மதுரை: மதுரை அப்பன் திருப்பதியில் 17- 18ம் நுாற்றாண்டின் அனுமன், வண்டியூரில் கல் யானை வீரன் நடு கற்களை சிற்பக்கலை வல்லுநர்கள் தேவி, சசிகலா, வரலாற்று ஆய்வாளர் அறிவுச்செல்வம் கண்டுபிடித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் நடுகல் போல் பலகைக்கல், துாண்களில் செதுக்கிய அனுமன் சிற்பம் வீர வழிபாட்டினை உணர்த்துகிறது. தமிழகத்தில் சில இடங்களில் அனுமன் நடுகல் அமைத்திருப்பர். அப்பன் திருப்பதியில் வீரன், தலைவன் நடுகல்லை உள்ளூர் மக்கள் ஆஞ்சநேயராக வழிபடுகின்றனர். இச்சிற்பத்தின் பின் உள்ள தமிழ் கல்வெட்டில் ஆஞ்சநேயர் அழகர் மலை… கள்ள… ஆடி… ஒரு ஆகிய சொற்கள் உள்ளன. கல்வெட்டின் எழுத்து அமைப்பை கொண்டு இது 17-- -18ம் நுாற்றாண்டாக கருதலாம்.மதுரை வண்டியூரில் பிளிறி ஓடி வரும் யானையை அங்குசம் கொண்டு பாகன் அடக்கும் காட்சி புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. யானை கருப்பு, அடக்கும் வீரன் உடை நீல நிறம் என இக்காலத்தில் வண்ணம் தீட்டியுள்ளனர். இப்பகுதியில் யானையை அடக்கிய வீரச்செயல் நடந்த நினைவாக வீரனுக்கு நடுகல் வைத்து வணங்கியதை காட்டுகிறது.மதுரை யானைக்கல் பகுதியில் கல் யானை சிற்பம் ஒன்று உண்டு. மதுரை கோயிலை மையமாக்கி எழுதிய திருவிளையாடற் புராணத்தில் கல் யானைக்கு கரும்பு கொடுத்த திருவிளையாடல்களில் ஒன்றாக பாடப்பட்டுள்ளது. இதோடு தொடர்புள்ள ஐராவதேசுவரர் கோயில் மாரியம்மன் தெப்பக்குளம் அருகே உள்ளது.ஒத்தக்கடை யானைமலை சமணர்களின் உறைவிடமாகும். பாண்டிய மன்னர்களின் பொருள் உதவியால் யானை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மதுரையோடு யானை தொடர்பு உள்ளதாக காட்டப்படுவது மரபு. கல் யானை அருகே ஒரு சூலக்கல்லின் கீழே மீனாட்சி முத்து... சொக்கனாதர்.. இது சந்திராதித்தவரை என்ற எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டு உள்ளது. சந்திரன், சூரியன், நிலா இருக்கும் வரை இக்கொடை தடையின்றி விளங்கிட வேண்டும் என கல்வெட்டு கூறுகிறது என்றனர்.