பதிவு செய்த நாள்
25
ஜூன்
2021
09:06
ஹிந்து கோவில்களில் எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்; பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என, தி.மு.க., அரசு கருதுகிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கையும் எடுக்க துவங்கி உள்ளது. பெரும்பான்மையான ஹிந்துக்கள், வழக்கம்போல இது குறித்து கருத்து எதையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், ஹிந்து மத பாரம்பரியங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என கருதுகிற பெரியவர்கள், அரசின் முன்னெடுப்பு குறித்து, கவலை அடைந்து இருக்கின்றனர்.
கால மாற்றத்துக்கு ஏற்ப, மத ரீதியான நடைமுறைகளிலும் மாற்றம் ஏற்படுத்துவது தவறா என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டோம். அவர்கள் அளித்த பதில்களின் தொகுப்பு இங்கே: சைவத்தின் பெருமை, பழமையை எடுத்து கூறுவது சைவ ஆகமங்கள். ஹிந்து சமயத்திற்கு அடிப்படையாக அமைந்தவை வேதங்கள். ஆகமங்கள் என்ன கூறுகின்றன என்பதை ஒவ்வொரு சைவரும் அறிந்திருக்க வேண்டும். ஆனால், வேதத்தை பாதுகாத்த அளவிற்கு, ஆகமத்தை பாதுகாக்க சைவர்கள் தவறிவிட்டனர்.
பரம சிவ வடிவமான, பூமி முதல் நாதம் வரையான 36 தத்துவங்களை சிவ ஆகமங்கள் விவரிக்கின்றன. உடலால் செய்யும் இறைப்பணியான சரியை; உள்ளத்தாலும், புறத்தாலும் செய்யும் இறைப்பணியான கிரியை; இறைவன் எனும் ஒன்றையே ஒருமுகப்படுத்தி செய்யும் யோகம்; ஞானம் என, நான்கு பகுதிகளை ஆகமங்கள் கொண்டுஉள்ளன. எனில், நான்கு பாகங்களையும் கொண்ட முழுமையான ஆகமங்கள் கிடைக்கவில்லை.
ஆகமம்: ஆ -- பசு; கமம் -- கட்டுப்படுத்துவது. ஆனால், பசுவை கட்டுப்படுத்துவதாக பொருள் வராது. பசு தொழுவத்தில் கட்டப்பட்டு இருக்கும். அதே போல் உயிரானது உடலோடு கட்டப்பட்டிருக்கும். அத்தகைய உயிரை கட்டுப்படுத்தி பரம்பொருளை உணரச் செய்வதே ஆகமம். ஆகமம் தமிழ் வார்த்தை. வேதம் எனவும் கூறலாம். கோவிலில் எது சரி, எது கூடாது, எது மனிதனுக்கு உகந்தது, எது தீமை பயக்கும் என்பதை கற்றுக் கொடுப்பதே ஆகமம்.
சைவ ஆகமங்கள்: சைவ ஆகமங்கள் சிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், சிவாலயம் அமைக்கும் விதம், பூஜை முறைகள், அபிஷேகம், அலங்கார கொள்கைகளையும் விளக்குகின்ற நுால்கள். சிவாச்சாரியார்களை தேர்ந்தெடுத்தல் முதல் அனைத்தும் இதில் அடங்கும்.சிவபெருமானின் சதாசிவ அம்சத்திலிருந்து வெளிப்பட்ட ஆகமங்கள், திருவடியான காமிகம் முதல் வஸ்திரமான வாதுளம் வரை, 28 ஆகமங்கள் இருந்தன. அவை, சிவ பேதம், ருத்ர பேதம் என பிரிக்கப்படுகின்றன. ஆகமத்தில் நகர நிர்வாகம், தனி மனித ஒழுக்கம், வானவியல் சாஸ்திரம், கட்டட நிர்மாணம், ரசாயன சாஸ்திரம் போன்ற விஷயங்கள் இருக்கின்றன.
வைணவ ஆகமங்கள்: வைணவ வழிபாட்டு முறைகள், இரண்டு ஆகமங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அவை வைகானசம், பாஞ்ச ராத்திரம். வைகானச ஆகமம் தொன்மையானது. இதை பின்பற்றுவோர் வைகானசர். இவர்கள் மூலவர் சிலையை தொடும் உரிமை உடையவர்கள். வைகானச ஆகம விதிகள், பிராமணகளின் சடங்குகளை நிர்ணயிக்கின்றன. பாஞ்சராத்ர ஆகமம் ரிஷிகளால் உபதேசிக்கப்பட்டது. அதில் மந்திரங்கள், தந்திரங்கள், முத்திரைகள், கிரியை இடம் பெறுகின்றன. துாப தீபம் காட்டுவதிலும் வரிசை முறை வேறுபடுகிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம் பாஞ்ச ராத்ர நெறியை ஏற்றுள்ளது.ஆ கமங்கள் ஜாதி சார்ந்தவை அல்ல. பிராமணர்கள் யாரும் சிவாச்சாரியார், பட்டாச்சாரியார் குடும்பத்தோடு சம்பந்தம் செய்ய மாட்டார்கள். அவர்களும் பிராமணர் இல்லத்தில் கை நனைப்பது இல்லை.
சிவாகமம்: சிவாச்சாரியாரும், பட்டாச்சாரியாரும், பூணுால் அணியும் சடங்கான உப நயனம் செய்வதால் மட்டுமே பிராமணர் ஆகின்றனர்.இந்த சடங்கு போதயன ரிஷியால் அருளப்பட்டது. இதில் சம்ஸ்காரம் என்கிற சுத்திகரிப்பு செய்வதால், பிராமணர்கள் சிவாச்சாரியாரிடம் சிவ தீட்சையும், பட்டாச்சாரியாரிடம் வைணவ தீட்சையும் பெற்று, அஞ்ஞானத்தை அழிக்கின்றனர். ஆனால், ஆகம தீட்சை கொடுப்பதற்கோ, பெறுவதற்கோ யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது.
சிவாகம தீட்சையை சிவாச்சாரியார் அல்லாத யாருக்கும் கொடுக்க கூடாது என்கிறது சைவ ஆகமம். பாஞ்ச ராத்ர தீட்சை பெற்ற பிராமணர், கருவறையான கர்ப்பகிரஹத்திற்கு செல்லலாமே தவிர, சுவாமியை தொடவே கூடாது. எல்லா ஹிந்துக்களும் வைணவர் ஆகலாம். ஆனால், நிஷேகாதி சம்ஸ்காரம் உடையவர்கள் மட்டுமே பட்டாச்சாரியார் ஆக முடியும். ஆகம கல்வி யாரும் கற்கலாம். ஆனால், பல ஆண்டுகள் கற்றாலும், எவரும் ஆகம ரீதியில் அமைக்கப்பட்ட கோவில்களில் அர்ச்சகர் ஆக முடியாது. வேத ஆகம கல்வி கற்றோர் அர்ச்சகர் ஆவது செல்லாது என, உச்ச நீதிமன்றமும் தீர்ப்புஅளித்துள்ளது.
அதே போன்று, பாஞ்சராத்ர ஆகம தீட்சை பெற்றவர்கள் சுவாமியை தீண்ட தகுதி கிடையாது.கர்ப்பகிரஹத்தில் மற்ற வேலைகள் மட்டுமே செய்யலாம். வேதம் கற்றாலும் சரி, ஆகமம் கற்றாலும் சரி, ஒரு பிராமணர் அர்ச்சகர் அல்லது பட்டாச்சாரியார் ஆக முடியாது. வைகானச ஆகமத்தை பின்பற்றும் வைணவ கோவில்களில், வைகானச ஆகமத்தை கற்றறிந்தவர்களும், பாஞ்சாராத்ர ஆகமத்தை பின்பற்றுகிற வைணவ கோயில்களில் பாஞ்ச ராத்ரிகளும், சைவ ஆகமத்தை பின்பற்றுகின்ற கோவில்களில் சிவாச்சாரியர்களும் மட்டுமே பூஜை செய்ய முடியும்.
மத உரிமை: சைவ ஆகம கோவில்களில் வைணவ அர்ச்சகர்களுக்கோ, வைணவ கோயில்களில் சிவாச்சாரியர்களுக்கோ உரிமை கிடையாது. உச்ச நீதிமன்றம் இதை சுட்டிக் காட்டி, இது அந்தந்த குடிக்கு, அதாவது மத உட்பிரிவுக்கு உள்ள உரிமை; இதில் அரசு தலையிட முடியாது என்று, இந்திய அரசியல் அமைப்பு சட்ட 16 (5) பிரிவு சொல்வதை சுட்டிக் காட்டியுள்ளது. சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோர், பிறப்பால் மட்டுமே அவரவருக்கு உரிய சலுகைகளை பெறுகின்றனர்.
அதே போல ஒரு குடியில் பிறந்தவர்களுக்கே ஆலய நிர்வாக உரிமைகள் உள்ளன என்பதை, அரசியலமைப்பு சட்டம் ஒப்புக் கொண்டுள்ளது.ஒரு மதத்தை சார்ந்தவர், இன்னொரு மதத்தின் நுால்களையும், விதிகளையும் படித்து தேர்ந்து விட்டார் என்பதற்காக, அவரை வேற்று மத கோவில்களில் பொறுப்பாளராக நியமிக்க முடியுமா? எனவே தான், அந்தந்த மதத்தின் ஆகமங்கள், அதாவது கோவில் நிர்வாக விதிகள் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படலாம்; அந்த உரிமையில் அரசு தலையிடக் கூடாது என கோர்ட் கூறியுள்ளது.