பதிவு செய்த நாள்
16
ஜன
2021
07:01
கோவை:அனைவரும் பயன்பெறும் விதமாக கோவில்களை ஆன்மிக மையங்களாக மாற்ற வேண்டும், என, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு கூறினார். ஈஷா யோகா மையத்தில் நடந்த மாட்டுப் பொங்கல் விழா நிறைவில் சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது:உயிர் நாடியான காவிரி தமிழகம் உட்பட மூன்று மாநிலங்களில் ஓடுகிறது. மூன்று மாநிலங்களும் சேர்ந்து, அறிவியல் குழு(சயின்டிபிக் கமிட்டி) அமைத்து, தண்ணீர் பெருக்கெடுப்பதற்கான ஆலோசனை அறிக்கையை ஆறு மாதத்துக்குள் பெற்று தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்த இந்த மண் கடந்த, 50 ஆண்டுகளில் எதற்கும் பிரயோஜனம் இல்லாததாக சூழ்நிலை வந்துள்ளது. இயற்கை விவசாயத்திற்கு மாறவில்லை யேல் இந்த மண்ணை காக்க முடியாது. மண் வளம், விவசாயிகளை காக்க நடவடிக்கை தேவை. தமிழகத்தில் நெல் வளர்ந்தால் அண்டைய மாநிலங்களில் விற்கமுடியாது. விவசாயிகளுக்கு இதில் விடுதலை அளித்து, எங்கும் விற்கும் நிலை உருவாக வேண்டும். அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு என்ற நிலை வர வேண்டும். மாவட்டம் தோறும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் துவங்கப்பட வேண்டும். கோவில்கள் ஆன்மிக மையங்களாக மாற வேண்டும். ஜாதி, மதம், பாலினம் பாகுபாடின்றி ஆன்மிக நோக்கத்துடன், கற்றுக்கொள்ளும் உணர்வுடன் வருபவர்களுக்கு இந்த மையம் பயனுள்ளாக இருக்க வேண்டும். 36 ஆயிரம் கோவில்கள் தமிழக அரசிடம் உள்ளது. இதை படிப்படியாக செய்தால், எட்டு ஆண்டுகளில் சாதிக்க முடியும். அரசுதான் கோவில்களை நிர்வகிக்க வேண்டும் என நினைப்பது தவறானது. இவற்றுக்கு உறுதி கொடுப்பவர்களுக்குதான் எனது ஓட்டு. இது என்னுடைய ஐந்து பாய்ன்ட். ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் ஐந்து முக்கிய விஷயங்களை முன்வைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயிகள் தேவையில் வித்தியாசம் உள்ளது. தமிழக விவசாயிகள் போராடவில்லை. மண் வளம் கெட்டுவருவது மிகப்பெரிய பாதிப்பாக மாறிவருகிறது. தமிழகத்தில், 42 சதவீதமும், நாட்டில், 52 சதவீதமும் மண் வளம் கெட்டுள்ளது. வேளாண் பல்கலையில் இருக்கும் பாடமும், விஞ்ஞானமும் விவசாய நிலங்களுக்கு வரவில்லையேல் என்ன பயன். இவ்வாறு, அவர் கூறினார்.