பதிவு செய்த நாள்
24
ஏப்
2021
03:04
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தியடைந்த தினம் இன்று.
● நல்லெண்ணம் என்னும் நறுமணம் நாலாபுறமும் பரவினால் உலகம் நன்மை பெறும்.
● ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட ஒரு நல்ல செயலில் ஈடுபடுவது நல்லது.
● வாழ்க்கை என்ற நாணயத்திற்கு இன்பம், துன்பம் என இரு பக்கங்கள் உண்டு.
● மற்றவர் துன்புறுத்தினாலும் தீங்கு செய்ய விரும்பாதவனே நல்ல மனிதன்.
● ஒவ்வொரு செயலுக்கும் ஈடான விளைவு அதற்குரிய காலத்தில் வந்து சேரும்.
● விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும்.
● எண்ணம், சொல், செயல் மூன்றாலும் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுப்பவனே உயர்ந்த மனிதன்.
● உன்னைப் பற்றி உயர்வாக எண்ணுவது போல, பிறரைப் பற்றியும் கருது.
● தன்னைப் பற்றி எப்போதும் தாழ்வாக கருதுபவன் வாழ்வில் தாழ்ந்த நிலையை அடைவான்.
● காய்ச்சலில் கிடப்பவனுக்கு கற்கண்டும் கசப்பது போல தீயவர்களுக்கு கடவுளின் நாமம் கூட கசக்கும்.
● இயற்கையின் அழகில் ஈடுபட்டு அதன் ஒழுங்குமுறை, நேர்த்தி, கம்பீரத்தை போற்றுங்கள்.
● கடவுளை ஆராய முயற்சிக்காதே. நம்பிக்கையும், ஆழ்ந்த அன்பும் இருந்தால் அவரை அடைய முடியும்.
● உலகெங்கும் இருக்கின்ற தெய்வீகத்தை காண்பதற்காகவே கண்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
● பிறரிடம் யாசிப்பவனை விட அவனுக்கு இல்லை என மறுப்பவனே மிக இழிவானவன்.
● கடவுளின் இருப்பிடமான உடல், மனதை தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.
● மூன்றாம் பிறைக்கு அதன் வளைவே அழகு சேர்க்கிறது. மனிதனுக்கும் பணிவே பெருமை சேர்க்கிறது.
● அயல்நாட்டு மோகம் என்னும் வலையில் நம் பாரம்பரியமும், பண்பாடும் சிக்கிக் கிடக்கிறது.
● பட்டம், பதவிக்காக மனிதன் அலைந்து திரிவது கூடாது. அது தானாகவே தேடி வர வேண்டும்.
● நற்பண்பு இல்லாத மனிதன் உப்பில்லாத பண்டத்திற்குச் சமம். அவனை யாரும் விரும்ப மாட்டார்கள்.
● கடவுளிடம் மனஅமைதியை வேண்டுங்கள். இதுவே நாம் செய்ய வேண்டிய நியாயமான பிரார்த்தனை.
● சுயநலமற்ற சேவையில் ஈடுபடுவது ஒன்றே மனம் அமைதி பெறுவதற்கான வழி.
● எல்லா உயிர்களும் கடவுளின் குழந்தைகள் என்பதை உணர்ந்தால் உலகம் அன்புமயமாகி விடும்.
● பிறருடைய கருத்தை மதிக்கப் பழகுங்கள். மற்றவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே நற்பண்பு.
● பூமிக்கு வரும் போது எதையும் கொண்டு வரவுமில்லை. போகும் போது எதையும் கொண்டு போகவும் முடியாது. - சொல்கிறார் சாய்பாபா