பதிவு செய்த நாள்
14
மே
2021
05:05
பாண்டவர்கள் வழிபாடு செய்த சிவன் கர்நாடக மாநிலம் மங்களூருவில் பாண்டேஸ்வரர் என்னும் பெயரில் கோயில் கொண்டிருக்கிறார். இவருக்கு தாராபிேஷகம் செய்தால் தடையின்றி விருப்பம் நிறைவேறும்.
பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாட்டத்தில் தோற்றார். அவர்களின் மனைவி திரவுபதியை பலர் முன்னிலையில் கவுரவர்களில் மூத்தவனான துரியோதனன் அவமானப்படுத்தினான். அவமானம் தாங்காத அவள், ‘குருக்ஷேத்திர யுத்தத்தில் துரியோதனனின் தலை உருண்டால் தான் என் கூந்தலை அள்ளி முடிப்பேன்’ என சபதம் செய்தாள். இதன் பிறகு பாண்டவர்கள் காட்டிற்குப் புறப்பட்டனர். ஒரிடத்தில் அவர்கள் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த லிங்கம் இருந்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் உருவானது. பாண்டவர்கள் வழிபட்டதால் சுவாமிக்கு ‘பாண்டேஸ்வரர்’ எனப் பெயர் வந்தது. சுவாமிக்கு மகாலிங்கேஸ்வரர் என்றும் பெயருண்டு. கோவில் முகப்பில் பிரம்மாண்டமான சிவன், நந்தி சிலைகள் உள்ளன. பஞ்சுளி, முண்டித்தாயா, வைத்தியநாதர், வைஷ்ணவி லட்சுமிநாராயணர் ஆகியோருக்கும் சன்னதி உள்ளன. 22 அடி உயர அனுமன் சிலையும் உள்ளது.
சிவனின் ஜடாமுடி கருவறையைச் சுற்றிப் பரந்து கிடப்பதாக கருதப்படுவதால் இங்கு கருவறையைச் சுற்றும் வழக்கமில்லை. கார்த்திகை சோமவார நாட்களில் ருத்ர யாகம், ருத்ரபூஜை நடத்துகின்றனர். அப்போது ருத்ராட்சம், லட்ச வில்வ இலைகள், பஞ்சமிர்த அபிஷேகம் செய்கின்றனர். இந்த பூஜையைத் தரிசித்தால் எதிரி தொல்லை மறையும்.
பசுமடத்தில் காளை மாடு வளர்க்கப்படுகிறது. உச்சிக்கால பூஜை, அர்த்தஜாமபூஜையின் போது கருவறை படிக்கட்டில் காளை ஏறியதும் சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர். ஒன்பது கண்களுடன் உள்ள நந்தா தீபம் என்னும் பெரிய விளக்கு இங்குள்ளது. அணையா தீபமான இதில் எண்ணெய் விட்டால் கிரக தோஷம் மறையும். இரவில் 8:00 மணிக்கு நடக்கும் ரங்காபூஜையின் போது கோயில் முழுவதும் தீபமேற்றுகின்றனர். நாகதோஷம் தீர வெள்ளிக்கிழமை காலை 10:30 – 12:00 மணிக்குள் ராகுகாலத்தில் பாம்பு புற்றில் பால் ஊற்றுகின்றனர். பாண்டேஸ்வரருக்கு ஜலதாரை வழிபாடு நடக்கிறது. 108 துளைகள் இடப்பட்ட சிறிய கலசத்தில் புனித நீர் நிரப்பப்பட்டு கருவறையில் சிவலிங்கம் மீது கட்டப்படுகிறது. இதன் துளை வழியாக சுவாமிக்கு அபிஷேகமாவதை ‘தாராபிஷேகம்’ என்கின்றனர். தடைகள் விலகி திருமணம் நடக்கவும், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு கிடைக்கவும் இந்த வழிபாட்டைச் செய்கின்றனர்.
தலவிருட்சமான அரசமரம் கோயிலுக்கு எதிரில் உள்ளது. இதில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இருப்பதாக ஐதீகம். பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள், அநீதியால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் வேண்டி மரத்திற்கு அமாவாசை நாட்களில் பூஜை நடத்துகின்றனர். பவுர்ணமியன்று சத்திய நாராயண பூஜையும், மாதப்பிறப்பு, சங்கரமணா நாட்களில்( ஒருராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சூரியன் செல்லும் நாள்) 11 புரோகிதர்கள் பங்கேற்கும் சதுர்தாபிஷேக பூஜையும் நடக்கிறது.
எப்படி செல்வது: மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ,
விழா நாட்கள்: சித்திரையில் பிரம்மோற்ஸவம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி
நேரம்: காலை 5:30 – 1:00 மணி, மாலை 4:30 - 8:00 மணி