பதிவு செய்த நாள்
01
ஜூன்
2012
11:06
தூத்துக்குடி:தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் வைகாசி பெருந்திருவிழாவை ஒட்டி திருக்கல்யாண விழா கோலாகலமாக நடந்தது. தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் தோளுக்கினியானில் பெருமாள் வீதி உலா வருதலும், இரவு ஒவ்வொரு வாகனத்திலும் வைகுண்டபதி பெருமாள் வீதி உலா வருதலும் நடந்து வருகிறது. ரதவீதிகளின் ஒவ்வொரு வீடுகள் முன்பாக பெருமாளுக்கு தேங்காய் உடைத்து பூஜைகள் செய்து பக்தர்கள் பெருமாளை வழிபட்டு வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் ஆறாம் திருவிழாவான நேற்று முன்தினம் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனை ஒட்டி கோயிலின் வெளிப்பிறகாரத்தில் வைகுண்டபதி பெருமாள் எழுந்தருளினார். பெருமாள் கோயில் தலைமை அர்ச்சகர் வைகுண்டம் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். காலை பத்தரை மணியில் இருந்து சுமார் ஒன்றரை மணிநேரம் நடந்த பூஜைகளுக்கு பின்னர் வைகுண்டபதி பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி கழுத்தில் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க தாலி கட்டும் வைபவம் நடந்தது.கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், வைகுண்டபதி பெருமாள் கோயில் தலைமை அர்ச்சகர் வைகுண்டம், ஆஞ்சநேயர் சன்னிதி அர்ச்சகர் பாலாஜி, திருவனந்தல் அன்பர்கள் சபை மாரியப்பன், கோயில் கணக்கர்கள் சண்முகசுந்தரம், சுப்பையா, நெல்லையப்பன், வைரவநாதன், பிராமணர் சங்கம் பாலாஜி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு திருக்கல்யாண பிரசாதமாக மஞ்சள் கயிறு, வளையல் போன்றவை வழங்கப்பட்டன. பின்னர் திருக்கல்யாண பிரமாண்ட விருந்து நடந்தது. பாகம்பிரியாள் சமேத சங்கர்ராமேஸ்வரர் திருக்கல்யாண குழு சார்பில் விருந்து நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், பெருமாள் கோயில் அர்ச்சகர் வைகுண்டராமன் ஆகியோர் செய்துள்ளனர். வரும் 2ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. வரும் 4ம் தேதி 11ம் நாள் விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.