பதிவு செய்த நாள்
01
ஜூன்
2021
06:06
உடல்நலம் சரியில்லையா... மூன்று அமாவாசை தொடர்ந்து திருவள்ளூர் வீரராகவப் பெருமாளை வழிபட்டால் வாழ்வாங்கு வாழலாம்
சாலிகோத்ரர் என்னும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள குளக்கரையில் தவம் செய்தார். தை அமாவாசையன்று தனது பூஜைகளை முடித்து, உணவுக்காக வைத்திருந்த மாவை பெருமாளுக்கு நைவேத்யம் செய்ய இருந்தார். அப்போது பசியால் வாடிய வயதான அந்தணர் ஒருவர் இவரிடம் வந்து உணவு கேட்டார். முனிவரும் சிறிது மாவினைக் கொடுத்தார். சாப்பிட்டதும் இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என அந்தணர் கேட்க, தனக்காக இருந்த மாவையும் கொடுத்தார். அடுத்த தை அமாவாசை அன்றும் விருந்தாளி வருவாரா என்று காத்திருந்தார் முனிவர். மறுபடியும் அதே அந்தணர் வந்து மாவு வாங்கிச் சாப்பிட்டுச் சென்றார். மூன்றாவது ஆண்டு தை அமாவாசையன்றும் மாவு வாங்கிச் சாப்பிட்ட அந்தணர், ‘‘முனிவரே! நான் இங்கேயே படுத்துக் கொள்ளலாமா?’’ எனக் கேட்டார்.
முனிவரும் சம்மதிக்கவே, ‘எவ்வுள்’ (எந்த இடத்தில்) உறங்குவது? எனக் கேட்டார். குறிப்பிட்ட இடத்தை முனிவர் சுட்டிக் காட்டவே, அங்கு படுத்த அந்தணர், பெருமாளாக காட்சியளித்தார். இவரே இத்தலத்தில் வீரராகவப்பெருமாளாக கோயில் கொண்டிருக்கிறார். ‘‘பெருமாளே! இத்தலத்தில் மூன்று அமாவாசைக்கு தொடர்ந்து உம்மை தரிசிப்போருக்கு நோய் இல்லா வாழ்வும், செல்வ வளமும் அளிக்க வேண்டும்’’ என வரம் பெற்றார் முனிவர். மூலவருக்கு ‘எவ்வுள் கிடந்தான்’ என்றும் பெயருண்டு. நோய் தீர்ப்பவராக இருப்பதால் சுவாமி, ‘வைத்திய வீரராகவப் பெருமாள்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
திருமணத்தடை, குழந்தையின்மை, உடல்நலக்குறைவு அகல இங்கு வேண்டுதல் வைக்கின்றனர். இங்குள்ள ‘ஹிருதாபதணி’ தீர்த்தம் மனதால் செய்யும் பாவத்தையும் போக்கும் சக்தி கொண்டது. உடலில் உள்ள மரு, கட்டி மறைய குளத்தில் பாலை ஊற்றி, வெல்லத்தை கரைக்கிறார்கள்.
கருவறையில் மூலவர் பள்ளி கொண்ட நிலையில் இருக்கிறார். இவரது சிலை 15 அடி நீளமும், 5 அடி உயரமும் கொண்டது. கனகவல்லி அம்மனுக்கு ஒன்பது கஜ புடவையை நேர்த்திக்கடனாக சாத்துகின்றனர். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வாருக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது : திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ.,
விசேஷ நாள் : சித்திரை, தை மாதத்தில் பிரம்மோற்ஸவம், அமாவாசை