பதிவு செய்த நாள்
08
பிப்
2021
07:02
திருவனந்தபுரம்:சபரிமலை அய்யப்பன் கோவிலில், 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், பக்தர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்கும் துணிச்சல், முதல்வர் பினராயி விஜயனுக்கு உள்ளதா, என, காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பக்தர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்கியது.
கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் இருந்து, கேரளாவின் தென் பகுதி வரை, 620 கி.மீ., துாரத்திற்கு மறுமலர்ச்சி சுவர் என்ற பெயரில், மனித சங்கிலிப் போராட்டத்தை, 2019ல், கேரள அரசு நடத்தியது. இதில், லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
சுவாமி தரிசனம்: இந்தப் போராட்டம் நடந்த மறுநாள், 40 வயதான இரண்டு பெண்கள், சபரிமலை அய்யப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். கேரளாவில், ஏப்ரல் - மே மாதங்களில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, சபரிமலை விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.இந்த விவகாரத்தில், பக்தர்களுக்கு ஆதரவான நிலையை, எதிர்க்கட்சியான காங்., எடுத்துள்ளது.இது குறித்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், மூத்த காங்., தலைவருமான, ரமேஷ் சென்னிதலா கூறியதாவது: சபரிமலை விவகாரத்தில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் முதல்வர் பினராயி விஜயனின் நிலைப்பாட்டில் மாற்றம் உள்ளதா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். மறுமலர்ச்சி காவலர் என்ற வேஷத்தை கலைத்துவிட்டு, பக்தர்களின் உணர்வுகளுக்கு ஆதரவாக செயல்படுவோம் என, கூற தைரியம் உள்ளதா?இவ்வாறு, அவர் கூறினார்.
முடிவு எடுக்கப்படும்: இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர் கோவிந்தன் மாஸ்டர் கூறுகையில், இந்த விவகாரத்தில், கூடுதல் நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்தவுடன், அனைத்து தரப்பினருடனும் கலந்து பேசி, அதன்பின் முடிவு எடுக்கப்படும், என்றார்.சட்டசபை தேர்தல் வரவிருப்பதை அடுத்து, கம்யூ., - காங்., ஆகிய இரு கட்சிகளுமே, தங்கள் நிலைப்பாட்டை மாற்றி, மக்களை ஏமாற்றுகின்றன, என, கேரள பா.ஜ., தலைவர் சுரேந்திரன் தெரிவித்தார்.