விக்கிரமசிங்கபுரம்: மழை வேண்டி காரையார் மலைவாழ் பழங்குடியின காணி மக்கள் வனப்பகுதியில் உள்ள கரையான் புற்றுக்கு விசேஷ வழிபாடு செய்தனர். காரையாறில் வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து வாழ்ந்து வருபவர்கள் மலைவாழ் பழங்குடியின மக்கள். பருவமழை பெய்ய தவறியதன் காரணமாக காரையார் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை சேர்ந்த சின்னமயிலாறு, பெரியமயிலாறு, அகஸ்தியர்நகர், சேர்வலார், இஞ்சிக்குழி ஆகிய மலைவாழ் கிராமங்களை சேர்ந்த காணியின மக்கள் மழைவேண்டி விசேஷ வழிபாடு நடத்த முடிவு செய்தனர். இக்கிராமங்களை சேர்ந்த சுமார் 40 பேர் காரையார் பாணதீர்த்த அருவியின் மேல் உள்ள வனப்பகுதிக்கு சென்று அங்கிருந்த கரையான் புற்றுக்கு தங்களின் குல வழக்கம்போல் மந்திரம் ஓதி கரையான் புற்றுமேல் தண்ணீர் ஊற்றி விசேஷ வழிபாடு செய்தனர். பின்னர் மழை வேண்டி கொக்கரபாட்டு என்ற பாட்டு பாடினர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட காணியின மக்களிடம் கேட்டபோது, ""எங்களின் குல வழக்கப்படி இவ்வாறு பூஜை செய்தால் மழை பெய்யும். நாங்கள் இந்த பூஜையை நேற்று முன்தினம் செய்தோம். எங்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை. பிரார்த்தனை நடந்த அன்று மாலையே வனப்பகுதியில் மேகமூட்டம் காணப்பட்டது. அன்று இரவே அப்பகுதியில் சாரல் மழை பெய்யத் துவங்கிவிட்டது. தொடர்ந்து வனப்பகுதிக்குள் இரண்டாவது நாளாக நேற்று (15ம் தேதி) மழை பெய்து கொண்டிருக்கிறது என்று கூறினர். இந்நிலையில் நேற்று காரையார், சேர்வலார், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மாலை சுமார் 4 மணிக்கு மேல் லேசான சாரல் பெய்யத் துவங்கியது.