பதிவு செய்த நாள்
23
ஏப்
2021
05:04
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், கோயில் வளாகத்திலேயே நடத்தப்பட உள்ளது.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு பாத்தியமான, ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயிலில், கோடை திருநாள் என்னும் சித்திரைத் திருவிழா மதுரை அழகர் கோவிலுக்கு இணையாக ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இதன்படி நேற்று காலை 10:30 மணிக்கு, மூலவர் பரமஸ்வாமி, உற்சவர் சுந்தரராஜ பெருமாள் மற்றும் யாகசாலை மூர்த்திக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் அரசின் கொரோனா வழிகாட்டுதலின்படி, சமூக இடைவெளியை பின்பற்றி, தீர்த்த குடங்களுடன் அர்ச்சகர்கள், டிரஸ்டிகள் யாக சாலைக்கு புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து ஏப். 26 காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், கொரோனா தொற்றால் அரசு வழிகாட்டுதலின்படி, கோயில் வளாகத்திலேயே நடக்க உள்ளது. மேலும் குதிரை வாகன சேவை, மண்டூக மகரிஷி சாப விமோசனம், தசாவதாரம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் கோயில் வளாகத்தில் நடக்க உள்ளது. மேலும் ஒவ்வொரு விழாக்களின் போதும் அதிக அளவிலான பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்றும், பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் கட்டாயம் அணிந்து கோயிலுக்குள் வரவேண்டுமென டிரஸ்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.