பதிவு செய்த நாள்
18
ஏப்
2021
06:04
நான் கோவில்களில் காணிக்கையே போடுவ தில்லை; அதற்கு பதில், அந்தப் பணத்தை ஏழைகளுக்கும் முதியவர்களுக்குமே அளிக்கிறேன் என்றார், நண்பர் ஒருவர். காரணம் கேட்ட போது,நாம் கொடுக்கும் காணிக்கைகளை எல்லாம் வைத்து, கோவிலைப் பராமரிக்கவா போகின்றனர்... என்றார், சலிப்போடு. உண்மை தான். பல கோவில்களில் ஒரு நேர பூஜை கூட இல்லை. சிலைகளெல்லாம் பரா மரிப்பின்றி இருக்கின்றன. அவரின் வருத்தத்தை என்னால் ஓரளவு உணரமுடிந்தது. பக்தர்களால் நிறைந்து, பக்தியில் நெக்குருக வைத்த பல கோவில்கள், ஆளரவமின்றி இருக்கின்றன. பல கடவுள் சிலைகளின் மேல் கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்கின்றன.
ஒரு காலத்தில், தனிக் கோவில்கள் யாவும் சமுதாயத்தோடு ஒருங்கிணைந்து இருந்தன. பல சமுதாயப்பணிகளை கோவில்கள் மறைமுகமாக செய்து கொண்டிருந்தன.எனது ஆரம்பக் கல்வியானது, நாகர்கோவில் தேசிக விநாயக தேவஸ்தான பள்ளியில் தான் ஆரம்பமானது. அந்தப் பள்ளியில் தான் இந்தியாவின் பிரபல விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவருமான பத்ம்பூஷண் ஏ. சிவதாணு பிள்ளையும் படித்தார். இப்பள்ளி, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின், பிள்ளையார் கோவிலின் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த பள்ளி. அந்த பிள்ளையார் கோவில் நிர்வாகம், அங்கு படித்த ஏழைக் குழந்தைகளுக்கு புரதச் சத்துடன் அரிசி, உளுந்து, தேங்காய் துருவல், சிறிது உப்பு கலந்து கஞ்சி உணவு ஆகியவற்றை வழங்கியது.
நாகர்கோவிலில் இரண்டு பூக்காலங்களுக்கு நெல் அறுவடை செய்வர். பல கோவில்களிலும் இரண்டு அறுவடைக் காலங்களிலும் புத்தரிசி நிறை கொண்டாடுவதுண்டு. அந்த அளவில், அந்த செட்டித்தெரு பிள்ளையார் கோவிலிலும் புத்தரிசி நிறை வைபவம் உண்டு. அப்போது அந்தப் பள்ளிக்கு அரைநாள் விடுப்பு கூட விடுவது உண்டு. கோவிலில், அந்த பூ அறுவடை நெல்லில் இருந்து எடுத்த அரிசியில், சர்க்கரை பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து, அந்த பாயசக் கட்டியுடன் நெற்கதிர்களையும் கொத்து கொத்தாக பக்தர்களுக்கு தருவர்.
ஒவ்வொருவரும், அந்த நெற்கதிர்களை வீட்டுக்கு கொண்டு சென்று, வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நெற்கதிராய் எடுத்து ஒரு பானைக்குள் போட்டு, நெல்மணிகளையும் போட்டு வணங்குவர்.பின் மீதி இருக்கும் நெற்கதிர்களை வீட்டில் தொங்க விடுவார்கள். குருவிகள் அந்த நெல்லை சாப்பிடும். ஆறு மாதங்களுக்கு, அந்த நெல்மணிகள் வீட்டில் தொங்கும். தொங்கும் கதிரில் குருவிகளின் குரல் கேட்கும். சிறு குழந்தைகளுக்கு, நாம் சாப்பிடுகிற உணவு எப்படி வருகிறதென்பதையும், உழவர்களின் உழைப்பையும், மழையின் அவசியத்தையும், அந்தக் கதிர்கள் தினமும் நினைவுபடுத்தும்.
அப்படி, அந்த பிள்ளை யார் கோவில் கல்வி, வேளாண் அறிவு, பறவை களுடன் நேசம் என, சமுதாயப் பணியை நிறைவாக, அன்று செய்தது. நாகர்கோவில் சேது இலக்குமிபாய் அரசு மேல்நிலைப்பள்ளியில், நான் ஏழாம் வகுப்பிலிருந்து மேல்நிலைப்பள்ளி வரை படித்தேன். அந்தப் பள்ளியில் தான், நாணயவியல் அறிஞரும், தினமலர் கவுரவ ஆசிரியருமான இரா. கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் சுந்தர ராமசாமி போன்ற பேரறிஞர்கள் எனக்கு முன் படித்திருந்தனர்.அந்தப் பள்ளியில், மதச் சார்பற்று, கோவிலின் கலை நுட்பங்கள், கோவில் சார்ந்த கலைகளைப் பற்றியெல்லாம் சொல்லித் தந்த நினைவு எனக்கு இருக்கிறது. அவையே அத்தகைய ஆளுமைகளை, பல்வேறு துறைகளில் நம் நாட்டிற்கு சிறப்புறத் தந்தன. முப்பது ஆண்டுகளுக்கு முன் வரை, இதே போன்ற இயல்போடு தான் நாட்டிலுள்ள பெரும்பாலான கோவில்களும், கல்விக் கூடங்களும் இருந்திருக்கின்றன. கல்விக்கூடங்களை கோவில்களாகப் பார்த்தனர். தற்போது கோவில்கள், கோவில்களாக இல்லாததால், கல்விக் கூடங்களும் வர்த்தக மையங்களாகி விட்டன. படிக்கும் மாணவர்களின் மனதிலும் கடவுளென்ற உணர்வு மட்டுமே இருந்தது. மதமென்ற உணர்வு பரவலாக உருவாகவில்லை.
நாகர்கோவில் புனித சவேரியார் ஆலயத் திருவிழாவில், ஹிந்துக்கள் மெழுகுவர்த்தி ஏற்றுவர். கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் துாக்கத் திருவிழா, மண்டைக்காடு பகவதியம்மன் திருவிழாக் களில் பிற மதத்தினர் நம்பிக்கையோடு நேர்ச்சைகள் செய்வதுண்டு. தமிழகத்தில் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், காஞ்சிபுரம், காரைக்கால், சென்னை என, எல்லாப் பகுதிகளிலும் இதை விட சிறந்த உதாரணங்கள் இருக்கின்றன. கோவில்களும், கல்விக் கூடங்களும் இயல்பாகவே சமூகத்தில் ஒரு பெரிய பங்களிப்பை அப்போது அளித்திருக்கின்றன.
இதே இயல்புடனேயே, நாடு முழுக்க பல கோவில்கள் சமுதாயப் பணியை நிறைவுறச் செய்து வந்தன. தற்போது கோவில்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்குமான இடைவெளி அதிகமாகி, தொடர்பே இல்லாமல் விலகிப் போய்விட்டது. அந்த இடைவெளியை பணமும், ஆசையும் நிரப்பி விட்டன. இப்போது பெரும்பாலான ஹிந்து கோவில்கள் அரசின் வசமாகி விட்டன. கோவிலுக்கும், ஊருக்கும் தொடர்பில்லாத, அரசு அலுவலர்களால், ஒரு அரசு அலுவலகமாகவே மாறிவிட்டன. கோவிலுக்குரிய கோடிக்கணக்கான சொத்துகள் பராமரிக்கப்படாமல், ஏமாற்றுக்காரர்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் அவலம் நிலவுகிறது. முன்பெல்லாம் கோவிலின் அமைப்பும், ஆரோக்கியமும், நிர்வகிப்பவர்களின் ஒழுக்கமும், பக்தர்களை கோவில்களுக்கு சொத்துகளை தானமாக கொடுக்கும் மன நிலையை உருவாக்கின. அப்போதும் தவறுகள் நடந்திருக்கின்றன. அதை சரி செய்தும் இருக்கின்றனர். ஆனால் அப்போது அவை, கோவிலின் ஆரோக்கியத்தை இந்த அளவிற்கு பாதிக்கவில்லை.கோவில்கள் சுதந்திரமாக இயங்கின. அதை அரசாங்க விதிமுறைகளுக்கு உட்படுத்தினால், ஆன்மிகமென்பது வெறும் சடங்கு சம்பிரதாயங்கள் சார்ந்தவைகளாகவே மாறிப்போகும்.
ஆன்மிகம் வேறு; அதிகாரம் வேறு. இரண்டும் எதிர் எதிரானவைகள். ஆன்மிகத்தை அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்போது, கோவில் தனது ஆன்மிகத் தனித்துவத்தை இழக்கத் தான் செய்யும். பல கோவில்கள், பல்வேறு சமுதாய வகை சார்ந்தே இருந்து வந்திருக்கின்றன. அந்தக் கோவிலை உயர்ந்த நோக்கோடு, உரிய நெறிமுறைகளோடு, அந்த சமுதாயத்தினர் நிர்வகித்து வந்திருக்கின்றனர். எல்லா ஜாதியினரும் சுதந்திரமாக வழிபடுமளவில், சமூக ஒற்றுமையை நிலை நிறுத்துமளவிலேயே கோவில்கள் அமைந்துள்ளன.எல்லா ஜாதியிலும் நல்லவர்கள், கெட்டவர்கள் இருப்பர். அந்த தனி நபர்களின் இயல்புகளை வைத்து, ஜாதி கண்ணோட்டத்தோடு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தால், ஜாதியை இந்த சமூகத்தை விட்டு ஒழிக்கவும் இயலாது; மனித சமூகம், இறை நிலையான உயர்ந்த நிலையைஎட்டவும் இயலாது.
இன்றும், தனியார்வசம் நிறைய கோவில்கள் பராமரிக்கப்படுகின்றன. அவர்களின் சிறப்பான உழைப்பிலும், பக்தியிலும் கோவிலின் வருமானம் அதிகமாகும்போது, அரசாங்கம் அதை தன்வசம் எடுத்து விடுகிறது. ஆனால், அரசாங்கம் ஏற்கனவே தன்வசம் வைத்திருக்கும் கோவில்களில் பல, சரியான பராமரிப்பின்றி வெறும் கற்சிற்பங்களாகவே இருக்கின்றன. ஒரு வேளை பூஜை கூட செய்யப்படாத கோவில்களும் இருக்கின்றன.ஊர்க் குற்றங்கள், அநீதி களைக் கூட, கோவில்களைச் சார்ந்த பெரியவர்கள் தீர்த்து வைத்ததுண்டு. அவர்களின் நடத்தையும், உயர்ந்த ஆளுமையும், அநீதி இழைக்கும் குற்ற வாளிகளுக்குள், ஊர் பெரியவர்கள் மீது ஒரு பயபக்தியை இயல்பாகவே உருவாக்கி இருக்கிறது.கட்டுப்பாடுகளும், அதை நிறைவேற்றுகிற அதிகாரங்களை செயல்படுத்துபவையும் தான் அரசாங்கங்கள். அரசின் விதிமுறைகளென்பது, நாட்டிலுள்ள எல்லாருக்கும் பொதுவானவை.
ஆனால், அதிகார விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர் கடவுள். ஆன்ம உணர்வுகளால் அறியப்படுபவர். இன்னும் கடவு ளென்பது நம்பிக்கை சார்ந்தது; சுதந்திரமானது. அதிலும், ஹிந்து மத நம்பிக்கைகள் மிகவும் சுதந்திரமானவை. எல்லா நம்பிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் இயல்பினைக் கொண்டது ஹிந்து மதம். ஹிந்து மதத்தில் இனம், மொழி, வட்டாரம் சார்ந்து, பல்வேறு நம்பிக்கைகள் இருக்கின்றன. ஆகம விதிகளுக்குட்பட்டும் ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டும் பல்வேறு கோவில்கள் ஹிந்து மதத்தில் இருக் கின்றன.
ஒவ்வொரு ஊர் கோவிலிலும், பூஜை முறையிலும், கோவில் அமைப்பிலும், தனித்துவமான காரணங்களுடனான நம்பிக்கைகள் இருக்கின்றன. அந்த ஊரின் பூகோள அமைப்பிற்கும், ஊர் பண்பாட்டுக்கும், சமுதாய அமைப்பிற்கும் ஆரோக்கியம் தரும் அளவிலேயே அந்தந்தப் பகுதி கோவில்கள் அமைந்துள்ளன.ஊரின் சிறப்பையும், ஊரின் வரலாற்றையும் வெளிப்படுத்தும் விதமாகவே, கோவிலின் சிலைகள் விளங்குகின்றன. கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும் அவை விளங்கின.அந்தந்த கோவிலைப் பற்றி, அந்தந்த பகுதி மக்கள் தான் உணர்வுப் பூர்வமாக அறிந்திருக்க இயலும். ஒரு கோவிலின் வரு மானம் அதிகமானாலே, அந்தக் கோவிலை அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது. கோவிலுக்கு தொடர்பில்லாத அலுவலர்களால், கோவில் பூஜைகள் வெறும் சடங்குகளாகிப் போகின்றன. கோவிலின் தனித்துவம் தன்னை இழக்கத் தொடங்கும் போதே, காணிக்கை வருமானங்கள் குறைந்து போகின்றன. கோவிலோடு நெருங்கிய தொடர்பில் இருந்த உள்ளூர்வாசிகள், கோவிலை விட்டு விலகிக் கொள்கின்றனர்.
சில காலங்களிலேயே, கோவில் தனது தனித்துவத்தை இழந்து, வெறும் சிலைக் கூடங்களாகவே மாறிப் போகின்றன. கோவில் சார்ந்த கலைகளும், தன் நிலைகளை இழந்து நிர்கதியாகி விடுகின்றன. கோவில் குளங்கள், பேருந்து நிலையங்களாகவும், விளையாட்டு பூங்காக்களாகவும் மாறி, திருமாலுக்கு சொந்தமான பலவும், பிற்காலத்தில் வெறும் மால்களாக மாறும் அபாயங்களும் உண்டு.மற்ற மதக் கோவில்களைப் போல ஹிந்து மதக் கோவில்களும், அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட வேண்டும். சத்குரு போன்ற குருமார்கள் பலர், சமீபத்தில் இந்த உயர்ந்த லட்சியத்திற்காக குரல் கொடுத்திருக் கின்றனர்.
அந்தந்த கோவில் நிர்வாகங்கள், அந்தந்த ஊரின் நீதியையும், நேர்மையையும் நிறைந்தறியப்பட்ட, ஊர் பெரியவர்களால் குழு அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதிகள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் போன்ற பல்துறைப் பெருமக்களும், அவர்களின் சீர்மையும், நேர்மையும் சார்ந்து உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும்.கோவில்களும், கல்விக் கூடங்களும் ஊர் சார்ந்து இருந்தால், அரசியலென்ற சாக்கடை நீர் இயல்பாகவே துாய்மையாகும். இனியாவது, அதை செய்வோம்!
- குமரி எஸ். நீலகண்டன்
சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு:
மொபைல்: 94446 28536
இ - மெயில்:punarthan@gmail.com