பதிவு செய்த நாள்
31
டிச
2020
04:12
பெங்களூரு:கர்நாடகாவின், பிரசித்தி பெற்ற கோவில்களில், இனி பசுக்கள், கன்றுகள் இருக்கும். இதற்காக மல்லேஸ்வரத்தின், திருப்பதி திருமலை கோவில் நிர்வாகம், கோவிலுக்கொரு பசு என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.இந்து சம்பிரதாயங்களில், முக்கியமான இடம் பெற்றுள்ள பசுக்களை பாதுகாக்க, பெங்களூரு மல்லேஸ்வரத்தின், திருப்பதி திருமலை கோவில் நிர்வாகம், முடிவு செய்துள்ளது.
இதற்காக கோவிலுக்கொரு பசு என்ற நுாதன திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. பசுக்கள் தேவைப்படும் கோவில்களுக்கு, திருமலை கோவில் நிர்வாகம், பசு, கன்றை வழங்கும்.திருப்பதி திருமலை கோவில் ஆலோசனை கமிட்டி தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான குபேந்திர ரெட்டி கூறியதாவது:பசுவுக்கும், திருமலைக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு, பசு நேரடியாக பால் அபிஷேகம் செய்ததாக ஐதீகம். இத்தகைய புனிதமான பசுக்களை பாதுகாக்க, திருமலை கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.ஒவ்வொரு கோவில்களுக்கும், பசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரின் இஸ்கான், யாத்கிரியின் எத்திராஜ் மடம், காடி சுப்ரமண்யர், சிந்தாமணி அருகிலுள்ள, கைவாராவின் யோகி நாராயணா மடத்துக்கு, பசு, கன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல கோவில்கள், பசுவுக்காக கோரிக்கை வந்துள்ளது.பசுவின் பாலை கோவில்களில், அபிஷேகம் செய்ய பயன்படுத்தலாம். பசுவை பாதுகாக்க, அரசு மற்றும் தனியார் சார்பில், கோசாலைகள் திறக்கப்பட்டுள்ளது என்றாலும், பசுக்களை முழுமையாக பாதுகாப்பது கஷ்டம். எனவே திருப்பதி திருமலை கோவில் சார்பிலும், திட்டம் வகுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.