பதிவு செய்த நாள்
22
ஏப்
2021
10:04
திருப்பதி:திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள, சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான், அனுமனின் பிறப்பிடம் என, திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் அறிவித்தது. ராம பக்தரான அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம், திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.
ஆய்வு: இதுகுறித்து ஆய்வு செய்ய, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளி தர சர்மா தலைமையில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது. இக்குழுவினர், நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தி, தங்கள் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில், திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான, அஞ்சனாத்ரி மலையில் தான், அனுமன் பிறந்தார் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விளக்க உரை மற்றும் ஆதாரங்கள் அடங்கிய, 20 பக்க கையேடும் வெளியிட பட்டது.ராமநவமி தினமான நேற்று, திருமலை திருக்கோவிலில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது முன்னிலையில், இந்த அறிவிப்பை தேஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர்.இந்தப் பணிக்காக ஆய்வு செய்யப்பட்ட, 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 12 மற்றும் 13ம் நுாற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்ரி பற்றிய குறிப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு: கர்நாடகாவின் ஹம்பி என்ற இடம் தான், ஹனுமனின் பிறப்பிடம் என, இதுநாள் வரை கருதப் படுகிறது.மேலும், ஜார்க்கண்டில் உள்ள அஞ்சன் மலைப்பகுதி; குஜராத்தில் உள்ள நவ்சாரி; ஹரியானாவின் கைத்தல்; மஹாராஷ்டிராவின் திரியம்பகேஸ்வர் அருகில் உள்ள அஞ்சனேரி உள்ளிட்ட இடங்களும், அனுமனின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, திருமலையின் அஞ்சனாத்ரியில் பிறந்த அனுமன், அங்கிருந்து, 363 கி.மீ., தொலைவில் உள்ள ஹம்பிக்கு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. திருமலை தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு, புராண, இதிகாச ஆய்வாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.