ஆந்திராவிலுள்ள காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு விஜயம் செய்திருந்தார் காஞ்சி மகாபெரியவர். தேவஸ்தான அதிகாரிகளிடம் அவர் கேட்ட கேள்வி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. பல ஆண்டுகளுக்கு முன் வந்த போது அப்பகுதியில் பஞ்சமுக லிங்கம் ஒன்றைத் தான் தரிசித்ததாகத் தெரிவித்தார். அந்த கோயில் எங்கே இருக்கு தெரியுமா எனக் கேட்டார். தாங்கள் அறிந்தவரை அப்படி ஒரு பஞ்சமுக லிங்கம் இருப்பதாக அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. மகா பெரியவரின் ஞாபக சக்தி உலகப் பிரசித்தம். அவர் சொன்னால் கோயில் நிச்சயம் இருக்கும் அதை எப்படிக் கண்டுபிடிப்பது? என யோசித்தனர். ஊரிலுள்ள பெரியவர்களை அழைத்து விசாரித்தார் மகாபெரியவர். அவர்களில் சிலர் அருகிலுள்ள பிரம்மகுடி என்னும் குன்றின் மீது கோயில் ஒன்று இருந்தது. நீண்ட காலமாகப் பராமரிக்கப்படாத அக்கோயிலில் இருக்க வாய்ப்பிருக்கலாம்’’ என்றனர். பிரம்மகுடி குன்றுக்குச் சென்று அருகே உள்ள ஊர்களிலுள்ள இளைஞர்களை உதவிக்கு அழைத்த மகாபெரியவர், குன்றின் உச்சிக்குச் செல்ல பாதை ஏற்படுத்தித் தாருங்கள் என்றும் தெரிவித்தார். மகாபெரியவரின் விருப்பத்தை அறிந்த இளைஞர்கள் தயங்குவார்களா என்ன? உற்சாகத்துடன் உடனடியாக பணியில் இறங்கினர். அக்கம்பக்கத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களும் கூட உதவ முன் வந்தனர். மளமள என்ற புதர்கள் வெட்டும் பணி தொடங்கியது. மகாபெரியவரின் மேற்பார்வையால் பாதை செப்பனிடப்பட்டு, இரண்டே வாரத்தில் உச்சி வரை பாதை அமைத்தனர். முள்புதர் சூழ்ந்திருந்த கோயிலின் உள்ளே சென்றார் மகாபெரியவர். கருவறையைக் கண்டதும் அவரது விழிகள் பளபளத்தன. அங்கு கம்பீரமாகக் காட்சியளித்தது பல ஆண்டுக்கு முன்பு அவர் தரிசித்த பஞ்சமுக லிங்கம். அக்கம்பக்கத்து கிராமத்து மக்களை எல்லாம் அன்புடன் அழைத்து, ‘ இனி கோயிலைப் பராமரிப்பது உங்களின் கடமை’ என்பதை மகாபெரியவர் வலியுறுத்தினார். நித்ய பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்தார். அபூர்வமான இந்த பஞ்சமுக லிங்கத்தை வழிபட்டு வந்தால் அந்த பகுதியே வளம் பெருகும் என்றார். அதைக் கேட்டு அதிகாரிகள், மக்கள், கோயிலுக்குப் பாதை அமைத்தவர்கள் என அனைவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.