பதிவு செய்த நாள்
31
டிச
2020
04:12
ஆங்கில புத்தாண்டு பிறக்கும்போதெல்லாம் அளவற்ற நம்பிக்கை யோடும், மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் எதிர்கொள்வது நம் வழக்கமாகப் போய் விட்டது.
சென்றாண்டின் தொடக்கத்திலும் இப்படித் தான் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் 2020 என்ற எண்ணைக் கூட சிலாகித்து சிலிர்த்தோம். மற்ற நாடுகளில் கொரோனா பெருந்தொற்றுப் பரவியபோது நமக்கு வராது என்று மாய திருப்தியில் மனநிம்மதியுடன் இருந்தோம். எந்த ஆண்டையும் ஆரூடத்தை வைத்துக் கணிக்க முடியாது என்ற உண்மையை நாம் புரிந்து கொண்டாலும், இந்தாண்டும் 2021 எப்படியிருக்கும் என நிபுணர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நடக்கும். நாமும் நிமிர்ந்து அமர்ந்து பார்ப்போம்.எப்படியாவது யார் மூலமாவது விடிவு வராதா என்று நாம் எல்லோரும் காத்திருக்கிறோம
எதிர்காலமாவது பிரகாசமாக இருக்காதா என்ற நப்பாசை நம்மிடமிருக்கிறது. எந்த தேவதையாவது வந்து நம்மைத் தங்க விரலால் தொட்டு நம் வாழ்வையே பொன்மயமாக மாற்றிவிட மாட்டாளா என எண்ணுகிறோம்.மூன்று தலைமுறைகள் சந்தித்திராத கடுமையான அனுபவமாக 2020 நமக்கு இருந்தது. நாட்டின் பொருளாதார சரிவு, தனிமனித வருமானக் குறைவு, விலைவாசி அதிகரிப்பு, பணி இழப்பு, உயிரிழப்பு, கல்வி பாதிப்பு என்று நாம் எதிர்பார்க்காத எண்ணற்ற சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது. இப்படியே எல்லாம் நிகழும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி முதலீடு செய்தவர்களும் பாதிக்கப்பட்டனர். மாதச் சம்பளத்திற்காக உழைத்த பணியாளர்களும் பல மாதங்கள் ஊதியமின்றி உழல நேர்ந்தது. பல நிறுவனங்கள் நிறுத்தப்பட்டன.மாணவர்களுக்கு மனமுடைபெரியவர்களுக்குப் பணமுடை என்றால் மாணவர்களுக்கு மனமுடை. ஏழெட்டு மாதங்கள் வீட்டிலேயே அடைந்து கிடப்பது ஓடியாடி விளையாடிய சிறுவர்களுக்கு சிறை தண்டனையாக இருந்தது. கல்வி நிறுவனங்கள் கணினி வழிப்பாடம் என்று மாணவர்களை வழி நடத்தின. பல நேரங்களில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டும், கணினியோ கைப்பேசியோ வேலை நிறுத்தம் செய்தும் மன உளைச்சலுக்கு உள்ளாயினர்.நேரில் நடத்தினாலே புரியாத புத்தகச்சுமை இருக்கும் போது கணினி வழிப்பாடத்தில் கண்கள் அயர்வடைந்தன;தலைவலி இம்சையாய் இருந்தது.
இதில் தேர்வு வேறு. பார்த்து எழுதிய மாணவர்களுக்குப் பரவசம்; பரிசுத்தமானவர்களுக்கோ பதற்றம். ஓராண்டு பாடத்தை ஒத்தி வைத்து விட்டு கவிதை, கதை, வாழ்க்கை சரித்திரம், உயர்ந்த நோக்கம் வகுத்துக் கொள்ளும் வழி முறைகள் போன்றவற்றை அவர்களுக்குக் கற்றுத் தந்து முழுமையான மனிதர்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாமோ என்றுகூடத் தோன்றியது. மாநகரத்தில் வசிக்கிற குடும்பங்கள் வாரம் ஒரு முறை உணவகத்திற்குச் சென்று தங்களைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு வருவது வழக்கம். இளைப்பாற உதவும் எல்லாக் கதவுகளும் அடைபட்டுப் போய்விட்டன. பெருந்தொற்றில் மரணமடைந்த குடும்பங்களைப் பார்க்கும்போது மனம் பிசைந்தது. இறந்தவரின் முகத்தைப்கூடப் பார்க்காமல் ஈமக்கிரியைகளைக்கூடச் செய்யாமல், மயானத்தின் வெளியே நின்று மவுனம் அனுஷ்டிக்கும் பரிதாபமான நிலை. எண்ணற்ற பெரிய தலைகள் அந்தச் சூறாவளியில் சரிந்தன.எப்போது முடியும் என்பது தெரியாமல் தொடரும் பெரும் அவலம் எல்லா நாடுகளையும் சுருட்டிப்போட்டது.2020 ல் உடல் ரீதியான சிக்கல்களை விட உளரீதியான சிக்கல்கள் அதிகம். மன அழுத்தத்தாலும், மனச் சோர்வினாலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் சூழல் பழைய நிலைக்குத் திரும்பினாலும் மீள்வது கடினம். நிரந்தரமாக வருமானம் வரும் எனக் கடன்வாங்கி வீடு கட்டியவர்கள் மாதத் தவணையை செலுத்த முடியாமல் மூச்சுத் திணறுகிறார்கள். சிலரோ சொத்துகளை விற்று கடன் கட்டவும் வழியின்றி தவிக்கிறார்கள்.அருட்கொடையா2020 மிகப்பெரிய பாடத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறது. எதையெல்லாம் நம்முடைய உரிமைகள் என்று நாம் நினைத்துக் களித்திருந்தோமோ அவற்றைப் பெறுவதுகூட அருட்கொடை என்கிற யதார்த்தத்தை நம்முடைய தலையில் குட்டி காலம் புரிய வைத்திருக்கிறது.நடை பயில்வது, கடைக்குச் செல்வது, கடற்கரைக்குப்போய் காற்று வாங்கி வருவது, கோயிலுக்குச் சென்று ஒரு பாடு புலம்பிவிட்டுவருவது, பல்லங்காடிக்குச் சென்று தேவையற்றவற்றை நிரப்பி வருவது, நண்பர்களுடன் கலந்துரையாடுவது, மாலை வேளையில் உணவகத்தில் ஒய்யாரமாக அமர்ந்து தேநீர் அருந்துவது, அருகிலுள்ள சுற்றுலாத் தலத்திற்கு வார இறுதியில் சென்று புத்துணர்ச்சி பெற்றுவருவது என எதையுமே செய்யாமல் அடித்து வைக்கப்பட்ட ஆணியைப்போல சில காலம் இருக்க நேர்ந்தது.முகக்கவசம் போட்டுக்கொண்டும், அடிக்கடி கையலம்பிக்கொண்டும் நாள் முழுவதும் இருப்பது நம் சுதந்திரத்தைத் துண்டித்து விட்டது. சின்ன இருமல் வந்தால்கூட தொற்றாக இருக்குமோ என்ற கவலை பலருக்கும் ஏற்பட்டது. ஆனால் இந்த நேரத்தில் விபத்தால் இறப்பவர்கள், தற்கொலை செய்துகொள்பவர்கள் போன்றோரின் எண்ணிக்கை குறைந்திருந்தது.
நாட்டு வைத்தியமெல்லாம் பொய் அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை பரிசோதனைகள் ஏதும் நடத்தப்படவில்லை பக்க விளைவுகள் அதிகம் என்று சொன்னவர்கள்கூட கபசுரக்குடிநீரைக் கமுக்கமாகக் குடித்தனர்.அரிய பாடம்காலம் நமக்குக் கற்றுத் தந்திருக்கும் அரிய பாடம் ஒன்று. மகிழ்ச்சி பெரிய சாதனைகளில் இல்லை. சின்ன சின்ன செயல்களில் உள்ளது. பணத்தை காட்டிலும் மனிதர்களே முக்கியமானவர்கள். வாழ்க்கை சிறுகதையைப்போல் எப்போது வேண்டுமானால் முடிந்துவிடக் கூடியது. இயற்கையின் பிரம்மாண்டத்தை உணராமல் அதைச் சீண்ட முயலக் கூடாது. சில நேரங்களில் சிற்றுார் வாழ்க்கையே பாதுகாப்பானது. வேளாண்மையையும், மரபுசார் மருத்துவத்தையும் நாம் மறுபடியும் மீட்டெடுப்பது அவசியம். ஆடம்பர வாழ்க்கை ஆபத்தானது, நிச்சயமில்லாதது. எளிமையும் சிக்கனமுமே எப்போதும் நன்மை பயக்கும். உயிர் என்று வந்துவிட்ட பிறகு எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட வேண்டும். நம்முடைய பணிகளை நாமே செய்யக் கற்றுக்கொள்வது உத்தமம். வெறும் கையில் முழம்போடுவது தற்கொலைக்குச் சமம். அகலக்கால் வைப்பவன் பாதாளத்தில் வீழ்வான்.இப்படி எத்தனைப் பாடங்களைக் கற்றாலும், நாம் அவற்றை சவுகரியமாக மறந்துவிடுகிறவர்கள்.
இப்போதே முகக்கவசமின்றி, சமூக இடைவெளியின்றி பலர் நடமாடுவதைப் பார்க்கிறோம்.2021 ஆம் ஆண்டை நாம் எச்சரிக்கையாக அணுகுவதே புத்திசாலித்தனம். உடல் உழைப்பும், மூச்சுப் பயிற்சிகளும் நம்முடைய அன்றாட செயல்பாடாக இருக்க வேண்டும். ஆகாயத்தில் கோட்டைகள் கட்டி வாழ்வதைவிட மண்ணில் குடில்கள் கட்டி வசிப்பது உத்தமம். சிக்கனமாக வாழ்வது அவசியம். நம்முடைய சேமிப்பு மிகவும் முக்கியம். இந்தத் தொற்று தடுப்பூசிகள் வந்து முடிந்தாலும் அடுத்த தொற்று எப்போது வேண்டுமானால் ஏற்படக்கூடும் என்ற பயம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். இந்தப் புத்தாண்டை நாம் நன்றியுணர்வுடன் வரவேற்போம். நாம் இன்னும் உயிருடன் இருப்பதே மிகப் பெரிய சாதனை என உணர்வோம். கிட்டத்திட்ட யூத வதை முகாம்களிலிருந்து மீண்டதைப் போன்ற அனுபவம் இது. நம்முடைய ஏமாற்றங்களையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு உற்சாகத்துடன் எதிர்கொள்வோம், வெற்றிகரமான வாழ்க்கை என்பது இயல்பான வாழ்க்கை மட்டுமே எனப் புரிந்து கொள்வோம்.எது மகிழ்ச்சிபெரிய திட்டங்களையெல்லாம் வகுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. மனிதர்களை நேசிப்பது மட்டுமே மகிழ்ச்சி. 2020-ஆம் ஆண்டு சந்திக்க முடியாமல் போன நண்பர்களைத் தேடித்தேடி சந்திப்போம். திருமணத்திற்குப் போக முடியாமல் போன சுற்றத்தின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்துவோம். இனியாவது வேட்கைகளைச் சுமந்துகொண்டு அலையாமல் கடற்கரையை, பூங்காக்களை, தென்றலை ரசிக்கக் கற்றுக்கொள்வோம். வாழ்க்கையைவிடப் பெரிய வரம் எதுவுமில்லை என்ற மெய்ஞானம் நமக்கு ஏற்படட்டும்.வெறுமையான மூங்கிலாக நாம் புத்தாண்டுக்குள் நுழைவோம். நம் அனுபவங்கள் நமக்குள் இனிய இசையைத் தாமாக ஏற்படுத்தும். ஜென் கூறுவதைப் போல நொடிக்கு நொடி வாழ்வதே புத்தாண்டின் சங்கற்பமாக இருக்கட்டும்.-இறையன்பு ஐ.ஏ.எஸ்.,சென்னை iraianbu@hotmail.com