பதிவு செய்த நாள்
30
டிச
2020
05:12
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில், ஆருத்ரா மகா தரிசன உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா, கடந்த, 21ல் துவங்கியது.நேற்று தேரோட்டம் நடந்தது. சுவாமி தேரில் இருந்து இறங்கி, ஆனந்த நடனமாடியவாறு, ராஜ சபையான, ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் எழுந்தருளினார். ராஜ சபையில், இரவு சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு, ஏக லட்ச்சார்ச்சனை நடந்தது. இன்று அதிகாலை, சிறப்பு மகா அபிஷேகம், சொர்ணாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின், சுவாமி திருவாபரண அலங்காரத்தில், ஆயிரங்கால் மண்டபத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் பஞ்சமூர்த்திகள் ஆயிரங்கால் மண்டபம் முன் எழுந்தருளியவுடன், மாலை சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜர் புறப்பாடு நடந்தது. சித்சபை பிரவேசம் செய்வதற்காக, ஆனந்த தாண்டவ நடனமாடியவாறு, பக்தர்களுக்கு, ஆருத்ரா மகா தரிசனம் தந்தார். அப்போது, பக்தர்கள், தில்லை அம்பலத்தானே; பொன்னம்பலத்தானே என, கோஷம் எழுப்பி, நடராஜரை தரிசனம் செய்தனர்.