பதிவு செய்த நாள்
17
ஜூன்
2021
03:06
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு, கண் பாதிப்பு குறித்து தாய்லாந்து டாக்டர்களிடம் ஆலோசிக்க, கால்நடை மருத்துவக் குழு முடிவு செய்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு, ஆறு மாதத்திற்கு முன் கண் லென்ஸ் பாதித்தது. இரவில் கண்கள் வெள்ளை நிறம் போன்று காணப்பட்டதால், மதுரை கால்நடை டாக்டர்கள் ஞானசுதன், முத்துராமலிங்கம் பரிசோதித்தனர்.
அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்களும் பரிசோதித்தனர்.ஊரடங்கு காரணமாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் டாக்டர் ரமணியுடன் ஆலோசிக்கப்பட்டது. அவர் அறிவுரைப்படி, தொடர்ந்து மருந்து கொடுக்கப்பட்டது. நேற்று அவரது தலைமையில் டாக்டர் சிவசங்கர், மதுரை மண்டல உதவி இயக்குனர் சரவணன் உள்ளிட்டோர் யானை கண்ணை பரிசோதித்து, தற்போது அளிக்கும் சிகிச்சை முறையை தொடருமாறு அறிவுறுத்தினர். தாய்லாந்து நாட்டில் யானைகளுக்கென மருத்துவமனை உள்ளது. அங்கு ஒரு மாதம் டாக்டர் சிவசங்கர் பயிற்சி பெற்றுள்ளார். கோவில் நிர்வாகத்திடம் அவர் கூறுகையில், பார்வதி யானைக்கு சிகிச்சை அளிக்க, தாய்லாந்து டாக்டர்களிடம் ஆலோசித்து, ஒரு வாரத்தில் அறிக்கை தருகிறோம் என்றார்.யானைக்கு சிகிச்சைநீலகிரி மாவட்டம், கூடலுார் வனப்பகுதியில் பலத்த காயத்துடன், 30 வயது ஆண் காட்டு யானை சிரமப்பட்டு வருகிறது. வனத்துறையினர், ஈப்பன்காடு தனியார் காபி தோட்டத்தில் முகாமிட்ட யானையை பிடிக்கும் பணியை நேற்று துவக்கினர்.முதுமலை வளர்ப்பு யானை சுமங்களா, கும்கி யானை விஜய் உதவியுடன், மயக்க ஊசி செலுத்தாமல் யானையை பிடித்து கட்டினர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், யானை உடலில் இருந்த காயத்துக்கு சிகிச்சை அளித்தார். கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் அன்வர்தீன் கூறுகையில், யானைக்கு காயம் ஏற்பட்டிருந்தாலும், ஆரோக்கியத்துடன், உணவு உட்கொண்டு வருகிறது. முதுமலை கொண்டு சென்று, கராலில் அடைத்த பின், தீவிர சிகிச்சை துவங்கப்படும், என்றார்.