வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியநாயகி சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2021 04:06
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் 3 அடி உயரமுள்ள பெரியநாயகியின் கருங்கல் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகையில் அம்பாள் பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் பைப் லைன் போடும் பணி நேற்று நடந்தது. இதற்காக கோவிலில் உள்ள வசந்த மண்டபம், குளத்தின் மேற்கு பகுதியில் பள்ளம் தோண்டிய போது கருங்கல் மீது மோதும் சத்தம் கேட்டது. அப்பகுதியில் தோண்டிய போது 3 அடி உயரமுள்ள கருங்கல் அம்பாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.
கோவிலின் மூலவர் அம்பாள் பெரியநாயகி 6 அடி உயரம் கொண்டவர். கண்டெடுக்கப்பட்ட பெரியநாயகி சிலை 3 அடி உயரத்தில், நான்கு கைகளில் மேற்புற வலது கையில் தாமரை மொட்டும், இடதுபுறத்தில் நிலோத்பலம் என்ற பூ வைத்துள்ளார். கீழ்புற இடது கை, இடது தொடை மேல் வைத்தும், வலது கை பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிலையில் உள்ளார். கண்டெடுக்கப்பட்ட சிலையை கோவில் வளாகத்தில் துர்க்கை அம்மன் அருகில் உள்ள பகுதியில் ஒரு சில வாரங்களில் பிரதிஷ்டை செய்திட கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.