பதிவு செய்த நாள்
07
ஜன
2021
10:01
கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், நேற்று மாவிளக்கு பூஜை கோலாகலமாக நடந்தது.
கோபி அருகே, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா, கடந்த டிச.,24ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இன்று குண்டம் விழா நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் குண்டம் இறங்க, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவில் பூசாரிகள் மற்றும் சேவகர்கள் என, 300 பேர் மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 9:00 மணிக்கு மாவிளக்கு மற்றும் காப்பு கட்டுதல் பூஜை முடிந்ததும், அம்மன் பூதவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி குண்டத்தில், நான்கு டன் அளவுக்கு ஊஞ்சமரக்கட்டைகள், தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆகம விதிப்படி குண்டத்தை தயார் செய்து, இன்று காலை, 5:00 மணிக்கு மேல், தலைமை பூசாரிக்கு பின், கோவில் சேவகர்கள் குண்டம் இறங்க உள்ளனர். தீ மிதி விழா முடிந்ததும், 9:00 மணிக்கு மேல், பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்க அனுமதியில்லை என, அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ளனர்.