பதிவு செய்த நாள்
18
ஏப்
2021
06:04
சிறு வயதிலேயே முருகப்பெருமான் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. என்னுடன் எப்போதும் பயணிப்பவர் என்று நம்புேவன். அதனாலேயே 1983 முதல் இதுவரை முருகப்பெருமான் குறித்து 12 ஆயிரம் படைப்புகளை படைத்திருக்கிறேன்.
இப்போதுகூட முருகன் வரலாறை கூறும் அசுரகாவியம் எழுதிக்கொண்டிருக்கிறேன் என முத்தைத்தரு பத்தித் திருநகை மூச்சுவிடாமல் அருணகிரிநாதர் பாடியது போல் படபடவென பேசுகிறார் 54 வயதான பரமேஸ்வரன்.
மதுரை கண்ணனேந்தலைச் சேர்ந்த இவர், மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியராக உள்ளார். துறைத்தலைவராகவும் இருக்கிறார். இவர் எழுதிய 12 ஆயிரம் படைப்புகள் செய்யுள், இலக்கியம், கவிதை, சிலேடை, பொன்மொழிகள், கவசம் என பன்முகத்தன்மை கொண்டவை. எப்படி இவருக்கு சாத்தியமானது. அவரே சொல்கிறார்...
பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும்போதே இலக்கியங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. செய்யுள், நாடகம், காப்பியம் என அனைத்திலும் எனது முத்திரையை பதித்தேன். குறிப்பாக முருகபெருமானுக்கு நான் சொல்வது போல் வேல்விடும் துாது எழுதினேன். 300 ஆண்டுகளுக்கு பின் முளைத்த நல்ல துாது இலக்கியம் என அறிஞர்கள் பாராட்டினர். 2004 வரை 6 ஆயிரம் படைப்புகளை படைத்திருந்தேன். இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது
என்னை மேலும் ஊக்குவித்தது. ரதபந்தம் எனும் திருஎழு கூற்று இருக்கை எழுத ஆரம்பித்தேன். திருப்புகழுக்கு உரை எழுதியுள்ளேன். 2005-06ல் ஐம்பெரும் காப்பியங்களில் உள்ள பொன்மொழிகளை தொகுத்து காப்பிய பொன்மொழிகளை எழுதினேன். ஆஸ்திரேலியாவில் உலக முருக பக்தர்கள் மாநாட்டில் எனது கதிர்வேல் கவசம் வெளியிடப்பட்டது.
இந்த கதிர்வேல் சுவாமி கோயில் சுவிட்சர்லாந்து செங்காலன் மாகாணத்தில் உள்ளது. அங்குள்ள 60 ஆயிரம் தமிழ் குடும்பங்கள் அனைவரும் எனது கவசத்தை பாடியது எனக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன். இதை நித்யஸ்ரீ மகாதேவன் பாடி மாநாட்டில் வெளியிட்டது பெருமையாக இருந்தது.மாணவர்களுக்காக வேல்விடு துாது என்ற இணையதளம் வழியாக தினமும் சிலேடைகள், ஒரு சொல் பல பொருள் தரும் கவசம் போன்றவற்றை அப்டேட் செய்கிறேன்.
திருப்புகழ் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றேன். என் இலக்கிய பணிகளை பாராட்டி சித்திரகவி, இலக்கிய முரசு, துாது வெண்பா சுடரொளி போன்ற பட்டங்கள் பெற்றேன். தற்போது முருகனின் 108 ஓம் மந்திரம் எழுதியுள்ளேன். சந்த பாமாலை என்ற தலைப்பில் 6 ஆயிரம் செய்யுள் எழுதி வருகிறேன் என்கிறார் பரமேஸ்வரன்.
இவரை பாராட்ட 96262 13056