பதிவு செய்த நாள்
27
பிப்
2021
06:02
அரூர்: தீர்த்தமலை, தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்ட விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
தர்மபுரி மாவட்டம், அரூர்அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த உலகில் அவதாரம் செய்த ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில், முதல்கால பூஜையை ராமேஸ்வரத்தில் முடித்துவிட்டு, இரண்டாம் கால பூஜைக்காக, தீர்த்தகிரி மலை மீது, அம்பு எய்தி தீர்த்தம் உண்டாக்கி, அந்த தீர்த்தத்தைக் கொண்டு பூஜையை முடித்தார் என்பது இறை நம்பிக்கை. அந்த தீர்த்தமே, ராமர் தீர்த்தம் என்கிற புண்ணிய தீர்த்தமாகும். இந்த மலையும் தீர்த்தகிரி மலை என்று அழைக்கப்படும் புண்ணிய மலையாகும். ராமர், பார்வதிதேவி, குமரகடவுள், அக்னிதேவன், அகத்திய முனிவர் ஆகியோர், தவம் செய்து பாவ விமோச்சனம் பெற்றத்தலம். அருணகிரிநாத சுவாமிகளால், திருப்புகழ் அருளிய ஒரே திருத்தலம் தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலமாகும். இத்திருத்தலத்தின் மாசிமக தேரோட்ட விழாவையொட்டி, நேற்று முன்தினம் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. நேற்று, கொடியேற்றம், இன்று, (பிப்., 27) சுவாமி திருவீதி உலா நடக்கிறது. நாளை, (பிப்., 28) குத்துவிளக்கு பூஜை, (மார்ச், 2) சுவாமி திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. விழாவின், முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும், (மார்ச், 4)ல், நடக்கிறது.