத் தூக்கித் தேரில் அமரச் செய்தார். பரமன் மூன்றாவது கண்ணால் ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் இப்படியும், அப்படியும் சூரியன் ஆடுவானானான். அதனால் காசியில் சூரியனுக்கு லோலார்க்கன் (ஆடுபவன்) என்ற பெயர் ஏற்பட்டது. சுகேசியையும் அவன் நகரத்துடன் விண்ணில் நிறுத்தினார்.

9. நர நாராயணர்

பஹுருசன் என்ற பிராமணனுக்கும் அவள் மனைவி அகிம்சை ஆகியோருக்கும் ஹரீ, கிருஷ்ணன், நர நாராயணர்களென்று நான்கு புத்திரர்கள். சியவன மகரிஷி எதிரில் நைமிசாரணிய மகத்துவமும், சரசுவதி நதியில் நீராடவும் நைமிசாரணியத்துக்கு நர நாராயணர்கள் சென்று, அங்குத் தவம் செய்ய ஆரம்பித்தனர். பிரகலாதன் அவர்களை அணுகி தவம் செய்யும் உங்களுக்கு வில், அம்பு எதற்கு? நீங்கள் உண்மையில் தவம் செய்ய வந்தவர்களா? அல்லது போலியா? என்று கேட்டான். அப்போது நரன் சக்திக்கேற்ற பொருளை அருகில் வைத்திருப்பதில் தவறேதுமில்லை அல்லவா! என்றான். பிரகலாதன் கோபமடைந்து தருமநெறியில் ஒழுகும் நான் இங்கே இருக்கையில் பிராமணர்கள் வில், அம்பு கொள்வதோ? என்று கேட்டான். அதற்கு நரன் ஆம்! உலகில் எங்களை வெல்பவர் யாரும் இல்லை என்று கூற பிரகலாதன் எப்படியாவது நர, நாராயணர்களைத் தான் வெல்லப் போவதாகக் கூறித் தன் பரிவாரங்களைத் தூரத்தில் இருக்குமாறு பணித்தான். மேலும் தன் ராச்சியத்திற்குத் தன் பெரிய தந்தை இரணியாக்ஷனின் மகனான அந்தகாசுரனை அரசனாக்கித் தான் வில்லும், அம்பும் ஏந்தி நர, நாராயணர்களிடம் போர் தொடுத்தான்.

பல ஆண்டுகள் நிகழ்ந்த போரில் வெற்றி யார் பக்கம் என்று நிச்சயிக்க முடியாமல் இருக்கச் சிவபெருமானின் அறிவுரைப்படி பிரகலாதன் போரை நிறுத்தி நர நாராயணர்களைத் துதி செய்து தன் நகரம் ஏகினான். நர, நாராயணர்களின் தவத்தைக் கண்டு அச்சமுற்ற தேவேந்திரன் அதைக் கெடுக்க ரம்பையையும், மன்மதனையும் அனுப்பினான். அவர்கள் என்ன செய்தும் நரநாராயணர்களை ஒன்றும் செய்யவில்லை. அப்போது அவர்கள் தங்கள் தொடையைத் தேய்த்து ஓர் அப்சரசைத் தோற்றுவித்து அவளை இந்திரனுக்குப் பரிசாக அனுப்பினர். (தொடை-ஊரு). இவ்வாறு ஏற்பட்ட அவளுக்கு ஊர்வசி என்று பெயர்.

10. மகிஷாசுரனும் காத்தியாயினி தேவியும்

ரம்பன், கரம்பன் என்ற அரக்கர்கள் சகோதரர்கள். அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. எனவே, இருவரும் தவம் செய்ய முனைந்தனர். கரம்பன் நீரினுள் தவம் செய்ய இந்திரனால் கொல்லப்பட்டான். இதைக் கேள்விப்பட்ட ரம்பன் கடுமையாகத் தவம் செய்யலானான். நெடுநாட்கள் ஆனதால் தன் தலையை வெட்டி அக்னியில் சேர்க்க முற்பட அக்கினி பகவான் அவன் முன் தோன்ற ஒருவரைக் கொல்வது பாவம்; அதைவிடத் தற்கொலை மகாபாவம். உனக்கென்ன வேண்டும் கேள். நான் தருகிறேன் என்றான். ரம்பன் மூவுலகையும் வென்று ஆளத்தக்க ஒரு மகன் வேண்டும். அவன் மிக்க பலசாலியாகவும், மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படாதவாறும் இருக்க வேண்டும். காற்றைப் போல் கடுகிச் செல்லக்கூடிய அஸ்திரங்களை எய்வதில் வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று வரம் கேட்க, அக்கினியும் அவ்வரத்தை அளித்தான்.

குபேரனுடைய தோழர்களாகிய யக்ஷர்களின் இருப்பிடத்திற்கு ரம்பன் சென்றான். அங்கு பெண் எருமை ஒன்றைக் கண்டு மோகித்து அதை மணந்து தன் இருப்பிடம் வந்தடைந்தான். இதனால் தானவர்கள் அவனை ஒதுக்கி வைத்தனர். எனவே, ரம்பன் தன் மனைவியுடன் யக்ஷர்கள் நாடடைந்தனர். அங்கு ரம்பன், பெண் எருமைக்கு ஓர் அழகிய மகன் பிறந்தான். அவன் பெயர் மகிஷாசுரன் (மகிஷா-எருமை). மகிஷாசுரன் தாயாகிய பெண் எருமையை, மற்றொரு எருமை தாக்கியது. அதைக் காக்கச் சென்ற ரம்பன் எருமையால் கொல்லப்பட்டான். பெண் எருமையும் ரம்பனுடன் தீக்குளித்து இறந்தது. பிணங்கள் எரியும்போது வெளிப்பட்ட தீப்பிழம்பிலிருந்து ரக்தவிஜன் என்ற பயங்கர அரக்கன் தோன்றினான். அவன் மகிஷாசுரனைத் தன் தலைவனாக ஏற்று மற்றவர்களை எல்லாம் கொன்றழித்தான். மகிஷாசுரன் பயங்கர வீரனாகி அனைவரையும் வென்று மன்னனானான். அவனால் தொல்லைக்குட்பட்ட தேவர்கள் நிவாரணம் தேடி பிரமனை நாட, அவர் அனைவருடனும் விஷ்ணுவைக் காணச் செல்ல, அங்கே சிவனும் இருந்தார். மகிஷாசுரன் கொடுஞ்செயலைக் கேட்ட அரியும், அரனும் கோபம் கொண்டனர்.

அரி, அரன் கோபத்திலிருந்து ஓர் ஒளி சக்தி உதித்தது. பிரம்மாதி தேவர்களும் தமது சக்தியை அதனுடன் சேர்த்தனர். அனைத்துச் சக்தியையும் ஒன்று சேர்த்து காத்தியாயன முனிவரின் ஆசிரமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவர் தன் சக்தியையும் அத்துடன் இணைத்தார். இவ்வாறு ஒருங்கிணைந்த சக்தியிலிருந்து ஓர் அழகிய தேவி தோன்றினாள். அவள் காத்தியாயன முனிவர் ஆசிரமத்தில் தோன்றியதால் தேவி காத்தியாயினி எனப்பட்டாள். அவன் உடலில் சிவசக்தி முகமாகவும், அக்கினி சக்தி கண்களாகவும், யமன் சக்தி கூந்தலாகவும், இந்திரன் சக்தி பதினெட்டு கரங்களாகவும், இந்திரன் சக்தி இடுப்பாகவும், வருண சக்தி கால்களாகவும், பிரம்மாவின் சக்தி பாதங்களாகவும், சூரிய சக்தி கால் விரல்களாவும் அமைந்தன. மற்றும் யக்ஷர்கள் மூக்கையும், சந்தியர்கள் கண் புருவங்களையும், மருத்துக்கள் காதுகளையும் உண்டாக்கினர். பின்னர் பிரம்மாதி தேவர்கள் காத்தியாயினிக்குப் பலவித ஆயுதங்களை அளித்தனர். சிவன் திரிசூலத்தையும், விஷ்ணு சக்கரத்தையும், வருணன் சங்கையும், அக்கினி ஈட்டியையும், வாயு வில்லையும், சூரியன் அம்புறாத்துணியையும், அம்புகளையும், குபேரன் கதையையும், விச்வகர்மா கோடாரியையும் அளித்தனர். மற்றவர்கள் ஆபரணங்களால் அவளை அலங்கரித்தனர். இமயமலை சிங்க வாகனத்தையும் அளித்தது. பின்னர் அனைத்து தேவர்களும் தங்களை அசுரர்களிடமிருந்து விடுதலை அளிக்க வேண்டினர். இவ்வாறு உருவும், சக்தியும் பெற்ற காத்தியாயினிதேவி சிங்கத்தின் மீதேறி விந்திய மலைக்குச் சென்று அதைத் தன் இருப்பிடமாகக் கொண்டாள்.

ஒரு சமயம் நாரதர் விந்திய மலையிடம், மேரு மலை அதைவிட உயர்ந்தது என்று கூறிட, விந்தியமலை வானளாவ ஓங்கி விண்ணைத் தொட்டுக் கொண்டு சூரிய கதியைத் தடைசெய்தது. சூரியன் அகஸ்தியரை அடைந்து இதற்கொரு நிவாரணம் அளிக்க வேண்டினான். அகஸ்தியர் முதியோன் வடிவில் விந்திய மலை எதிரில் தோன்றி தான் தீர்த்தமாடத் தென்திசை செல்ல விருப்பதாகவும், விந்திய மலையைத் தாண்டும் சக்தி தனக்கு இல்லை என்றும், எனவே தாழ்ந்து வழிவிட வேண்டினார். மற்றும் தான் திரும்பி வரும் வரை தாழ்ந்தே இருக்குமாறு வேண்ட மலை தாழ்ந்து வழிவிட்டது. பின்னர் அகஸ்தியர் திரும்பி வரவில்லை. தாழ்ந்த மலையும் உயரவில்லை. இவ்வாறு விந்திய மலையின் கர்வத்தை அகஸ்தியர் அடக்கினார். தேவி காத்தியாயினி விந்திய மலையை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்தாள். மகிஷாசுரனுக்கு சண்டன், முண்டன் என்ற இரண்டு தூதுவர்கள். காத்தியாயினி அவர்கள் கண்ணில் பட, அப்படிப்பட்ட அழகி மகிஷாசுரனுக்கு ஏற்ற மனைவி என்று எண்ணி மகிஷாசுரனிடம் சென்று அவள் அழகை வருணித்துக் கூற, அவன் ஒரு படையுடன், சில படைத்தலைவர்களுடன் துந்துபி என்ற தூதுவனுடன் அனுப்பினான். துந்துபி காத்தியாயினிடம் மகிஷாசுரனின் பெருமைகளை எல்லாம் எடுத்துக் கூறி அவனை மணந்து கொள்ளுமாறு கூறினான். அப்போது காத்தியாயினி குடும்ப மரபுப்படி தன்னை வெல்பவனையே தான் மணப்பதாக கூறி மகிஷாசுரனை தன்னுடன் போர் செய்து வென்று கைப்பற்றுமாறு கூறினாள்.

துந்துபி மகிஷாசுரனிடம் சென்று இச்செய்தியை கூறினான். மகிஷாசுரன், சிக்ஷுரனைப் படைத்தலைவனாக்கி, நமரன் என்பவனைப் படையுடன் போருக்கு அனுப்பினான். கடுமையான போர் நடந்தது. தேவியின் கதையும், வாகனமாகிய சிங்கமும் பல அரக்கர்களைக் கொன்றன. காத்தியாயினி நமரனை இழுத்துச் சுற்றி எறிந்து கொன்றாள். உடனே தேவி ஒரு பெரும் சிரிப்பு சிரிக்க பல பூதங்கள் தோன்றின. அவையும் அசுரர்களை அழித்தன. அடுத்து சிக்ஷுரன் போர் செய்யத் தொடங்க, தேவி அவனது வில், அம்பு, கேடயங்களை அழித்து அவனையும் கொன்றாள். அவளை எதிர்த்து வந்த மற்ற படைத்தலைவர்களையும் அழித்தாள். மகிஷாசுரன் எருமை வடிவில் காத்தியாயினியை எதிர்த்தான். அந்த எருமையை எதிர்த்துத் தூக்கி வீசி எறிந்தாள். மீண்டும் எதிர்த்த அவனைக் கட்டிவிட்டாள். அவன் யானையாக மாறி எதிர்த்தான். அந்த யானையின் தும்பிக்கையை வெட்டி வீழ்த்தினாள். அவன் மறுபடியும் எருமையானான். அவனை எதிர்த்த ஆயுதங்கள் செயலற்றிருந்தன. அப்போது தேவி அந்த எருமையின் மீதமர்ந்து அதனை அலைக்கழித்தாள். அவன் தன் வலிமை இழந்திட தேவி அவன் கழுத்தை திரிசூலத்தால் குத்த, அந்த எருமையின் உடலிலிருந்து ஒரு வீரன் கைகளில் வாளும், கேடயமும் கொண்டு தோன்றினான். அவனை தேவி முடிபிடித்து இழுத்து மார்பை சூலத்தால் குத்தி, கழுத்தை வாளால் வெட்டினாள். இவ்வாறு மகிஷாசுரன் அழிக்கப்பட, அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். தேவர்கள் தேவி காத்தியாயினியைத் துதி செய்து வணங்கினர். தேவி காத்தியாயினி தன்னை வணங்கியவர்களை ஆசிர்வதித்து மறுபடியும் தேவை ஏற்படும் போது தோன்றுவதாகக் கூறி மறைந்தாள்.

11. முரா, முராரி

விஷ்ணுவின் பெயர்களில் ஒன்று முராரி என்று புலஸ்தியர் கூற, நாரதர் விஷ்ணு ஏன் முராரி என்ற பெயர் பெற்றார் என்று கேட்டார். காசியபருக்கு முரா என்றொரு புதல்வன் இருந்தான். அவன் மற்ற அசுரர்களைப் போல் தானும் வலிமை பெற பிரம்மாவை நோக்கித் தவம் செய்தான். பிரம்மன் அவன் முன் தோன்றிட தான் ஒருவரைத் தொட்டால் அவர் மரணமில்லாதவராயினும் மரணமடையுமாறு என் கைகளுக்கு அத்தகைய அதிசய சக்தி அளிக்கும் வரம் வேண்டினான். பிரம்மாவும் வரத்தை அளித்தார். அத்துடன் அவன் யார் கண்ணுக்கும் புலப்படாத சக்தியும் பெற்றிருந்தான். அவன் இந்திரனைத் தன்னுடன் போருக்கழைத்தான். அவனைத் தன்னுடன் போர் செய்யவும், இல்லாவிட்டால் சொர்க்கத்தைவிட்டு ஓடிப்போகுமாறும் கூற, இந்திரன் ஐராவதத்தையும், வஜ்ராயுதத்தையும் அளித்து விட்டு காளிந்தி நதிக்கரையில் ஓர் நகரை உண்டாக்கி அங்கு மனைவி மக்களுடன் வாழ்ந்து வந்தான்.

மன்னன் ரகு செய்யும் யாகத்திற்கு முரா வந்து யாகத்தை நிறுத்தி விடுமாறும், இல்லாவிடில் தன்னுடன் போர் செய்யும்படியும் கூறினான். அப்போது அவ்வழியில் வந்த வசிஷ்டர் முராவிடம் ஏன் அவன் எளிய மனிதர்களிடம் போர் செல்ல முயல்கிறான் என்றும், அவர்கள் ஏற்கனவே அவனால் தோற்கடிக்கப்பட்டவர்களே என்றும் கூறி அவனை யமனுடன் போர் செய்யச் செல்லுமாறு கூறினார். யமனுடைய நகரை முற்றுகையிட அவன் எருமை மீது ஏறி விஷ்ணுவிடம் சரண் புகுந்தான். அப்போது விஷ்ணு யமனிடம் முராவைத் தன்னிடம் அனுப்புமாறு கூறி அனுப்பினார். க்ஷீரோதக் கடற்கரையில் விஷ்ணு இருந்தார். அங்கு முரா வந்தடைந்தான். அப்போது விஷ்ணு அவனை நோக்கி அவன் வந்த காரணம் என்ன? என்ன வேண்டும்? என்று கேட்க முரா அவருடன் சண்டை செய்ய வந்ததாகக் கூறினான்.

அப்போது விஷ்ணு தன்னிடம் சண்டை செய்ய வந்த அவன் இதயம் ஏன் படபடக்கிறது என்று கேட்டார். இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியுடன் தான் போர் செய்ய முடியாது என்றார். அதுகேட்ட முரா விஷ்ணு சொன்னது உண்மையா என்று சோதித்துப் பார்க்க அவன் கையை மார்பின் மீது வைத்தான். பிரம்மாவின் வரத்தின் பயனால் அவன் உடனே கீழே விழுந்து மடிந்தான். விஷ்ணு அவன் உடலைச் சக்கராயுதத்தால் வெட்டினார். அரி என்றால் பகைவன். விஷ்ணு முராவின் பகைவன். அந்தப்பகைவனைக் கொன்றதால் விஷ்ணு, முராரி எனப்பெயர் பெற்றார்.

12. உபமன்யுவும் ஸ்ரீதாமனும்

விடமன்யு, ஆத்ரேயி என்ற பிராமணத் தம்பதிகளுக்கு உபமன்யு என்ற புத்திரன் இருந்தான். அந்தண தம்பதிகளிடம் குழந்தைக்குப் பால்கூட வாங்கிக் கொடுக்க முடியாத வறுமை நிலைமை ஆனதால் அரிசி நொய் கஞ்சியே அளித்து வந்தனர். எனவே, குழந்தை உபமன்யுவுக்கு பால் என்பது பற்றியே தெரியாது. ஒருநாள் தன் தகப்பனாருடன் உபமன்யு வேறொரு அந்தணர் வீட்டுக்குச் சென்றான். அங்கு அவர்கள் நல்ல பாலைக் கொடுக்க, அதைச் சுவைத்து அருந்தினான் அவன். வீட்டிற்கு வந்த பின் தாயாரிடம் அவன் தாயார் அளித்த கஞ்சியை உட்கொள்ள மறுத்து விட்டான். அப்போது அவன் பால்தான் வேண்டும் என்றான். சிவனைத் துதித்து மகிழ்ச்சி அடையச் செய்யுமாறும், திருமாலும் சிவபொருனைத் துதி செய்தார் என்றும் அது பற்றிய கதையையும் கூறலானாள்.

உபமன்யுவுக்கு ஆத்ரேயி கூறிய கதை

பலஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதாமன் என்றோர் அரக்கன் இருந்தான். அவன் விஷ்ணுவையே தோற்கடிப்பதாகப் பயமுறுத்தினான். அதனால் விஷ்ணு சிவபெருமானை நோக்கித் தவம் செய்தார். சிவபெருமான் தோன்றி விஷ்ணுவுக்குச் சக்கரத்தை அளித்து, அது மற்ற எல்லா ஆயுதங்களையும் விரட்டும் என்றும், அதனால் விஷ்ணு அவருடைய பகைவர்களை எளிதில் வெல்ல முடியும் என்றார். அப்போது விஷ்ணு, சிவனார் சொல்வதை எப்படி நம்புவது என்று கூறி, சிவன் மீதிலேயே சக்கராயுதத்தை எவ, அது அவரை மூன்று கூறுகளாக்க அவை முறையே இரணியாக்ஷன், சுவர்ணாக்க்ஷன், விச்வரூபாக்க்ஷன் என்று தோன்றி எல்லாராலும் பூசிக்கப்பட்டனர். சிவபெருமான் அழிவில்லாதவர் ஆகையால் அவருக்கு ஒரு துன்பமும் ஏற்படவில்லை. எனினும் விஷ்ணு தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிக்க வேண்டினார். அந்தச் சக்கராயுதத்தால் அவர் ஸ்ரீதாமன் என்னும் அரக்கனைக் கொன்றார். உபமன்யு சிவபெருமானைத் தன் பிரார்த்தனையால் மகிழ்ச்சி அடையச் செய்ய எப்பொழுதும் கெட்டியான பாலைப் பெற்றான்.

13. நிக்ஷõகரன்

கோஷகரன், தர்மிஷ்டை என்ற அந்தணத் தம்பதியருக்கு குருடும் செவிடுமான ஒரு மகன் பிறந்தான். இதனால் வருத்தம் கொண்ட தாயார் ஆறுநாட்கள் குழந்தையை வீட்டுக்கு வெளியில் முற்றத்தில் விட்டுவிட்டாள். ஒரு பெண் பிசாசு இதனைக் கண்ணுற்றுத் தன் மகனை அங்கு கிடத்தி அந்தக் குழந்தையை எடுத்துச் சென்றது. அக்குழந்தையைத் தன் கணவனிடம் காட்டியது. கணவன் அவளிடம் கோஷகரன் சக்திவாய்ந்தவன். அவன் உன்னைச் சபித்து விடுவான். எனவே குழந்தையைக் கொண்டு போய் அங்கேயே விட்டுவிடு என்று அறிவுறுத்தினான். தர்மிஷ்டை குழந்தை அழும் குரலைக் கேட்டு வெளிவந்து பார்த்து இனி அக்குழந்தை பேசும் என்று தன் கணவனை அழைத்துக் கூறினாள்.

கோஷகரனுக்கு உண்மை விளங்கிற்று. ஆனால், அவன் மனைவியிடம் மகன் உடலில் ஓர் ஆவி புகுந்து புலம்புகிறது. அவன் விரைவில் சாதாரணக் குழந்தை ஆகிவிடுவான் என்றார். கோஷகரன் சக்திவாய்ந்த மந்திரங்களை உச்சரித்து அக்குழந்தையை அங்கேயே மந்திரத்தால் கட்டிவிட்டான். பிசாசு பிராமணரின் குழந்தையைத் திருப்பி வைக்க வர அவள் குழந்தை மந்திரத்தால் கட்டுப்பட்டிருந்ததால் அதனை எடுக்க முடியவில்லை. அதனால் இரண்டு குழந்தைகளையும் அங்கேயே விட்டு விட்டுச் சென்றாள். பிராமணர் தன் குழந்தைக்கு நிஷாகரன் என்றும், பிசாசின் குழந்தைக்கு திவாகரன் என்றும் பெயரிட்டான். இருவருக்கும் கோஷகரன் கல்விக் கற்பிக்க அவன் சொந்த மகனை விட மற்றவன் நன்கு கல்வி கற்றான். ஆனால் நிஷாகரனோ முட்டாளாகவே காணப்பட்டான். எனவே கோஷகரன் நிஷாகரனை ஒரு பாழடைந்த கிணற்றில் தள்ளிவிட்டு கிணற்றையும் மூடி விட்டான். இது அவன் மனைவி தர்மிஷ்டைக்கு தெரியாது. அவன் பையன் எங்கோ தொலைந்து விட்டான் என்று எண்ணியிருந்தாள்.

கிணற்றில் தள்ளப்பட்ட நிஷாகரன் அதனுள்ளிருந்த மரத்தின் பழங்களை உண்டு உயிருடன் இருந்தான். பத்து ஆண்டுகள் கழிந்தன. அந்தக் கிணற்றுக்கருகில் ஒருநாள் வந்த தர்மிஷ்டை கிணறு மூடப்பட்டிருப்பதைக் கண்டாள். யார் இதை மூடினார்கள் என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். அப்போது தந்தைதான், என்று கிணற்றுக்கு உள்ளிருந்து குரல் கொடுத்தான் நிஷாகரன். உடனே அவள் கிணற்றின் மூடியை அகற்றிவிட்டு அவனைக் காப்பாற்றி கோஷகரிடம் கொண்டுவந்து நிறுத்தினாள். நிஷாகரன் தனது அதிசயக்கதையைக் கூறலானான்.

நிஷாகரன் கூறிய கதை

துவக்கநிலையில் அவன் ஒரு பிராமணனாக இருந்தான். அப்போது செய்த பாவங்களின் பயனாய் நரகவேதனை அனுபவித்து புலியாகப் பிறந்தான். இவ்வாறு முறையே பின்னர் கழுதை, பறவை, எருது என்று பாவங்களின் பலனாக நரக வேதனைகள் அனுபவித்து கடைசியில் நிஷாகரனாகப் பிறந்தான். ஜடிஸ்மாரனாக முற்பிறவிகளைப் பற்றி அறிந்திருந்து இனி அவன் நன்னெறியில் நிற்பான் என்று கூறி முடித்தார்.

வாமன புராணம் முற்றிற்று.

 
மேலும் வாமன புராணம் »
temple news
1. தோற்றுவாய்: மகாபுராணங்களில் வாமன புராணம் ஒன்று. இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது.இந்த வாமன புராணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar