சமையலறையில் ‘சாலட்’ தயாரித்துக் கொண்டிருந்தாள் ஒரு தாய். மீதமான காய்கறி கழிவுகளை ஒதுக்கி வைத்திருந்தாள். அப்போது மகள், ‘‘அம்மா! பர்த்டே பார்ட்டிக்காக என் பிரண்ட் கிளப்புக்கு கூப்பிடறாம்மா. போகட்டுமா?” எனக் கேட்டாள். ‘பார்ட்டி’ என்ற பெயரில் இக்காலத்தில் பிள்ளைகள் கும்மாளமிட்டுக் கொண்டு கெட்டுப் போவதை உணர்ந்த தாய்க்கு கோபம் கொப்பளித்தது. ஆனால் மகள் விடுவதாக இல்லை. ‘‘அம்மா! நீங்க நினைக்கறது சரிதான். ஆனா பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து போவதால் பயமில்லை. கட்டாயம் வர்றேன்னு சொல்லிட்டேன், ப்ளீஸ்’’ என்றாள். அமைதியாக நின்ற தாய், சட்டென்று ஒதுக்கி வைத்த கழிவுகளை அள்ளி சாலட்டில் கொட்டினாள். ‘‘அம்மா! உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? குப்பையை அள்ளி சாலட்ல போடுறீங்க? கெட்டுப் போயிடாதா?’’ என அதிர்ந்தாள் மகள். ‘‘அதனால் என்ன? கெட்டுப் போனா போகட்டும்’’ என்றாள். மகள் புரியாமல் திகைத்தாள். ‘‘உன்னோட மனம் குப்பையான சிந்தனையை ஏற்க தயாராகும் போது, வயிறு குப்பையான உணவை ஏற்கக் கூடாதா என்ன?’’ எனக் கேட்டாள். உண்மையை உணர்ந்த மகள் ‘நான் வரவில்லை’ என தோழியரிடம் தெரிவித்தாள். இந்த சம்பவம் உணர்த்தும் உண்மை என்ன...தவறான பாதையில் உலகம் போனால் நாமும் அப்படியே போக வேண்டியதில்லை. ‘‘உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் எல்லாம் நாட்டம் வேண்டாம். ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் மீது அன்பில்லை”