ஏதோவொரு காரணத்தால் முகூர்த்த நாளில் திருமணம் நடத்த முடியவில்லையா... கவலைப்பட வேண்டாம் மதுரைக்கு அருகிலுள்ள ஏடகநாதர் கோயிலுக்கு வாருங்கள். ஏழாம் நுாற்றாண்டில் மதுரையை அரிகேச நெடுமாற பாண்டிய மன்னர் ஆட்சி செய்தார். இவரது மனைவி மங்கையற்கரசி சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர். ஆனால் மன்னர் சமண மதத்தில் இணைந்தார். இதனால் வருந்திய மங்கையற்கரசி, மீண்டும் பாண்டிய நாட்டில் சிவ வழிபாடு தழைக்க விரும்பினார். அதற்காக வேதாரண்யத்தில் தங்கியிருந்த சம்பந்தரை வரவழைக்க சிவனடியார்களை அனுப்பினார். அப்போது அங்கிருந்த திருநாவுக்கரர், ‘‘நாளும் கோளும் சரியில்லை; வேறொரு நாளில் மதுரைக்கு செல்லுங்கள்’’ என சம்பந்தரை தடுத்தார். ‘‘சிவனடியார்களை நவக்கிரகங்கள் ஒன்றும் செய்ய முடியாது’’ என்று சபதமிட்டு புறப்பட்டார் சம்பந்தர். மதுரைக்கு வந்த சம்பந்தர் மடம் ஒன்றில் தங்கினார். இதையறிந்த சமணர்கள் அந்த மடத்திற்கு தீயிட்டனர். ‘‘அந்தத் தீ அரசனையே சாரட்டும்’’ என்று சொல்லி பாடினார். அந்த நெருப்பு மன்னரின் உடம்பில் வெப்பு நோயாக மாறியது. வலி தாங்க முடியாமல் மன்னர் கதறினார். சம்பந்தரை வரவழைத்தால் நோய் தீரும் என மங்கையர்க்கரசி தெரிவிக்க, மன்னரும் சம்மதித்தார். அரண்மனைக்கு வந்த சம்பந்தர் ‘மந்திரமாவது நீறு’ என்னும் பதிகத்தைப் பாடி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மடப்பள்ளி சாம்பலை மன்னருக்கு பூசினார். உடனே மன்னரின் உடம்பில் சூடு தணிந்தது. இதை அடுத்து மன்னரின் மனம் சைவ மதத்தை நோக்கிச் சென்றது. இதில் வெறுப்படைந்த சமணர்கள் அனல்வாதம், புனல்வாதம் என்னும் போட்டிக்கு சம்பந்தரை அழைத்தனர். அனல்வாதம் என்றால் பக்திப்பாடல்கள் அடங்கிய ஏடுகளை நெருப்பில் இடுவது. சம்பந்தரின் ஏடுகளை நெருப்பில் இட்ட போது அவை எரியாமல் பச்சையாகவே இருந்தன. புனல்வாதம் என்பது ஓடும் தண்ணீரில் ஏடுகளை இடுவது. சம்பந்தரின் ஏடுகளை வைகையாற்றில் இட்ட போது, அவை தண்ணீரை எதிர்த்துச் சென்று ஓரிடத்தில் கரையேறின. ஏடு கரை ஏறிய இடம் ‘திருவேடகம்’ என்னும் சிவத்தலமாக தற்போது விளங்குகிறது. ஆண்டுதோறும் இங்கு ஆவணி பவுர்ணமியன்று புனல்வாத நிகழ்ச்சி நடக்கும். இங்கு ஏடகநாதர் என்னும் பெயரில் சிவனும், ஏலவார்குழலி என்னும் பெயரில் அம்மனும் கோயில் கொண்டுள்ளனர். ஏதோவொரு காரணத்தால் அவசர அவசரமாக திருமணம் நடத்த வேண்டியிருக்கும். நாள் சரியாக அமையாது. அந்நாளில் திருமணம் நடந்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமா என்று பயப்பட வேண்டாம். திருமணப் பத்திரிக்கை, வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை ஏடகநாதர் முன்பு வைத்து பூஜை செய்யுங்கள். அவரிடம் வேண்டிக் கொண்டு ஜாம் ஜாமெனத் திருமணத்தை நடத்துங்கள். திருமண வாழ்வில் எந்த பிரச்னையும் வராது. இதனால் இவருக்கு ‘பத்ரிகா பரமேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டு திருமணம் செய்வோருக்கு எல்லா நாளும் முகூர்த்த நாளாகவே அமையும். எப்படி செல்வது : மதுரையில் இருந்து 20 கி.மீ.,