ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடந்தது.
நான்கு நாட்கள் நடந்த விழாவில் முதல் நாளில் வைகை ஆற்றில் இருந்து திருமஞ்சன நீர் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பொங்கலிட்டு மாவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். அதனையடுத்து பக்தர்கள் அக்னி சட்டி, காவடி , பால்குடம் எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். மூன்றாம் நாளில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நான்காம் நாள் இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரவில் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழத்துடன் பூஜை செய்து தரிசித்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் காந்திமதிநாதன், விழா குழுவினர் செய்திருந்தனர்.