பதிவு செய்த நாள்
30
மார்
2021
12:03
திருப்பூர்: திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவர், நேற்று ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். பனியன் உற்பத்தி நகரான திருப்பூரில், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உ.பி., போன்ற பல்வேறு வெளி மாநிலத்தவர்கள், தனியாகவும், குடும்பத்தினருடனும் வசிக்கின்றனர். இம்மக்கள், தங்கள் மாநிலங்களில் பிரசித்திபெற்ற விழாக்களை, திருப்பூரிலேயே கொண்டாடி மகிழ்கின்றனர்.குளிர் காலம் முடிவடைந்து, வசந்த காலத்தை வரவேற்கும் வகையில், வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருப்பூரில் வசிக்கும் வடமாநில மக்கள், வண்ணங்களில் விழாவான ஹோலி பண்டிகையை, கோலாகலமாக கொண்டாடினர். ராயபுரம், அவிநாசி ரோடு பகுதிகளில் உள்ள வட மாநிலத்தவர் வசிக்கும் குடியிருப்பு, வர்த்தக நிறுவனத்தினர், வடமாநில தொழிலாளர் அதிகம் பணிபுரியும் ஆடை உற்பத்தி நிறுவனங்களில், ஹோலி கொண்டாடப்பட்டது.நண்பர்கள், உறவினர்கள் மீது பல்வேறு வண்ண பொடிகளை துாவியும், தண்ணீர் ஊற்றியும், உற்சாகமாக ஹோலி பண்டிகை கொண்டாடினர். அதன்பின், இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பெண்கள், பாரம்பரிய உடை அணிந்து, தாண்டியா நடனமாடி மகிழ்ச்சி அடைந்தனர்.