நமது வீட்டில் குழந்தைகள் பிடிவாதம் செய்தால் அவர்களை சமாதானப்படுத்த பொம்மை வாங்கித் தருவதாகவும், சாக்லெட் வாங்கித் தருவதாகவும் சொல்லி சமாதானம் செய்வோம். அப்படி ஏதேனும் வாக்கு கொடுத்தால், அதை நிறைவேற்ற வேண்டும் என்கிறார் நாயகம். பொய் சொல்லக் கூடாது என்பது அவரது கொள்கை. ஒருமுறை அமீர் என்பவரின் தாய் ‘‘ இங்கே வா, உனக்கு சாப்பிட பண்டம் தருகிறேன்’’என்றார். இதைக் கேட்ட நாயகம் அந்த பெண்ணிடம் ‘‘உங்கள் மகனுக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள்?’’எனக் கேட்டார். ‘‘நான் அவனுக்கு சில பேரீச்சம்பழங்கள் கொடுக்கப் போகிறேன்’’ என்றார் தாய். ‘‘அம்மா! நீங்கள் அமீருக்கு கொடுப்பதாக சொன்னதை நிச்சயமாக கொடுத்து விடுங்கள். அவ்வாறு கொடுக்காவிட்டால் உங்களது கணக்கில் ஒரு பொய் எழுதப்பட்டு விடும்‘‘ என்றார். எனவே பொய்யான வாக்குறுதிகளை யாருக்கும் தர வேண்டாம்.