பதிவு செய்த நாள்
25
ஜூன்
2021
03:06
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கள் குலதெய்வம் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பிரபு நேற்று கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டம், மாடப்பள்ளியிலுள்ள திரவுபதி அம்மன் கோவிலில் பழமையான சிலை ஒன்று உள்ளது. அதை ஆய்வு செய்ததில், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கள் குலதெய்வமான, நிசும்பசூதனி என்பது தெரியவந்தது. இதை வழிபட்ட பின்னரே, சோழ மன்னர்கள், ஒவ்வொரு போருக்கும் சென்றனர். அவ்வாறு சென்ற போர்களில் வெற்றி பெற்றுள்ளனர். தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனியை குலதெய்வமாக வழிபட்டனர். இச்சிலை மூன்று அடி உயரத்தில், எட்டு கரங்களுடன் சிம்ம வாகனத்தில் காணப்படுகிறது. வலது காலை தரையில் ஊற்றி, இடது காலை நிசும்பன் அசுரனின் உடல் மீது அழுத்தியபடி, சூலத்தால் குத்தியபடி காட்சியளிக்கிறார். காதுகளில் பிரேத குண்டலத்தை அணிகலமான கொண்டிருக்கிறார். எட்டு கரங்களில் சூலம், கேடயம், வாள், வில், அம்பு, கபாலம், மணியை தாங்கியவாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நிசும்பன் என்ற அரக்கனை வதம் செய்ததால் நிசும்பசூதனி என அழைக்கப்படுகிறார். மாடப்பள்ளி அருகேயுள்ள மடவாளத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அங்கநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இதனால், அப்பகுதியில் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.