மாண்டியா: மாண்டியாவின் கே .ஆர்.பேட் அருகே உள்ள ஜாகினகரே கிராமத்தில் பழங்கால சமணர்கள் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏழாவது தீர்த்தங்கர் பார்சுவநாதா அல்லது 23வது தீர்த்தங்கர் பார்சவநாதாவின் சிலை என கூறப்படுகிறது. அதன் பீடம் சிதிலமடைந்து இருப்பதால் அதில் இருப்பது பாம்பு வடிவமா அல்லது ஸ்வஸ்திக் சின்னமா என்பது தெ ரியவில்லை.
ஸ்வஸ்திக் சின்னம் என்றால் சுபார்சவநாதாசிலை ; பாம்பு உருவம் என்றால் பார்சவநாதா சிலையாக இருக்கும் என கூறப்படுகிறது. இது, 12வது நுாற்றாண்டுக்கு முந்தைய சிலை என கருதப்படுகிறது. இந்த பகுதியில் தற்போது சமணர்கள் கோவில் இல்லை. ஆனால் முன்காலத்தில் இருந்ததாக பெரியவர்கள் கூறியதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். இது குறித்து ஆய்வு செய்தால் மேலும் தகவல்கள் கிடைக்கும் என கிராமத்தினர் கருதுகின்றனர். ஆராய்ச்சியாளரும் , ஆசிரியருமான ரங்கசாமி, சில நாட்களுக்கு முன் சந்தேபாசஹள்ளி கிராமம் வழியாக சென்றார். அப்போது சாலையோரத்தில் வித்தியாசமான வடிவில் கல் ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தார். அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த ஒருவரிடம் விசாரித்த போது, அவர் ஜெயின் சிலைகள் இருந்த இடத்தை கொண்டு போய் காண்பித்தார். பெட்டப்பாகவுடா என்பவர், நிலத்தை உழும்போது கிடைத்ததாக கூறி வயல் ஓரத்தில் போட்டுவை த்திருந்தார். இந்த புகைப்படங்களை ஆசிரியர் ரங்கசாமி சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். அதன் பெருமைமகளையும் குறிப்பிட்டுள்ளார். இந்த சிலை குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.