ஈரோடு: ஈரோடு, கோட்டையில் சயன கோலத்தில் எழுந்தருளியிருக்கும் கஸ்தூரி அரங்கநாதர் கோவில் மூலவர் சிலை, சுதை மண்ணாலனாது அபிஷேகம் கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறை தைலகாப்பு மட்டும் செய்யப்படுகிறது.
இந்தாண்டு தைல காப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கான மூலிகை, நறுமண பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் ஏறகனவே காய்ச்சி எடுத்து வைக்கப்பட்டிருந்தது. ஆனி கேட்டை நட்சத்திரமான நேற்று, மூலவர் திருமேனிக்கு தைல காப்பு செய்யப்பட்டது. முன்னதாக அதிகாலையில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, சிறப்பு ஹோமம் நடந்தது. இதையடுத்து உற்சவருக்கு திருமஞ்சனம், மூலவருக்கு தைலம் சாற்றுமறை செய்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருவாராதனம் சாற்று முறையும், ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத கஸ்தூரி அரங்கநாதர் உற்சவர் மூலஸ்தானம் சேருதல் நிகழ்ச்சியும் நடந்தது. அடுத்த, 48 நாட்கள் தைல காப்பின் கதகதப்பில் இருப்பார். அந்த, 48 நாட்களும் மூலவரின் பாதம் மற்றும் சிரசம், தவிர திருமேனியை தரிசனம் செய்ய முடியாது. மூலவர் சன்னதியில் இருந்து உற்சவர் அருள் பாலிப்பார். பட்டு திரையால் மூலவர் திருமேனி மறைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கோவில் பட்டாச்சாரியார்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.