திருப்பதி கோவிலுக்கு மாங்காய் பூட்டு திண்டுக்கல்லில் தயாரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2021 03:06
திண்டுக்கல்: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திண்டுக்கல்லில் இருந்து, 5 கிலோ எடையில் மெகா சைஸ் மாங்காய் பூட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் என்றாலே பூட்டு தான். பூட்டுக்களில் முதன் முதலில் லிவர் என்பதை அறிமுகப்படுத்திய பெருமை திண்டுக்கல் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம். மாங்காய் பூட்டு, மணி பூட்டு, தொட்டி பூட்டு என தினுசு தினுசாக திண்டுக்கல்லில் பூட்டுகள் தயார் செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி பெரிய பெரிய கதவுகள் கொண்ட பல்வேறு கோவில்களில் திண்டுக்கல்லில் தயாரித்த பூட்டுகளே இன்று வரை பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்காக, 5 கிலோ எடையில், 6 இன்ச் அளவில் தலா, 2 மாங்காய் பூட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு பூட்டின் விலை, 10 ஆயிரம் ரூபாய். பூட்டு தயாரிப்பாளர் முருகேசன் கூறியதாவது: கடந்த, 43 ஆண்டுகளாக பூட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். இயந்திர பயன்பாடு இல்லாமல், பாரம்பரிய முறையில் மனிதர்களை கொண்டே பூட்டு தயார் செய்கிறேன். தமிழகம் முழுதும் பல கோவில்களுக்கு பூட்டு தயார் செய்துள்ளேன். தற்போது திருப்பதி கோவிலுக்காக மாங்காய் பூட்டு தயாரித்துள்ளேன். பூட்டு தயாரிக்க, 5 நாட்களானது. முழுதும் பித்தளையில் செய்யப்பட்டுள்ளது. நலிவடைந்து வரும் பூட்டு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.