பதிவு செய்த நாள்
17
ஜூன்
2021
04:06
திருப்பூர்,அரசியல்வாதிகள் பிடியில் உள்ள பல கோவில்களின் நிலங்களை மீட்க வேண்டும், என, ஹிந்து முன்னணி கூறியுள்ளது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை, பணியாளருக்கு சம்பளம் வழங்குதல், திருவிழாக்களுக்கு பயன்படுத்துதல், பழைய மற்றும் வருமானம் இல்லாத கோவில்களுக்கு உபரி வருமானத்தை வழங்குதல் உட்பட, 75 வழிகாட்டுதல்களை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் வழங்கியுள்ளது. இவற்றை செயல்படுத்த வேண்டும். கோவிலுக்கு சொந்தமான இடங்களை வெளிப்படைத் தன்மையுடன் அறிவிப்பதாக, அறநிலையத் துறை அமைச்சர் கூறியதை வரவேற்கிறோம்.ஆக்கிரமிப்பாளர் பெயரையும் அறிவிக்க வேண்டும். அரசியல்வாதிகள் பிடியில் உள்ள பல கோவில்களின் நிலங்களை மீட்க வேண்டும்.தமிழில் அர்ச்சனை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது; அதே சமயம் ஆகம விதிகளில், தலையிடக் கூடாது. தி.மு.க., அரசு மதச்சார்பற்ற அரசாக இருந்தால், சர்ச், மசூதி இடங்களையும் கையகப்படுத்தி, அங்கும் தமிழ் வழியில் வழிபாடு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.