சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே ஏரியூர் மலை உச்சியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட மலை மருந்தீஸ்வரர் முனிநாத சுவாமி கோயில் பங்குனித்தேரோட்டம் நடந்தது.
மார்ச் 19 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயிலின் பங்குனித்திருவிழா தொடர்ந்து நடந்துவருகிறது. மார்ச் 26ல் மலை மருந்தீஸ்வரர் பர்வதவர்த்தினி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மார்ச் 27 ல் பால்குட ஊர்வலம், காவடி எடுப்பு நடந்தது. பக்தர்கள் கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது.அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாளுடன் மலை மருந்தீஸ்வரரும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், விநாயகர், சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர். நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. பிறகு மீண்டும் தடம் பார்க்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.