காஞ்சிப்பெரியவர், சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரியில் சில நாட்கள் முகாமிட்டிருந்தார். வேதவிற்பன்னர்கள், இசை வல்லுனர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள் அவரிடம் ஆசி பெற்றனர். அனைவருக்கும் பரிமாறியது போக, மீதமுள்ள உணவு கடற்கரை குப்பத்தைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு அளிக்கப்பட்டது. பிறகு பெரியவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றார். வாசலில் இருந்த குப்பத்தைச் சேர்ந்த ஒருவர், பெரியவரிடம், சாமீ! நீங்கள் இங்கு வந்தது முதல் எங்களுக்கு வயிறார உணவு கிடைக்கிறது. நீங்கள் ஒருநாள் எங்கள் குப்பத்துக்கும் வருவீர்களா? என்று கேட்டார். பெரியவர் புன்முறுவல் மட்டும் செய்தார். மறுநாள் விடிந்த போது பெரியவரைக் காணவில்லை. சீடர்கள் எங்கு தேடியும் பயனில்லை. காலை 8 மணிக்கு அவராகவே வந்து விட்டார். எல்லாரும் ஆச்சர்யத்தில் மூழ்கி அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். நேற்று குப்பத்து மக்கள் அழைத்ததன் பேரில் அவர்களைப் பார்த்துவிட்டு வந்தேன், என்றார். நீங்கள் எல்லாம் விரும்புகிறீர்களோ இல்லையோ, அவர்கள் என் வருகையை மிகவும் விரும்பினர். எளிமையான அவர்களை நேசிக்க வேண்டும். நம் உடம்பில் ஓடுவது போல, அவர்கள் உடம்பிலும் ரத்தம் சிவப்பாகத் தான் ஓடுகிறது. அவர்கள் அனைவருக்கும் வேட்டி, புடவை, பழங்கள் வழங்கவேண்டும், என்றார். அதன்படி ஏற்பாடும் நடந்தது. ஏழை மக்களை நேசித்த அவரது உயர்ந்த பண்பை நாமும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.