பதிவு செய்த நாள்
01
மே
2021
04:05
சேலம்: கொரோனாவால் திருமணங்களுக்கு கட்டுப்பாடு, கோவில்கள் மூடலால், பூக்கள் விலை சரிந்துள்ளது. சேலம், வ.உ.சி., பூ மார்க்கெட்டுக்கு, கடந்த வாரம் வரை, தினமும், 1.5 டன் விற்பனைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது, 2 டன்னாக அதிகரித்துள்ளது. ஆனால், கொரோனாவால் திருமணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு, பூப்புனித நன்னீராட்டு விழா, வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை, மக்கள் ஒத்திவைத்து வருகின்றனர். அத்துடன், கோவில்கள் மூடப்பட்டு, திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பூக்கள் பயன்பாடு குறைந்து, விலை சரிந்துள்ளது. விலை சரிவு குறித்து, சுக்கம்பட்டி விவசாயி தங்கவேல் கூறியதாவது: பூக்கள் விளைச்சல் அதிகரித்த நிலையில், கொரோனா பரவலால், அதன் பயன்பாடு சரிந்துள்ளது. கர்நாடகாவில் முழு ஊரடங்கு, இங்கு இரவு நேர ஊரடங்கால், பகலில் மட்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், வெளி மாவட்டங்களுக்கு பூக்களை அனுப்ப முடியாததால், விலை சரிந்துள்ளது. அறுவடை கூலிக்கு கூட விலை கிடைக்காததால், பல இடங்களில், செடிகளில் இருந்து பூக்களை பறிக்காமல் அப்படியே விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.