பதிவு செய்த நாள்
30
டிச
2020
06:12
மேட்டுப்பாளையம்: காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு உட்பட்டது,லோகநாயகி அம்பாள் சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவில் ஆகும். இங்கு திருவாதிரை முன்னிட்டு ஆருத்ரா தரிசன விழா நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, மூலவருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சியும், திருவெம்பாவை, திருப்பாவை ஆகிய கூட்டு வழிபாடுகள் நடந்தன. திருவாதிரையை முன்னிட்டு, பக்தர்களுக்கு பாசிப்பருப்பு, தேங்காய், நெய் ஆகியவற்றால் செய்த களி பிரசாதம் வழங்கப்பட்டது. ஞான சுவாமிநாதன் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகளை செய்தார். விழா ஏற்பாடுகளை தக்கார் விஜயலட்சுமி, செயல் அலுவலர் (பொறுப்பு) கைலாசம் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோன்று மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில், மனோன்மணி அம்மன் உடனமர், வெள்ளிங்கிரி ஆண்டவர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு திருவாதிரை முன்னிட்டு, ஆருத்ரா தரிசன திருக்கல்யாண விழா நடந்தது. கோவில் வளாகத்தில் மனோன்மணி அம்மன், வெள்ளிங்கிரி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்பு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.