பதிவு செய்த நாள்
14
மே
2021
05:05
நீண்ட நாட்களாக போராடியும் நினைத்தது நடக்கவில்லையே என்ற ஏக்கமா...மதுரை மாவட்டம் செக்கானுாரணி அருகிலுள்ள கிண்ணிமங்கலம் ஏகநாதரை, பிரதோஷ நாளில் தரிசித்தால் வாழ்வில் குறையேதும் இருக்காது.
மதுரை நாகமலையைச் சேர்ந்தவர் அருளானந்த சத்குரு சுவாமிகள். அவர் தனக்குரிய சமாதி அமைக்கும் இடத்தை தேர்ந்தெடுக்க விரும்பினார். ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம், அடியில் துளை உள்ள காந்தக் கிண்ணி ஒன்றை(கிண்ணம்) கொடுத்து காராம்பசுவின் பாலைக் கறக்கும்படி கூறினார். துளையுள்ள கிண்ணமாக இருந்தாலும், ஒரு துளி பால் கூட சிந்தாமல் கிண்ணி நிரம்பியது கண்ட சிறுவன், நடந்ததை ஊர் மக்களிடம் தெரிவித்தான். சுவாமியின் மகிமையறிந்த மக்கள், தங்கள் பகுதிக்கும் வரும்படி சுவாமிகளை அழைத்தனர். தாம் எந்த இடத்தில் சமாதியாக வேண்டும் என்பதை காந்தக் கிண்ணி தீர்மானிக்கும் என்று சொல்லி கையில் இருந்த கிண்ணியை ஆகாயம் நோக்கி வீசினார். அது ‘மங்கலப்பட்டி’ கிராமத்தில், சங்கொலி எழுப்பி விழுந்தது. கிண்ணி விழுந்ததால் இப்பகுதி ‘கிண்ணிமங்கலம்’ எனப்பட்டது. சுவாமி ஜீவசமாதி அடைந்த இடத்தில் கோயில் கட்டி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ‘ஏகநாதர்’ எனப் பெயர் சூட்டினர்.
கருவறையை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் ஆனந்தவள்ளி அம்மனுக்கு சன்னதி உள்ளது. கன்னி மூலை கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பைரவர், வீரபத்திரர் சன்னதிகள் இங்குள்ளன.
ஒருமுறை கிண்ணிமங்கலத்தில் இருந்த குட்டிசுவர் ஒன்றின் மீது அமர்ந்தபடி பக்தர்களுக்கு சுவாமிகள் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது தவசக்தியால் மண்ணைக் கொடுக்க, அது அவரவர் விரும்பிய பொருட்களாக மாறியது. அந்த வழியாக இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் அப்போது அங்கு வந்தார். ஆனால் யாரும் அவரைப் பொருட்படுத்தவில்லை. ‘‘என்னை அலட்சியப்படுத்தும் அளவுக்கு இந்த குட்டிசுவர் சாமியாருக்கு மக்களிடம் செல்வாக்கா?’ எனக் கோபத்தில் கத்தினார் மன்னர். உடனே சுவாமிகள், கையால் குட்டிச்சுவரை தட்டிக் கொடுக்க, அது குதிரையாக மாறி வானில் பறந்தது. இந்த அதிசயம் கண்ட மன்னர் மன்னிப்பு கேட்டதோடு, குதிரை வட்டமிட்ட நிலப்பகுதியை மானியமாக வழங்கினார்.
சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த வைகாசி பூர நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜை நடக்கும். நினைத்தது நடக்கவும், ஏக்கங்கள் தீரவும், மகா சிவராத்திரி, பிரதோஷ நாளில் சிவன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர்.
எப்படி செல்வது
மதுரை – தேனி சாலையில் 18 கி.மீ., துாரத்தில் செக்கானுாரணி. இங்கிருந்து திருமங்கலம் சாலையில் 4 கி.மீ,