சபரிமலை : மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மேல்சாந்தி தனிமைப்படுத்தப் பட்டுள்ளதால் தந்திரி கண்டரரு ராஜீவரரு நடை திறந்தார்.
மண்டலபூஜை முடிந்து டிச.,26 இரவு 9:00 மணிக்கு அடைக்கப்பட்ட சபரிமலை நடை நேற்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி ஜெயராஜ்போற்றிக்கு உதவியாக இருந்த மூன்று பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் தனிமைப் படுத்தலில் உள்ளார். இதனால் தந்திரி கண்டரரு ராஜீவரரு நடை திறந்து பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கினார். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய்யபிேஷகம் மற்றும் வழக்கமான பூஜைகள் தொடங்கும். ஜன.,14ல் மகரவிளக்கு பெருவிழா நடைபெறுகிறது. மண்டல சீசனில் இரண்டாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் ஜன.,19 வரை தினமும் ஐந்தாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.ஆன்லைன் முன்பதிவு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில் நெகட்டீவ் ரிசல்ட் இல்லாமல் வரும் பக்தர்கள் நில்லக்கல்லில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.