பதிவு செய்த நாள்
14
ஏப்
2021
10:04
திருப்பதி : திருமலையில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளால், தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க, உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கடந்தாண்டு மார்ச் முதல், கொரோனா காரணமாக ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
முன்பதிவு: பின், ஜூன் மாதம் முதல் துவங்கிய தரிசனத்தில், படிப்படியாக பக்தர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, 55 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் வசதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருவதால், மீண்டும் திருமலையில் கட்டுப்பாடு முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதனால், நேற்று முன்தினத்திலிருந்து இலவச தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. நேற்று, 37 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசித்தனர். தரிசன வரிசைகளிலும், அன்னதான கூடத்திலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தேவஸ்தான ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மலர் அலங்காரம்திருமலையில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு நேற்று, கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.