பதிவு செய்த நாள்
25
ஜூன்
2021
09:06
சென்னை : சமூக நலத்துறை அலட்சியத்தால், மகளிர் விடுதி கட்டுவதில் 20.54 கோடி ரூபாய் கூடுதல் செலவாவதும், வடபழநி ஆண்டவர் கோவில் நிலம் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதும், மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது.
சமூக நலத்துறை சார்பில், பணிபுரியும் மகளிருக்கான விடுதி கட்ட, வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான 5.46 ஏக்கர் நிலத்தை, மாநில மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மாதம் 1 லட்சம் ரூபாய் குத்தகைக்கு எடுத்தது.இதற்காக தமிழக அரசு, 2008ல் 2 கோடி ரூபாயை விடுவித்தது. பின், தமிழக காவலர் வீட்டு வசதி கழகம், 60 படுக்கைகளுக்கான கட்டடத்தை 2.47 கோடி ரூபாய் செலவில், 31 மாதங்களுக்குப் பின் கட்டித் தந்தது.
கடந்த 2010ல் பணி முடிந்த விடுதி, 2013 பிப்ரவரியில் தான் செயல்படத் துவங்கியது. இதற்காக, மத்திய அரசின் பங்காக 6.61 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டு, 4.96 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உடனடியாக, 2.48 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. அதாவது, 500 பெண்களுக்கான விடுதிக்கு பதில், 60 பேர் தங்கும் கட்டடம் மட்டுமே கட்டப்பட்டது. மீதமுள்ளோருக்கான கட்டடம் கட்ட தாமதம் ஆனதால், 10.52 கோடி ரூபாயில் முடிய வேண்டிய செலவு, 31.06 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளிக்காததால், கட்டடம் கட்டப்படவில்லை. அதேநேரம், 5.46 ஏக்கர் கோவில் நிலத்தில், 17 ஆயிரத்து 632 சதுரடி மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், முழு நிலத்துக்காக ஒவ்வொரு மாதமும், 1 லட்சம் ரூபாய் வீதம், 1.05 கோடி ரூபாய் குத்தகையாக செலுத்தப்பட்டது. அதேநேரம், பயன்படுத்தாத நிலத்தை தனியார் ஆக்கிரமித்து, வாகன நிறுத்தமாக பயன்படுத்தினர். தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற, சமூக நலத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு தாமதமாய் விடுதி கட்டியது, போதிய ஆட்களை தங்க வைக்காதது, மத்திய அரசு மானியத்தை முறையாக பயன்படுத்தாதது உள்ளிட்ட அலட்சியங்களால், சமூக நலத்துறைக்கு 20.54 கோடி ரூபாய்க்கு செலவு அதிகரித்தது. இது, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட, மத்திய கணக்கு தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.